இந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா!

மிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்து, தனக்கு பணத்தை திரும்ப வழங்கும்படி கூறியுள்ளார்.சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை பிரிவில் இந்தியில் கேள்வி கேட்ட நிலையில், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார். இதற்கு அவர்கள் பணம் திரும்ப கிடைக்காது என்றும், இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இந்தியராக இருக்க முடியும் என கேட்டுள்ளனர். மேலும் இந்தியராக இருந்து, எப்படி இந்தியில் பேச முடியாமல் இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை விகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனத்துடனான உரையாடல் ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தருமபுரி எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், சொமாட்டோ நிறுவனத்திடம், இந்தி எப்போது இந்தியாவின் தேசிய மொழி ஆனது என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள் ஏன் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். இதன் எதிரொலியாக Reject Zomato, Boycott Zomato ஆகிய ஹாஷ்டேக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது.

இந்நிலையில், சொமாட்டோ நிறுவனம் தமிழில் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்களது வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துவதாகவும், வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நம்‌ தேசத்தின்‌ கலாச்சாரம் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்‌ காட்டிய ஊழியரை பணிநீக்கம்‌ செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின்‌ உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்‌ பகிரக்கூடாது என தங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாகவும், கோவையில் உள்ளூர் தமிழர் கால் சென்டரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், உணவு மற்றும் மொழி இரண்டும் ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் அடித்தளங்கள் என்பதை புரிந்துள்ளதாகவும், அவை இரண்டையும் தாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் கொஞ்சம் அடங்கிய இப்பிரச்னை தொடர்பாக சொமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது மேலும் விவகாரத்தை கிளப்பியுள்ளது .அதாவது உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் சிறிய பேச்சு தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது.நம் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டாதா எனவும் இதற்கு யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பேச்சு மீண்டும் பூகம்போல் வெடிக்கத்தொடங்கியுள்ளது.