January 30, 2023

சர்ச்சை ஆன முல்லைப்பெரியாறு அணை!

முல்லைப்பெரியாறு அணைக்கு ஒரு பிரச்சனை என்றால், அது தேனியின் பிரச்சனை போல எல்லோரும் நினைக்கிறார்கள். நானும் ஐந்து வருடத்திற்கு முன்பு அப்படித்தான் நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் மதுரை.! வைகை ஆற்று தண்ணீர் எங்கிருந்து வருது’னு நம்ம ஊர் மக்களிடம் கேட்டால், வைகை அணையில் இருந்து வருதுனு சட்டுனு சொல்வோம். வைகை அணைக்கு எங்க இருந்து தண்ணீர் வருதுனு அடுத்த கேள்வி கேட்டால், விவரம் தெரிந்தவர்கள், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் மூலவைகையில் இருந்து தண்ணீர் வருது’னு சொல்வாங்க. அப்படியா? உங்க விவரத்துல தீய வைக்க…!

வருசத்துக்கு இரண்டு முறை மட்டுமே மூலவைகையில் தண்ணீர் வரும். பருவமழை தவறினால், அதுவும் இல்ல. 1860 காலகட்டத்துல தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கடுமையான வறட்சி, பஞ்சம். மூலவைகை வறண்டு கிடக்குது. மக்கள் சாப்பாடு இல்லாம கொத்து கொத்தா செத்துப்போறாங்க. இதைப் பாத்த பிரிட்டிஷ்காரன், புதுசா ஒரு அணை கட்ட பிளான் போடுறான். எஞ்சினியர் பென்னிகுவிக் கிட்ட பொறுப்பு கொடுக்கப்படுது. மேற்குத்தொடர்ச்சி மலை முழுக்க ஆய்வு நடக்குது. மலையில் உருவாகும் தண்ணீர், விவசாயம் பெரிதாக நடக்காத கேரளாவின் பகுதி வழியா சென்று, வீணாக கடலில் கலப்பதை பார்க்கிறார் அந்த மனிதர். ‘அடடா… இந்த தண்ணீர் இருந்தால் தென் தமிழகமே செழுமையா இருக்குமேனு’ நினைக்கிறார். மலைகளுக்கு நடுவே ஒடும் அந்த தண்ணீரை மறித்து ஒரு அணையை கட்டுறார். அது தான் முல்லைப்பெரியாறு அணை. அணை கட்டியாச்சு. அப்புறம் என்ன தண்ணிய திறந்துவிடவேண்டியது தான… !

அங்க தான் ஒரு சிக்கல். அணை இருக்குறது கேரளா பக்கம். ஆனா தண்ணீர், மலையின் இந்த பக்கம் இருக்குற நமக்கு வேணும். அதுக்கும் ஒரு வழியை கண்டுபிடிக்கிறார் பென்னிகுவிக். மலையை குடைந்து குகை அமைத்து அணையில் இருந்து தண்ணீர் எடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் வரை தண்ணீர் கொடுக்கிறார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் பஞ்சமோ, வறட்சியோ இல்ல. மத்த மாவட்டத்துகாரங்களுக்கும் சேர்த்து, 125 வருசமா பென்னிக்குவிக் மனுசன சாமியா கும்பிடுறாங்க தேனி மக்கள்.

சரி ரைட்டு. ஆத்துல தண்ணீ வருது, அள்ளிக்குடிக்குறோம், தவ்விக் குளிக்குறோம். இப்ப எதுக்கு இந்த கதையெல்லாம்னு கேட்குறீங்களா? இந்தா சொல்றேன்.

‘அணை பலமா இல்லை, அணை உடைஞ்சு தண்ணீர்ல மூழ்கி நாங்க சாகப்போறோம்னு’ மலையாளி ஒரு பிரச்சனையை உருவாக்குனான். உள்நாடு, வெளிநாடு’னு எல்லா நாட்டுக்கார பொறியியல் வல்லுனர்களையும் கூப்டு, முல்லைப்பெரியாறு அணையை சோதனை பண்ணா, ‘அணை பலமா இருக்கு’னு எல்லாரும் சொல்லிட்டு போயிட்டானுங்க. அப்புறமும் அணை உடையப்போதுனு கேரளாவில் புரளி, பிரச்சனை. உடனே, தமிழ்நாடு அரசு கோடிகளில் செலவு செஞ்சு, பலமா இருக்குற அணையை மேலும் பலப்படுத்தியது. “அணை நல்லா இருக்கு சாமி… அமைதியா இருங்க. இந்த தண்ணிய வச்சு தான் மதுரையே மூச்சுவிடுது’னு சொல்லிட்டு வந்துட்டோம்.

அப்புறமும் விட்டானா மலையாளி… ‘அணையை உடைப்பேன்னு’ வந்தான். ‘எங்க உடைச்சுப்பாருனு’ தேனி மக்கள் எந்திருச்சு நின்னாங்க. பெரும் போராட்டம் வெடிச்சது. பயந்து ஒழிஞ்சுக்கிட்டான். சரி பிரச்சனை முடிஞ்சதா? ம்ஹும்… எப்ப பாத்தாலும் அணை பலமா இல்ல. உடையப்போதுனு புலம்பிகிட்டே இருந்தான். இவனோட பெரிய தொந்தரவா போச்சுனு நாமலும் அமைதியா இருந்தோம்.

