டெல்லி கோர்ட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ரவுடிகள் பலி! – வீடியோ!
டெல்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 ரவுடிகள் உயிரிழந்தனர். பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
டெல்லியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் ஜிதேந்தர் கோகி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உட்பட பல வழக்குகள் டெல்லி காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. டெல்லியின் பல்வேறு பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கோகி, மிகப்பெரிய கும்பலுக்கு தலைவனாக இருந்தார். டெல்லியில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் இவரது அனுமதி இல்லாமல் எந்த தொழிலையும், கட்டுமானத்தையும் தொடங்க முடியாது என்ற சூழல் உருவாகி இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜிதேந்தர் கோகி, அதற்கு அடுத்த ஆண்டு சிறையில் இருந்து தப்பினார்.
பின்னர், 2020-ம் ஆண்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போதிலும், தனது ஆட்கள் மூலம் டெல்லியில் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் ஜிதேந்திர கோகியை நேற்று மதியம் 1.15 மணி அளவில் காவல்துறையின் ‘கவுன்ட்டர் இன்டெலிஜென்ஸ்’ பிரிவினர் ஆஜர்படுத்த அழைத்து வந்திருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக வழக்கறிஞர்கள் உடையில் இருந்த 3 பேர், திடீரென கோகியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயமடைந்து கீழே சரிந்தார்.
உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார், அந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி சத்தத்தை கேட்ட நீதிபதிகள், வழிக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் அலறியடித்துக் கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓடினர்.
சுமார் அரை மணிநேரம் நடந்ததுப்பாக்கிச் சண்டையில் எதிர்தரப்பில் இருந்த 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் ஜிதேந்தர் கோகியின் எதிரியான மற்றொரு ரவுடி தில்லு தாஜ்புரியாவின் ஆட்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
படுகாயமடைந்த ஜிதேந்தர் கோகியை போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர்காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில், அதுவும் நீதிமன்றத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார், ரவுடி தில்லு ராஜ்புரியாவை தேடி வருகின்றனர்.
கல்லூரி கால பகை
ரவுடிகள் ஜிதேந்தர் கோகிக்கும் தில்லு ராஜ்புரியாவுக்கும் இடையேபல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இருவரும் டெல்லியில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். 2010-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர் தேர்தலில் தில்லு ராஜ்புரியா போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக கோகியின் நண்பர் ஒருவர் மனுதாக்கல் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தில்லுவும், அவரது கூட்டாளிகளும் கோகியின் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது கோகி பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
அன்று தொடங்கிய பகை, பலஆண்டுகளாக நீடித்து வந்தது. யார் பெரிய ரவுடி என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு, அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பிலும் நடந்த மோதல்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.