December 8, 2021

டி 20 உலக கோப்பை 2021 போட்டியில் இந்திய அணி வெளியேறுகிறது!

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறி உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து அணி உறுதி செய்தது. இந்தியா இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வி இந்தியாவை தொடரை விட்டு வெளியேற்றி உள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதன் காரணமாக இந்திய ரசிகர்களும் இந்த போட்டியை ஆவலுடன் பார்த்து வந்தனர். டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். நஜிபுல்லா மட்டும் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 73 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன்கள் அடிக்க தவறியதால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கோப்பையை வெல்லும் முதன்மையான அணிகளில் ஒன்றாக இருந்தது இந்தியா. ஆனால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தோல்வி இந்தியாவை தொடரை விட்டே வெளியேற்றி உள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிகளில் விளையாடுகின்றன.