ஆப்கானிஸ்தான்: இனி என்ன நடக்கக் கூடும்? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

ஆப்கானிஸ்தான்: இனி என்ன நடக்கக் கூடும்? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

மூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக அதிகம் பேரை கவர்ந்துள்ள விஷயம், ஆப்கானிஸ்தான். என்ன சேதி? பொதுவாகவே சமூக ஊடகவாசிகள் அறிவுப்பூர்வமான சேதிகளை விட உணர்ச்சிப்பூர்வமான சேதிகளில்தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆப்கன் தாலிபான்களின் வன்முறை ஹாலிவுட் படஙகளை ஜூஜூபி ஆக்கும் தன்மைக் கொண்டவை. விடுவார்களா? பொறி பறக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும். நாம் அறிவுபூர்வமாக இந்த விஷயத்தை அணுகுவோம்.

ஆப்கனில் 1978-79 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மன்னர் ஆட்சி கலைக்கப்பட்டு இராணுவப் புரட்சிகள் மூலம் நிலையற்ற அரசுகள் அமைந்து வந்தன. அப்படியொரு சமயத்தில் பதவியில் இருந்த ‘அதிபர்’ தன் உதவிக்கு சோவியத் யூனியனிடம் படை பலம் கேட்க, அவர்களும் உள்ளே நுழைந்தனர். இது அமெரிக்காவை கோபப்படுத்தியது. ஏற்கனவே ஈரானில் கொமேனி அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கனை சோவியத் யூனியன் “கைப்பற்றுவது” எரிச்சலை வரவழைத்தது. பாகிஸ்தானின் நட்பு அரசோடு முஜாஹிதீன் எனும் போராளிகளின் படையை உருவாக்கி சோவியத்தை வென்றனர். பின்னர் ஆப்கன் பல்வேறு போராளி குழுக்களின் கீழ் ரபானி என்பவரை அதிபராக்கி ஆட்சி செய்ய முயன்றனர். ஆனால் பஷ்தூன் இனத்தின் செல்வாக்கு சிதைவுறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். அந்த ஆட்சி காலம் கொடுமையானது.

மேலும் அமெரிக்காவிற்கு எதிராக கருத்தியல் போன் ஒன்றை உருவாக்கிய அல்- கொய்தா இயக்கமும் ஆப்கனில் குடியேறியது. இதன் தலைவர்தான் பின் லேடன். அவர் அங்கிருந்தபடி இரட்டைக் கோபுரத் தாக்குதலில்(செப் 11, 2001) ஈடுபட்டதாகக்கூறி அமெரிக்கா ஆப்கனில் நுழைந்து ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிறுவியது. இருந்தாலும் தலிபான்களும், பின்னர் வந்த ஐ எஸ் ஐ எஸ்சும் அமெரிக்க எதிர்ப்புப் போரை தொடர்ந்தனர். இதன் விளைவாக அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கனை விட்டு வெளியேற, நேற்று முதல் மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்துள்ளது.

இதனால் அங்கிருந்து இலட்சக்கணக்கான மக்களும், வெளிநாட்டவரும் விமான நிலையத்தில் குவிந்து அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு போகின்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான்கள் அனுமதிப்பார்களா என்று தெரியாது. பணயக் கைதிகளாக இம்மக்கள் பிடிக்கப்படலாம். ஐ நா இது குறித்து விவாதித்து வருகிறது. ஏற்கனவே ஆப்கனில் வாழும் மக்களை விட அகதிகளாக வாழும் மக்கள் அதிகம். தாலிபான்கள் சுடுகாட்டையா ஆட்சி செய்ய முடியும்? மக்கள் வேண்டாமா?

அடுத்து எழும் கேள்வி இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது. அங்கு இதுவரை இருந்த அரசுடன் இந்தியா நல்லுறவு வைத்திருந்தது. ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வந்தது. இப்போதும் அதைத் தொடரலாம். ஏனெனில் தாலிபான்கள் வலிமையான, நிலையான ஆட்சியைத் தர முடியும். இரண்டாவது மத அடிப்படைவாதிகள் என்றாலும் ஈரான், வளைகுடா அரபு நாடுகளை விடச் சற்று கூடுதல் பழமைவாதிகளே, தாலிபான்கள். எனவே பிறநாடுகளுடன் வணிகம் செய்யலாம் என்றால் தாலிபான்களுடனும் செய்யலாமே? ஆனால் பாகிஸ்தானும், சீனாவும் விரும்ப மாட்டார்கள். மேலும் சீனா ஆப்கனின் கனிம வளங்களை மொத்தமாக கைப்பற்ற ஏற்கனவே ஒப்பந்தங்களை போட்டு விட்டது. சீனாவிடம் தாலிபான்கள் கடன் வாங்கவும் மாட்டார்கள். சீனா கொடுத்தாலும் கனிமங்களை எடுத்துக் கொண்டு கணக்கு முடிக்கச் சொல்லி விடுவார்கள். தாலிபான்களுடன் சண்டை போடவும் முடியாது. இந்நிலையில் பாகிஸ்தானும், இலங்கையும் சீனாவிடம் வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாமல் தங்கள் நிலத்தை சீனாவிற்கு வழங்கி வருகிறார்கள். ஏறக்குறைய திவால் நிலை; அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை அவ்வளவுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரை தலிபான்கள் காஷ்மீரைக் கைப்பற்றுவோம் என்று கிளம்பி வந்தால்தான் பிரச்சினை. மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள் நீண்டகாலப் போர் ஒன்றை ஏற்படுத்த விரும்ப மாட்டார்கள். இந்தியா தேவை என்றால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்காது என்று அறிவார்கள். மோடியின் ‘இந்துத்வக் கொள்கை’ மிகத் தெளிவானது. அதன்படி தலிபான்கள் எதிரிகளே. ஆனால் நாமாகப் போய் வலிய தாக்க வேண்டாம்; வந்தால் விட வேண்டாம் என்பதே முடிவு.

ஆப்கனில் எல்லோருமே தலிபான்கள் கிடையாது. சாதாரண மக்களும் உண்டு. அவர்களை நாம் துன்புறுத்தக் கூடாது. இந்தியாவின் நிலைப்பாடு இதுவே. ஆயினும் ஆப்கனை இந்தியாவிற்கு எதிரானத் தளமாகப் பயன்படுத்த அனுமதித்தால் அப்போது இரக்கம் காட்ட முடியாது. இதைத் தாலிபான்கள் உணர்ந்திருப்பர். எனவே எவ்விதமானப் பலனும் இன்றி இந்தியாவுடன் போர் செய்வதை விட ஒன்று கண்டு கொள்ளாமல் இருக்கலாம்; இல்லை வணிக உறவுகளை முன்னெடுக்கலாம். ஏன், சீனாவை மட்டும் சாராமல் அறிவுபூர்வமாக இந்தியா, ரஷ்யா (ஏற்கனவே ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுகிறார்கள்) பிற மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளுடன் அமைதியாக வணிகம் செய்து வாழலாம். இதன் மூலம் உலகின் அங்கீகாரத்தையும் பெறலாம்.

எல்லாம் தலிபான்களின் கையில்தான் உள்ளது. நல்லது நடக்கும் என்றே எதிர்பார்ப்போம்.

ரமேஷ் பாபு

error: Content is protected !!