December 8, 2021

முதலமைச்சர் வருகைக்காக நீதிபதியை சாலையில் காக்க வைத்த போலீஸூக்கு ஐகோர்ட் கண்டனம்!

முதலமைச்சர் வருகைக்காக போக்குவரத்து நிறுத்தி வைத்து, நீதிபதியை சுமார் 25 நிமிடங்கள் காக்க வைத்ததற்காக சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவாஜிகணேசன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வந்ததால் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் காலை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றம் சென்ற போது அங்கு அவரது வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சுமார் 25 நிமிடங்கள் நீதிபதியை தடுத்து வைத்ததற்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் திரு.பிரபாகர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வருத்தம் தெரிவித்தார். இந்த நிகழ்வு தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாக உள்துறை செயலாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அப்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்குங்கள் என உள்துறை செயலாளருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நீதிபதியை பணி செய்ய விடாமல் தடுத்து வைத்தது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.