தனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம்! தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்?

தனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம்! தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்?

கோவிட்-19 தொற்று நமது நாட்டின் அனைத்து துறைகளையும் மோசமாக பாதித்துள்ளது. ஆனால், கல்வித்துறை உண்மையில் தன் வருமானத்தை தக்கவைத்துக் கொண்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கல்விமுறைக்கு தங்களை மாற்றிக் கொண்டன. இணைய வழியில் கற்பிப்பதை காரணமாக வைத்து, பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தை வசூலித்துவிட்டன. தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருமளவு பாதிக்கவில்லை. ஆனால் அக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டது. பணி நீக்கம் சம்பள குறைப்பு காரணமாக குடும்பத்தை காப்பாற்ற என்ன வேலை கிடைத்தாலும் சரி என செய்ய வைத்தன.

ஒரு தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பனை ஓலை வெட்டும் வேலைக்கு போனார். மரம் ஏறும்போது தவறி விழுந்து இறந்துவிட்டார். இந்த செய்தி எங்களை உலுக்கியது. தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய தூண்டியது.

சென்னை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் பணி புரியும் 194 பேராசிரியர்களை தொடர்பு கொண்டு தகவல் சேகரித்தோம். இந்த ஆய்வு ஜூன் 13 முதல் ஜூன் 26 வரை நடத்தப்பட்டது. ஆய்வில் அறிந்த தகவல்கள் இவை:

கொரோனா பரவலுக்கு முன்பே தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு UGC நிர்ணயித்த சம்பளம் தரப்படவில்லை. பணி பாதுகாப்பு சலுகைகள் எதுவும் இல்லை. ஆய்வில் பங்கேற்ற 194 பேரில், 137 பேர் யுஜிசி நிர்ணயித்த PhD அல்லது NET அ SET தகுதி பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசின் 7-வது சம்பள குழு பரிந்துரைப்படி, உதவி பேராசிரியர் ஆரம்ப சம்பளமே ரூ.76,809. ஆனால், தனியார் கல்லூரிகளில் 72% பேராசிரியர்கள் ரூ.25,000-க்கு குறைவாகவும் 5.1% பேர் ரூ.10,000-க்கு குறைவாகவும் சம்பளம் வாங்குகின்றனர்.

இந்த மோசமான நிலைக்கு காரணம், எந்தவொரு சட்டத்தின் கீழும் இக்கல்வி நிறுவனங்கள் கண்காணிக்கப்படவில்லை என்பதுதான். நாட்டின் மொத்த கல்லூரிகளில் 65% அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகள். தமிழ்நாட்டிலோ 77% தனியார் கல்லூரிகள். லாபம் ஒன்றையே இலக்காக கொண்ட தனியார் கல்லூரிகளே உயர் கல்வி துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த பின்னணியில்தான், கொரோனா காலத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சந்திக்கும் பாதிப்பை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இணைய வழியில் மாணவர்கள் பயில்வதற்கு தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இருப்பினும், இணைய வசதியின்மை, இடப்பற்றாக்குறை, தரமான தொழில்நுட்ப கருவிகள் இல்லாமை போன்ற காரணங்களால் இணையவழி கற்பித்தல் கடினமாக உள்ளது.

ஆசிரியர்களின் பெரும் முயற்சிகளை கல்லூரி நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. மாறாக, சம்பள குறைப்பு மூலம் தண்டித்துள்ளன. இதனால் பொருள் இழப்புடன் மனஅழுத்தத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர். கல்லூரிகள் இணைய வழி கற்பித்தலுக்கு மாறிவிட்டதால், நிர்வாக செலவுகள் வெகுவாக குறைந்திருக்கும். மறுபுறம், இணைய வழி கல்வியை காட்டி மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை வசூலித்துவிட்டன. இந்த நிலையில் பேராசிரியர்களின் சம்பளத்தை குறைத்தது நியாயம் இல்லை.

நெருக்கடியை தாங்க முடியாமல்தான் வேறு வேலைகளுக்கு செல்லவும் வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் வந்து விட்டோம் என பேராசிரியர்கள் தெரிவித்தனர். கட்டிட வேலை, விவசாய வேலை, வாகன பழுது பார்க்கும் வேலை, உணவு மற்றும் பல்பொருள் வினியோக வேலை ஆகியவற்றை செய்கின்றனர்.

தமிழக அரசு தலையிட்டால் தவிர இவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி இல்லை. பணி நீக்கம் செய்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்; பிடித்தம் செய்த சம்பளத்தை திரும்ப கொடுக்க வேண்டும்.

கேரளாவில் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பிரச்னையில் அம்மாநில அரசு தலையிட்டது. 2018-ல் யுஜிசி தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1750 வீதம் மாதம் ரூ.43,750 என்றும் யுஜிசி தகுதி பெறாத விரிவுரையாளர்களுக்கு நாளுக்கு ரூ.1600 வீதம் மாதம் ரூ.40,000 அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டு, அதை அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசும் அதை பின்பற்ற வேண்டும்.

©️ஆதாரம்: 28.07.21 தி இந்து நாளேடு கட்டுரை

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!