November 29, 2021

ஆப்கானிஸ்தானத்தில் அரசு அமைக்கும் பணியை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைப்பு!

ஆப்கானிஸ்தானத்தில் அரசு அமைக்கும் பணியை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைப்பதாக தலிபான் அமைப்பின் பேச்சாளர் சபியுல்லா முஜாஹித் சனிக்கிழமை (4-9-2021) அன்று அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

தற்போது ஆப்கானிஸ்தானத்தில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் அரசு விரிவானதாக அமைக்க நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. அதனால் அரசு அமைக்கும் பணி தாமதமாகிறது. அடுத்த வாரத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு நிச்சயம் அமைக்கப்படும் என்று முஜாஹித் உறுதி அளித்தார்.புதிய அரசு பற்றிய விபரங்களும் புதிய அரசின் அமைச்சர்கள் யார் யார் என்ற விபரங்களும் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

ஆப்கானிஸ்தானத்தில் விரிவான அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைப்பதற்காக கலீல் ஹக்கானி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அரசு அமைப்பதற்காக தலிபான் அமைப்பு நியமித்த குழுவில் ஹக்கானி உள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.