சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி கோரிய சேலம் சிறுமிக்கு காட் ஃபாதரான ஸ்டாலின்!

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி கோரிய சேலம் சிறுமிக்கு காட் ஃபாதரான ஸ்டாலின்!

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்- ராஜநந்தினி தம்பதியின் மகள் ஜனனி. இவர் அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திடீரென பள்ளியில் மயங்கி விழுந்த ஜனனி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் ஜனனி இருப்பதையும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தந்தை விஜயகுமாருக்கு வேலையிழப்பு ஏற்பட்டவுடன் மருத்துவ சிகிச்சைகளை சமாளிக்க முடியாமல் மகளையும் மனைவியையும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனது ஒரே மகளின் உயிரை காக்க மகளுடன் சேர்ந்து முதல்வருக்கு ராஜநந்தினி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இந்த வீடியோ வைரலாகி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை தொடர்பு கொண்ட முதல்வர், சேலம் சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக அளிக்குமாறு உத்தரவிட்டார். உடனே ராஜநந்தினியை போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்தார். அதன்படி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் ஜனனி சேர்க்கப்பட்டார். இன்று காலை சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், நீ கவலைப்படாத தைரியமா இரும்மா, நான் இருக்கிறேன், எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் சிறுமியை நேரில் சந்திக்குமாறு அமைச்சர் சுப்பிரமணியனுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேரில் வந்த அமைச்சர், மருத்துவர்களிடம் சிறுமியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் தரமான சிகிச்சையை குழந்தைக்கு அளிக்குமாறும் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

இதை எல்லாம் தாண்டி சற்று எதிர்பாராத நிலையில் முதல்வர் நேராக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகை தந்தார். நேராக ஹீமோடயாலிசிஸ் வார்டுக்கு சென்ற அவருக்கு சிறுமியின் தாய் வணக்கம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் தலையை வருடிய முதல்வர் ஸ்டாலின், என்ன படிக்கிறாய் என கேட்டார், அதற்கு சிறுமி 10 ஆம் வகுப்பு என்றார்.

அப்போது மருத்துவர்கள் சிறுமிக்கு ஏற்கெனவே செய்யப்பட்ட சிகிச்சை, மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் விளக்கிக் கொண்டிருந்தனர். உடனே சிறுமியின் தாய் ராஜநந்தினி, முதல்வரின் காலில் விழுந்தார். முதல்வர் எழுந்திருங்கம்மா என்றார். பின்னர் முதல்வருக்கு பின்னால் இருந்த மருத்துவமனை ஊழியர் அவரை தூக்கிவிட்டார்.

கண்ணீருடன் ராஜநந்தினி “என் குழந்தை கஷ்டப்படுவதை பார்க்க என்னால் முடியலை சார்” என கதறினார். முதல்வர், அவருக்கு தைரியம் கூறி, எல்லாவற்றையும் மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தைரியமாக இருங்கள், கவலைப்படாமல் இருங்கள் என கூறிவிட்டு சிறுமியிடமும் தைரியமாக இருக்குமாறு தெரிவித்தார். திடீரென முதல்வர் வந்ததை சற்று எதிர்பாராத ராஜநந்தினியும் ஜனனியும் நெகிழ்ச்சியடைந்தனர்.

error: Content is protected !!