December 7, 2021

வாங்க.. பேசலாம்- அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு!

மீண்டும் அரசியல் லைம் லைட்டுக்குள் வர ஆயத்தமாகும் சசிகலா நேற்று, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதிமுக கொடி கட்டிய காரிலேயே சசிகலா மெரினா சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தின் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். நீண்ட நேரம் இரு கைகளை கூப்பி நின்றவர், மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தினை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்திவிட்டேன். அம்மாவும், தலைவரும் நிச்சயம் அதிமுகவையும் அதன் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள்” என்றார். அதன் தொடர்ச்சியாக இன்று அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை தி-நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார் சசிகலா. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் என கல்வெட்டும் திறக்கப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து சென்னையில் உள்ள இராமாபுரத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த உரையில், “சின்னம்மாவை தரக்குறைவாக பேசினார்கள் என்று கூறி, அவர்களை தரக்குறைவாக பேசியுள்ளீர்கள். அவர்கள் செய்த தவறை நாம் செய்ய கூடாது. உண்மையான தலைவர் வழி வந்த தொண்டர்கள், அடுத்தவர்களை புண்படுத்த வேண்டாம். இனி வரும் நாட்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

எம்.ஜி.ஆர் எப்போதும் சொல்லுவார். நானும் ஒரு தொண்டனே என்று. தொண்டர்கள் நடத்தும் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. “கண்போன போகிலே கால் போகலாமா?” என்று புரட்சித்தலைவர் அன்று பாடினார். அது யாருக்கு பொருந்தும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். புரட்சி தலைவர் விதையாக இருந்தார், அம்மா மழையாக பொழிந்தார். இதனாலேயே கழகம் விருட்சம் ஆனது. இன்று நாம் ஆட்சியில் இருந்திருந்தால், அம்மாவுக்கும், புரட்சி தலைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோதிலும், கழகத்தை ஆட்சிக்கட்டிலில் வைத்துவிட்டுதான் சென்றேன். தேர்தல் காலத்தில் நான் ஒதுங்கியிருந்தது எதனால் என உங்களுக்கு தெரியும். என்னால் அதிமுக இயக்கத்திற்கு எள்ளளவு தீங்கு விழந்துவிடக்கூடாது என ஒதுங்கி இருந்தேன். கழகம் தான் நமது கோவில், அக்கோயிலை நாம் காப்பாற்ற வேண்டும். இந்த நேரத்தில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது.

கழகத்தின் அடி நாதமே தொண்டர்கள் என்று எம்.ஜி.ஆர் கூறினார்., மக்களால் நான் மக்களுக்காக நான் என ஜெயலலிதா கூறினார். இந்த 50 வருடத்தில் அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்காலத்தில் 33 ஆண்டுகள் இருந்துள்ளது. தமிழகத்தின் இரும்புக்கோட்டை இயக்கமாக அதிமுக உள்ளது என்றால் அதற்கு கழகத்தின் இருபெரும் தலைவர்கள், தொண்டர்கள், தமிழக மக்கள் தான் காரணம். மக்கள் நலன் மற்றும் தொண்டர்கள் நலனில் அக்கறை கட்டாவிட்டால் எவ்வுளவு பெரிய பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டும்.

கழகத்துக்காக தொண்டர்களுக்காக மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. இந்நேரத்தில் கழகத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூற வேண்டும். புரட்சி தலைவர் மறைவுக்கு பின்னர் கழகம் பிளவுபட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி கழகத்தை ஒன்றிணைத்தோம். மக்களின் பேராதரவோடு மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது. மீண்டும் நாம் ஒன்றிணைந்து கழக ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும்., கழகம் வென்றாக வேண்டும். வாழ்க., வளர்க அதிமுக” என்று கேட்டுக் கொண்டார்