December 4, 2022

அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு – முழு விபரம்

மிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில், இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது. ஒன்று, தமிழன்; இன்னொன்று, திராவிடம். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான், அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.அப்பேர்பட்ட அயோத்தி தாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் வட சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அது சரி அயோத்தி தாசர் பண்டிதர் யார் தெரியுமோ?

தென்னிந்திய தலித் நினைவுகளில் அயோத்திதாசரின் பிறந்த தேதி, குடும்பம், செயல்பாடு குறித்த மிகச் சரியான தகவல்கள் அதிகம் இல்லை. தற்சமயம், அவரைக் குறித்து சொற்பமாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் நாம் முன்னேறலாம். அயோத்திதாசர் வட தமிழகத்தில், எளிமையான, ஆனால் பரம்பரையாகப் படித்த, பறையர் சமூகத்தில் பிறந்தவர். அவரது தந்தையார், தனது சொந்த ஊரில் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவராகத் திகழ்ந்தார். எனவே தந்தையாரைத் தொடர்ந்து மகனும் அத்தொழிலைச் சிறப்புடன் செய்து வந்தார். சித்த மருத்துவர்கள், அரிதாகக் கிடைக்கக் கூடிய மருத்துவக் குறிப்புகளோடு மட்டுமல்லாமல், இலக்கிய மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகளான ஓலைச் சுவடிகளைத் திரட்டுவதை மிகவும் வாஞ்சையுடன் பரம்பரையாகச் செய்து வந்தனர். இவர்தம் தந்தையார் ஓர் ஆங்கில அதிகாரிக்கு, தமிழ் நீதி நெறி நூலான திருக்குறள் கையெழுத்துப் பிரதியை அன்பளிப்பாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அயோத்திதாசரும் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய தமிழ் இலக்கிய மற்றும் வரலாற்று கையெழுத்துப் பிரதிகளைத் திரட்டி வந்ததுடன் சித்த மருத்துவராகவும் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

பின்னாளில் ‘தமிழன்’ இதழின் நிறுவனரும் , ‘தமிழ்த் தேசியத் தந்தை’யுமான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் சிறப்பு முதலானவை குறித்து தமிழ்ச்சூழலில் வேறு எவரும் பேசுவதற்கு முன்பே பேசியவர். தமிழ் பௌத்த வரலாற்றை மீட்டெடுத்து பௌத்த நோக்கில் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் விளக்கமளித்தவர்.

தமிழ் மக்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்துவரும் திருமணச் சடங்கு, ஈமச் சடங்கு உள்ளிட்டப் பல்வேறு சடங்குகளுக்கும் ; கார்த்திகை தீபம்,பொங்கல், தீபாவளி முதலான பண்டிகைகளுக்கும் பௌத்த நோக்கில் பொருள் கூறியவர். புகழ்பெற்ற சித்த மருத்துவர். 1876ல் நீலகிரியில் ‘அத்வைதானந்தசபை’யையும், 1891ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜனசபை’யை யும் நிறுவியவர்.

தமிழ் இதழியல் வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் துவக்கி நடத்திய தமிழன் வார இதழுக்கு (1907-1914) முக்கியமானதொரு இடம் உண்டு. தனது பத்திரிகையில் பெண்கள் எழுதுவதற்கென தனி ‘பத்தி’ (column) ஒன்றை வெளியிட்டவர் அவர். சுதேசி மற்றும் சுயராச்சிய இயக்கங்களில் கலந்திருந்த சாதித்திமிர், மதத் திமிர்,அறிவுத்திமிர் மற்றும் பணத்திமிர் ஆகிய நான்குவகைத் திமிர்களை அடையாளம் காட்டிய அயோத்திதாசர், அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிட சாதிப்பெருமையைப் புறக்கணிப்பதே முதன்மையானது என வலியுறுத்தினார்.

அடக்குமுறைகளுக்குக் காரணமான சாதிய அமைப்பைக் கண்டித்தார். ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘திருவள்ளுவர் வரலாறு’,’புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி’ உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டார். இத்தகைய அரும்பாடு பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக ஒலித்த அயோத்திதாசர் பண்டிதர் 1914-ம் ஆண்டு மே 5-ம் தேதி காலமானார்.
.