ரெண்டு வருசத்துக்கு முன்னா பெரிய மழையில கேரளா தவிச்சது. நாம கூட, அரிசி, பருப்பு, சோப்பு, சீப்பு, கண்ணாடி’னு வண்டியில ஏத்திகிட்டு அங்க கொண்டுபோய் குடுத்தோமே… அந்த நேரம் தான். அடிச்ச மழையில 152 அடி உயரம் இருக்குற முல்லைப்பெரியாறு அணையும், அது பக்கத்துல இருக்க 554 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையும் நெறஞ்சது.

“அச்சச்சோ… முல்லைப்பெரியாறு அணை நிரம்பிப்போச்சு… உசுருக்கு ஆபத்துனு” சத்தமா கத்துனான் மலையாளி. ஆனா, சத்தமல்லாம இடுக்கி அணையை திறந்துவிட்டது கேரள அரசு. அம்புட்டுப்பெரிய அணையில் இருந்து தண்ணீ தொறந்தா என்ன ஆகும். அதுவரை தண்ணீல நடந்துகிட்ட இருந்தவனுங்க, நீச்சல் அடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. ‘எதுக்குடா இடுக்கி அணையை திறந்தீங்க’னு கேள்வி கேட்டான்… பின்ன கோபம் வராதா… ‘அணையை திறக்கலைனா அணை உடைஞ்சு, கொச்சின் வரைக்கும் காணாம போயிறும்னு’ பதில் சொல்லுச்சு கேரள அரசு. கப்சிப்புனு நீச்சல் அடிச்சுகிட்டே, அண்ணாந்து பாத்து, ‘முல்லைப்பெரியாறு அணை உடையப்போகுது’னு ஆரம்பிச்சானுங்க.. உண்மையான இடுக்கி அணை ஆபத்தை கூட உணராமல், சின்ன சைஸ் முல்லைப்பெரியாறு அணையை தான் குறி வைச்சானுங்க.

ஸ்ஸ்ப்பா… இவங்கள என்ன செய்றதுனே தெரியல… நான் கொடுத்த அரிசி, பருப்ப திரும்ப கொடுடான்’னு கேக்கவா முடியும். போங்கடா பொங்கச்சோறு’னு சொல்லிட்டு நாம நம்ம வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டோம். இப்ப கேரளாவுல மழை கொட்டுது. அணைகள் எல்லாம் நெறஞ்சுகிட்டே வருது. “முல்லைப்பெரியாறு அணை உடையப்போதுனு” பிரச்சனையை ஆரம்பிச்சுட்டான். இதுக்கு கேரள நடிகர் பிரித்திவிராஜ் பய கொம்புசீவி விட, ரெண்டு நாளா டிவிட்டரில், முல்லைப்பெரியாறு அணையை இடிக்கணும்னு டிரெண்ட் பண்ணீட்டானுங்க.

நான் ஒன்னு கேக்குறேன். தமிழ்நாட்டுல இருந்து வாங்குற அரிசி, பருப்பு, முட்டை, எண்ணெய் வேண்டாம்’னு புறக்கணிக்க வேண்டியது தான? அவன் அணையை இடி’னு சொல்றான். இப்பவும் தேனி மக்கள் தான் கொதிக்குறாங்க. மத்த மாவட்டத்துக்காரங்க அமைதியோ அமைதி… மற்ற மாவட்ட விவசாய சங்கங்கள் நிலைமையை புரிஞ்சுகிட்டு கண்டனம் தெரிவிக்க ஆரம்பிச்சுட்டாங்க. போராட்டம்னா தீயா இருக்கும். ஆனா, எதை எதையே பத்தி பேஸ்புக், டிவிட்டர்ல போடுற நம்ம மக்கள் இன்னும் முல்லைப்பெரியாறு பத்தி வாய் திறக்கல.

கடைசியா சொல்லக்கூடாத ஒன்னு சொல்லிட்டு கிளம்புறேன். மூலவைகை, வராகநதி, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி, இத்தன நதிகளை ஒருங்கிணைச்சு வைகை அணையை கட்டினார் காமராஜர். இதுல சின்னசின்ன ஆறுகளும் இருக்கு. முல்லைப்பெரியாறு அணையை மலையாளி உடைச்சுட்டானு வச்சுக்குவோம். ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன். கோபப்படாதீங்க. சுருளி ஆத்துல ஒரு அணைகட்டி கம்பம், பாளையம், சின்னமனூர் வரை பொழச்சுக்கும். கொட்டக்குடி ஆத்துல அணை கட்டி போடிநாயக்கனூரும், தேனி நகர் பகுதியும் பொழச்சுக்கும். மூலவைகையில அணை கட்டி ஆண்டிபட்டி பொழச்சுக்கும். பெரியகுளத்துக்கு சோத்துப்பாறை அணையும், மஞ்சளாறு அணையும் ஏற்கனவே இருக்கு. இதுபோக தேனி மாவட்டத்த சுத்தி இருக்க மலைகளில் இருந்து வரும் சின்னச்சின்ன ஓடையில் தடுப்பணை கட்டி எப்படியாச்சும் தேனி மக்கள் பொழச்சுக்குவாங்க.

மத்த மாவட்டத்த கூட விட்டுருவோம். மதுரை என்ன செய்யும்? நம்மல காப்பாத பிரிட்டிஷ்காரன் வரப்போறது இல்ல. பென்னிகுவிக் திரும்ப வரப்போறது இல்ல. “என் ஊர்ல அணை கட்டி தமிழனுக்கு தண்ணீர் கொடுக்கனுமானு” மலையாளி கேக்குறான். தேனிகாரங்க உங்க எல்லாத்துக்கும் சேத்து கத்திக்கிட்டே இருக்காங்க… நீங்க அமைதியோ அமைதி. என்னமோ போங்கப்பா…

எம்.கணேஷ்.