June 26, 2022

தமிழக அரசு கடன் சுமைகளைக் குறைப்பதற்காகவென்றே தனி வரி!

ட்ஜெட் என்றாலே முதலில் நினைவை நிலைகுலைய வைப்பது வரி தான். ஜனவரி, பிப்ரவரி மாத வாக்கில் பட்ஜெட் தாக்கல் ஆவதால், மாதப் பெயர்களில் வரி எனும் வார்த்தை இருப்பதால், வரி விதிப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறதோ! தமிழக சட்டமன்றத்தில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதமானது ஜனவரியோ, பிப்ரவரியோ என எந்த வரியும் இல்லாத ஆகஸ்ட் மாதமாகும். ஆகவே வரியே இல்லாத மாதத்தில் வரியே போடாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வர்ணிக்கலாம்.ஏற்கனவே 5 லட்சத்து 77 ஆயிரத்து 987 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழக அரசு கடன் வாங்கியிருக்கிறது. இந்த நிலையில் இந்த 6 மாதமே உள்ள நிதியாண்டில் மேலும் 92 ஆயிரத்து 484.50 கோடி ரூபாய் கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி வசூலின் தமிழகப் பங்கைப் பிட்டுப்பிட்டுத் தந்துகொண்டு இருக்கிறது. எனவேதான் இந்த நிலை. ஒருமுறை புதிதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது கலைஞர் இப்படிக் கூறினார்., “கஜானாவும் காலி- களஞ்சியமும் காலி”. இத்தகு நிலை இப்போது இருப்பதைத் தான் தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை பளிச்சிட வைக்கிறது. “உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவில்லை” என்று கூறி, அதற்கான தொகையையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துவிட்டது. இதிலும் மூன்றாயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு இழப்பைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே மத்திய அரசு அனுப்பிய சில திட்டங்களுக்கான நிதியானது செலவு செய்யப்படாமல் திருப்பி மத்திய அரசுக்கே அனுப்பி வைக்கப்பட்ட அவலத்தையும் தமிழக அரசு கடந்த ஆட்சிக் காலத்தில் சந்தித்துள்ளது.

ஒரு யோசனையை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். வங்கதேசத்தை உருவாக்கிட நடந்த போரின் போது வங்கதேசப் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் இந்திய எல்லையோர நகரங்களுக்குள் நுழைந்து விட்டனர். சர்வதேச அகதிகள் பராமரிப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்து போட்டுள்ளது. எனவே அந்த அகதிகளை ஏற்று வாழ்வாதாரத்துக்கான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய கட்டாய கடமை இந்திய அரசுக்கு வந்தது.

இதனால் அரசுக்குச் செலவுச் சுமை கூடிக்கொண்டே சென்றது. அப்போது இந்த நிதிப்பற்றாக்குறையைப் போக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். பிரச்சனை தீரும் வரை அந்த திட்டம் அமலில் இருந்தது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

அந்த திட்டத்தின்படி, அகதிகள் தபால் தலை என்ற நடைமுறை வந்தது. எந்த அஞ்சல் என்றாலும் வழக்கமான அஞ்சல் தலையுடன் அகதிகள் அஞ்சல் தலையையும் சேர்த்து ஒட்டி அனுப்ப வேண்டும் என்று விதி வகுத்துச் செயல் படுத்தப் பட்டது. இந்த நிதியானது நேராக அகதிகளின் செலவினத்துக்கே ஒதுக்கப்பட்டது. அகதிகளின் பிரச்னை ஓய்ந்ததும் அந்த ஸ்டாம்ப் முறை கைவிடப்பட்டுவிட்டது.

அதுபோன்றே தமிழக அரசின் மூலமாகப் பெறப்பட்டு இருக்கும் கடன் சுமைகளைக் குறைப்பதற்காகவென்றே தனி வரியை விதிக்கலாம். “கடன் ஓரளவு கழித்த பின்னர் இந்த வரி ரத்து செய்யப்பட்டு விடும்” என்ற அறிவிப்புடன் இதைக் கொண்டு வருவது பற்றி அரசு பரிசீலனை செய்யலாம்.

நூருல்லா ஆர். செய்தியாளன்