March 23, 2023

ஊழியர்கள் அமர இருக்கை கட்டாயம்: பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்!

கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அமர்வதற்கு இருக்கை கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தொழிலாளர் நலநிதிய சட்டத் திருத்த முன் வடிவு தாக்கல் செய்தார் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன். இதனால் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பெரிதும் பயன்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றம் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக்கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்க வேண்டும் என்றே கருதுகிறது.

4-9-2019 அன்று நடைபெற்ற மாநிலத் தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் ஊழியர்களுக்கு இருக்கை வசதி வழங்குவது தொடர்பான ஆலோசனை முன் வைக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது.

எனவே இந்த அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

இவ்வாறு தொழிலாளர் நலநிதிய சட்டத் திருத்த முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் ஜவுளிக் கடைகளில் பணியாற்றுவோர் `உட்காருவதற்கான உரிமை’ என்ற முழக்கத்தோடு போராட்டங்கள் நடத்தியதும், அதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு கேரள மாநில அரசு கேரளா கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கைகளைக் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.