ஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்!

ஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்!

.பி.சி.சி.யின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியானது தொடங்கிக் ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல் திரும்பவும் உச்சரிக்கப்படுகிறது. அரசாங்கங்களும் இது பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது நல்ல சமிக்ஞை என்று தோன்றலாம். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை. “அங்கங்கே இந்த ‘மானே, தேனே’ எல்லாம் போட்டுக்கொள்” என்பது போல அரசுகளும் தங்கள் அறிக்கைகளில் ‘சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம்’ என்று போட்டு நிரப்பிப் பாடல்களை இயற்றிக் கொண்டிருக்கின்றன. இதற்கும் மக்களிடையே தொடர்ந்து ஏற்பட்டு வரும் விழிப்புணர்வே காரணம்.

ஐ.பி.சி.சி.யின் முதல் மதிப்பீட்டு அறிக்கை 1990 இல் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் ஜெனீவா, கியாட்டோ, பாலி, பாரீஸ் என எக்கச்சக்கமான மாநாட்டுத் திருவிழாக்கள் வேறு. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனரே ஒழிய, அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

அனைத்து அரசுகளுக்கும் GDP பற்றிதான் கவலை. பொருளாதாரம் அவசியமில்லையா என்பவர்கள், நாம் இன்னும் ‘மெட்டா எக்கனாமிக்ஸ்’ பற்றி யோசிக்கத் தொடங்கவே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது, உலகின் அனைத்து நிதி மற்றும் தொழில் அமைச்சர் களுக்கும் பொருந்தும்.

மெட்டா எக்கனாமிக்ஸ் என்பதை மனிதரின் சூழலியலுடன் பொருந்திய பொருளாதாரம் எனலாம். இது, இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, மனிதரைப் பற்றியது. மற்றொன்று, சுற்றுச்சூழல் பற்றியது. பொருளாதாரத் திட்டமிடல்கள் இயற்கையைப் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப் பட வேண்டும் என்பதுதான் இதன் சாரம்.

ஒரு சிறந்த முதலாளி, தன் மூலதனம் குறைந்துகொண்டே வந்தால் தனது தொழில் சிறப்பாக இல்லை என்பதைப் புரிந்து கொள்வார். இங்கு அனைத்து கார்ப்பரேட்களுக்கும் குறைந்து வரும் இயற்கை வளமே மூலதனம். பின் எப்படி இவர்கள் சிறந்த முதலாளிகள்? திட்டமிடும் பொருளாதார வல்லுநர்களுக்கும் சேர்த்துத்தான் இந்தக் கேள்வி. ஆனால், இவர்களுக்கு இன்றும் ‘சுற்றுச்சூழல்’ என்பது எரிச்சலைத் தரும் சொல்லாகவே இருக்கிறது.

“போய் புள்ளக்குட்டிங்களைப் படிக்க வைங்கடா” என்பது போல இ.எஃப். சூமேசர் ஒன்று சொல்லியிருப்பார்: “பொருளாதார வல்லுநர்களுக்குச் சூழலியலைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” இதுவும் தொடக்க நிலை யோசனைகளுள் ஒன்றே. ஆனால், முதலீட்டியம் சூழ் உலகில் இதுவே நடக்குமா என்று தெரியவில்லை. அதுவரை தொடர்ந்து வரப் போகும் ஐ.பி.பி.சி. அறிக்கைகளையும், ‘மானே, தேனே’ பாடலையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

எழுத்தாளர் நக்கீரன்

error: Content is protected !!