மனிதனாக அடையாளப்படுத்திய முதல்வருக்கு நன்றி – அஸ்வினி நெகிழ்ச்சி!- வீடியோ

மனிதனாக அடையாளப்படுத்திய முதல்வருக்கு நன்றி – அஸ்வினி நெகிழ்ச்சி!- வீடியோ

செங்கல்பட்டு மாவட்டம், மாமமல்லபுரம் பூஞ்சேரி அருகே 81 பழங்குடியின குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் பழங்குடியினர், நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இப்பகுதியில் இருக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று போராடிவந்தனர். இந்நிலையில், இன்று அங்குள்ள 81 குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார். மேலும், அவர்களுக்கு பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் இருளர் ஆகிய சாதி சான்றிதழ்களையும் வழங்கினார். இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி திட்டம் மற்றும் கடன் உதவியும் வழங்கப்பட்டது. அதேபோல், அந்த மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அங்கன்வாடி மற்றும் வகுப்பறைகள் கட்டித்தருவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் அடிப்படை வசதியான, சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றையும் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்.

அண்மையில், கோயில் அன்னதானத்தில் இருக்கை மறுக்கப்பட்டு,அதுகுறித்து அஸ்வினி பேசிய வீடியோ பெரும் வைரலானது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவருடன் அமர்ந்து கோயில் அன்னதானத்தைச் சாப்பிட்டார். இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் உள்ள 81 பழங்குடியினர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய 81 குடும்பத்தில் அஸ்வினியின் குடும்பம் ஒன்று. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் முன்னிலையில் அஸ்வினி மேடையில் பேசினார்.

அப்போது அவர், “இப்போது வரையில் எங்கள் மக்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தனர். ஆனால், தற்போது முதலமைச்சரால் எங்களுக்கு, ரேஷன் அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்து ஆதாரங்களும் கிடைத்துவிட்டது. இதற்கு முதலமைச்சருக்கு நன்றி. இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்திருந்தாலும், எங்களுக்கு இந்த பட்டா கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ரேஷன் அட்டைக்கு நான்கு மாதங்கள் நடக்கவேண்டியிருக்கும். ஆனால், முதலமைச்சரால் எங்களுக்கு இரண்டே நாட்களில் அதுவும் முதலமைச்சர் கையாலேயே கிடைத்துள்ளது. இதுவரை மனிதனாக எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தோம். தற்போது, பட்டா, ரேஷன் அட்டை என அனைத்து கிடைத்ததால், மனிதனாக அடையாளப்படுவோம். இதுவெல்லாவற்றுக்கும் முதலமைச்சருக்குத்தான் நன்றி.

எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த இடமும் (இருக்குமிடம்) எங்களுக்கு இருக்குமா என எங்க பசங்க பயந்து பயந்து வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. ஆனால், இப்போ அந்த பயம் இல்லை. முதலமைச்சரால், நாங்கள் அங்கு வசிப்போம். தற்போது கொடுக்கப்பட்டுள்ள பட்டா, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ் மூலமா எங்க பசங்க படிப்பாங்க. ஒரு பத்தாவது வர படிச்சாக்கூட அவங்களுக்கு ஒரு வேலை கிடைச்சிடும்” என்று தனது வெள்ளந்தி வார்த்தைகளால் எதார்த்தத்தைப் பேசினார். அதனைத் தொடர்ந்தே பூஞ்சேரி பகுதியில் பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள அஸ்வினி வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் அந்த பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் இன மக்கள் குடியிருப்புகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூஞ்சேரி நரிக்குறவர், இருளர் மக்கள் நன்றி தெரிவித்தனர். பாசிமலை, சால்வை அணிவித்து தங்களது நன்றியை முதல்வருக்கு நரிக்குறவர், இருளர் மக்கள் கூறினார்.

error: Content is protected !!