January 30, 2023

இயற்கை முன் எந்த கணக்கும் செல்லாது..! எச்சரிக்கையோடு வாழ்வோம்..!

ன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானதை தொடர்ந்து மாரடைப்பை தவிர்ப்பது எப்படி என ஏகப்பட்ட அறிவுரைகள்! இவ்வளவு தான்டா வாழ்க்கை என சலிப்புகள்.. நிஜ வாழ்வில் இதுபோன்ற தத்துவத்துடன் கூடிய சலிப்பை மயானத்தில் அடக்கத்தின் போதோ தகனத்தின் போதோ பலர் சொல்வதை கேட்கலாம். உங்களில் பலரும் சொல்லி இருக்கலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு நமக்கு பைபாஸ் சர்ஜரி செய்து உடல்நலம் தேறி முடித்ததும் டிஸ்சார்ஜ் கட்டத்தில் டாக்டர் தரப்பில் ஏகப்பட்ட கவுன்சிலிங்கும் அட்வைஸும்.. திருப்பி நாம பதிலுக்கு டாக்டருக்கே யதார்த்த வாழ்க்கையின் நடைமுறைகளை சொல்ல அந்த இடத்தின் சூழலே மாறிப்போய் விட்டது.

” டாக்டர் இங்கே நான் பத்து நாள் மருத்துவமனையில் இருந்தபோது இரு விஷயங்களை கவனித்தேன். காலையில் வந்ததும் நாலைந்து பேரை கிழித்து ஆபரேஷன் செய்து விட்டு மதியம் சாப்பிட போய் விடுகிறீர்கள். பிறகு வந்து மீண்டும் ஆபரேஷனில் இறங்கி விடுகிறீர்கள். ஆபரேஷனின் போது ரத்தமும் கொழகொழவென இருக்கும் உடல் உறுப்புகளையும் பார்த்து பார்த்து சலித்துப் போய், மனம் ஒரு நிலையை எட்டாவிட்டால் உணவை உங்களால் திருப்தியாக உண்ணவே முடியாது. ஒருநாள் மதியம் இதயத்துடிப்பு நின்றுவிட்ட சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட அரைமணிநேரம் போராடினீர்கள். அதுவும் சாப்பிடப் போன நிலையில், அவசர மணி அடிக்கவே சிறுவனின் அறைக்கு ஓடி வந்தீர்கள். எவ்வளவோ முயற்சித்தும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.உறவினர்களின் அழுகுரலுக்கு மத்தியில், நீங்கள் சக டாக்டர்களிடம் போய் சாப்பிட்டு வந்துவிடுகிறேன் அடுத்த ஆபரேஷனுக்கு தயாராக இருங்கள் என்று கூலாக சொல்லிவிட்டு போய் விட்டீர்கள்.மாண்ட சிறுவனுக்காக வேதனைப் படுவதைவிட அடுத்த உயிர்களை காப்பாற்றுவதில் உங்களுக்கு உள்ள அக்கறை புரிந்தது.

மீடியா உலகில் உள்ள எங்களுக்கும் ஏறக்குறைய இதே மாதிரி நிலைதான் எத்தனையோ துக்கச் செய்திகள்.. அதையெல்லாம் கேட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அடுத்து என்ன செய்வது என்பதில்தான் எங்கள் புத்தி போகும். ஒரு திருமண கோஷ்டியில் பத்து பேர் பலியாகிவிட்டனர். ஒன்பது மணிக்கு சாப்பிட வேண்டிய சப்பாத்தியுடன் கூடிய சிக்கனை, நள்ளிரவில் சாப்பிட்டுக் கொண்டே அந்த செய்தியை எங்கெங்கெல்லாம் கவர் செய்ய வேண்டுமென்று ஏரியா செய்தியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தேன்.

அலுவலகத்தை விட்டு வெளியே இருக்கும் போது உறவினர்கள் தொடர்பான விபத்து என்றால் உடனே, பெரும் பதற்றத்திற்கு ஆளாகி யாருக்கும் ஒன்றும் இல்லையே? எல்லோரும் சேஃப் தானே என்று கேட்போம். இதே செய்தி அறைக்கு வரும் ஒரு விபத்து செய்தி என்றால், எத்தனை பேர் பலி என்றுதான் எங்களுடைய புத்தி கேட்குமே தவிர எத்தனை பேர் பிழைத்தார்கள் என்று கேட்கவே கேட்காது.. பச்சையாக சொன்னால் தலையில் அடித்துக் கொள்ள வேண்டிய மோசமான மனநிலை.

இங்கு அட்மிட் ஆவதற்கு முன்பு ஒரு பரிதாபகரமான செய்தியை போட்டது நினைவிற்கு வருகிறது. ஆந்திராவிலிருந்து வந்து சென்னையின் Bcdfhhtffff மருத்துவமனையில் அட்மிட் ஆகி கிட்டத்தட்ட 30 நாளில் 45 லட்ச ரூபாய் செலவு செய்து ஒரு இளைஞன் உயிர் பிழைத்தார். வீட்டுக்கு அழைத்துச் செல்ல குடும்பமே ஆசையோடு சென்னை வந்து அவரை காரில் ஏற்றிக் கொண்டு போனது. கிளம்பிய 2 மணி நேரத்தில் சாலை விபத்தில் இளைஞன் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருமே ஸ்பாட் பலி.. இந்தக் கொடுமையையெல்லாம் என்னவென்று விவரிப்பது?

டாக்டர்களின் அறிவுரையை நோயாளிகள் கட்டாயம் ஏற்கத்தான் வேண்டும்.. தெனாவட்டாக பேசி திமிர் பிடித்து அலையக் கூடாது. அதே நேரத்தில் இப்படியெல்லாம் செய்யாவிட்டால் உடனே போய் சேர்ந்து விடுவோமோ என்று பயந்து பயந்தும் சாகக்கூடாது. கணக்கெல்லாம் போட்டு அட்சர சுத்தமாக நம்முடைய ஆயுளை நாம் தீர்மானித்துவிடவே முடியாது..!நம்மை இந்த உலகிற்கு அனுப்பி வைத்த இயற்கை முன் எந்த கணக்கும் செல்லாது..! எச்சரிக்கையோடு வாழ்வோம்.. அதே நேரத்தில் எதுவும் நம் கையில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு வாழ்வோம்… இவ்ளோதான் டாக்டர் என் பாலிசி..”

பெரும் தொகையுடன் கூடிய சம்பளம் விரைவில் ஏகப்பட்ட டென்ஷனை ஏற்படுத்தி நம்மை அடியோடு காலி செய்து விடும் என்பதால்,அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இங்கே வந்து கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை ஜாலியாக போட்டு காலம் தள்ளி வருகிறோம்..தினமும் சாப்பிடுவதற்கு தேவையான பொருளாதாரத்தை தாண்டி பெரிய அளவில் யோசிப்பதில்லை.. குடும்பம் குட்டி அமையாமல் போனதும் இதற்கு ஒரு பக்க பலமாக இருக்கலாம்.

தூங்கி எழுந்து உயிரோடு இருந்தால் பார்த்துக்கொள்ளலாம்..

நம்ம வாத்தியாருடைய இதயக்கனி படத்தோட இங்கிலீஷ் பாட்டு வரி..
Yesterday is gone away
tomorrow is an other day..!

ஏழுமலை வெங்கடேசன்