January 31, 2023

அதிகார வர்க்கத்தின் அறிவிப்பு பயமாய் இருக்கிறது : ஆனாலும் நம்பிக்கையும் உள்ளது!

பிரம்மாண்டமான தேசியக் கொடி ஒன்றைக் காற்றில் அசைத்தபடி ஆட்டோ ஒன்று கடந்து போகிறது, எங்கிருந்தோ ஜன்னல் வழியாக “ஜாரே ஜஹாங்சே அச்சா” பாடல் வீட்டுக்குள் நுழைகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் 75 ஆவது விடுதலைத் திருநாள் மெல்லிய முணுமுணுப்பாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் நீண்ட நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஒருவேளை பெருந்தொற்றுப் பரவல் இல்லாதிருந்தால் அவர்கள் பள்ளி அரங்குகளில் தங்கள் நண்பர்களோடு ஏதாவது செய்து கொண்டிருந்திருந்திருப்பார்கள், ஆட்டமும் பாட்டமுமாய் அவர்கள் 75 வருட இந்தியாவைப் பற்றி உயர்வாக நினைவு கூர்வதற்கு நிறைய இருக்கிறது.

ஆம், தேசத்தின் மிகப்பெரிய இழுக்கான சாதியத்தையும், உரமேற்றப்பட்ட மதவாதத்தையும் தாண்டி இங்கு அடிநாதமாக தேசத்தின் மீதான ஒரு தீராத நேசமிருக்கிறது, இந்த தேசம் மிகப்பெரியது, இதன் நிலப்பரப்பில் எல்லாம் இருக்கிறது, வானுயர்ந்த மலைகள், ஆழக்கடலின் கரைகள், அழகிய சமவெளிகள், நீண்ட பாலை நிலங்கள், இந்த தேசத்தின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அன்றாடம் உழைத்து அதில் கிடைக்கிற கூலியை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள்.

இன்னொரு பக்கம் பெரும்பணக்காரர்கள் என்று நம்மில் பலரால் வெறுக்கப்படுகிற ஒரு சிறு குழு இருக்கிறது. அந்த வெறுப்புக்கான நீதியைத் தங்களிடத்தில் கொண்டவர்கள் அதிகம் இருக்கிற குழு அது. ஆனாலும், அந்தச் சிறிய குழுவில் இருந்த மகத்தான மனிதர்களை நாம் அத்தனை எளிதாகக் கடந்து போய் விட முடியாது.

ஜாம்ஷெட்ஜி டாட்டா எங்கிருந்தோ வந்து குடியேறிய குடும்பத்தில் இருந்து தான் இந்தியாவின் தொழில் சாம்ராஜ்யத்தைக் கனவு கண்டார், நாக்பூருக்கு அருகில் முதன்முதலாக ஒரு ஸ்பின்னிங் மில்லை உருவாக்குவதில் அவருக்கு எதிராக இருந்த சவால்களை எல்லாம் கடந்து அவர் இந்த தேசத்தின் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு மேம்பட்ட வாழக்கையை வழங்குவதற்கு அவரால் இயன்றதை எல்லாம் செய்தார்.

டாட்டாவைப் போல ஒரு தொழில் சார்ந்த குடும்பத்தில் இருந்து வரவில்லையென்றாலும், பெரிய கனவுகளைத் துரத்திய பெட்ரோல் நிரப்பும் சிறுவனாகத்தான் வளைகுடாவில் வாழ்வைத் துவக்கினார் தீருபாய் அம்பானி, தொடர்ந்து தூற்றப்பட்டாலும் கூட இன்று ரிலையன்ஸ் நிறுவனம் மூலமாகப் பயனடைந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தியாவில் உண்டு.

இதுபோல எண்ணற்ற தொழில்துறை முன்னோடிகள் இந்த தேசத்தின் வளர்ச்சியில் பங்காற்றி இருக்கிறார்கள், விவசாய நிலங்களில் பண்ணை அடிமைகளாக இருந்தவர்களில் பலரை பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழ்வதற்கு உதவி இருக்கிறார்கள்.

விடுதலை பெற்ற 75 ஆண்டுகளில் இந்திய உழைக்கும் சமூகத்தின் கூட்டு மனசாட்சி மிகப்பெரிய உழைப்பை இந்த தேசத்திற்கு வழங்கி இருக்கிறது. அவர்கள் அரசியல் கட்சிகளால் ஏமாற்றப்பட்டார்கள், அவர்கள் பெரிதும் நம்பிய தலைவர்களில் பலர் அவர்களின் நேர்மையை, அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

சுரண்டலை ஒரு கலையாக அரசியல்வாதிகள் இந்த 75 ஆண்டுகளில் மாற்றி இருக்கிறார்கள். உழைப்புச் சுரண்டல் அல்லது தேசத்தின் வளத்தை சுரண்டும் கலை உண்மையில் நம்முடைய அரசியல்வாதிகளுக்குத் தெரியாது, ஆனால் அதை நேர்த்தியாக செய்வதற்கு மிகச்சிறந்த பயிற்சியை நமது அரசியல்வாதிகளுக்கு அளித்தவர்கள் “பீரோகிராட்ஸ்” எனப்படும் உயர் அதிகார வர்க்கத்தினர்.

தேசம் கடினமாக உழைத்து அவர்களின் கல்விக்காக உழைத்தது, இன்னும் உழைக்கும், அவர்கள் திரும்ப ஏதேனும் செய்வார்கள் என்று எளிய மக்கள் நமாபினார்கள், ஆனால் அவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை மறந்தவர் களானார்கள். இருப்பினும் இந்த தேசத்துக்கு அவர்கள் மீது பெரிய வருத்தமில்லை. ஐயா என்று வணங்கிவிட்டுத் தனது கோரிக்கைகளை, துயரங்களை அவர்களிடம் இன்னும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த 75 ஆண்டுகளில் இந்த தேசம் மிகக் கடினமான காலங்களைக் கடந்து வந்திருக்கிறது, இந்த தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் அறம் சார்ந்த வாழ்க்கையைக் கடைபிடித்து வாழ்பவர்கள். அவர்கள் நேர்மையாக இருப்பதை வாழ்க்கை முறையாகவே கடைபிடிக்கிறார்கள், உயர் நடுத்தர வர்க்கம் சுரண்டலையும், நேர்மையையும் “தொழில் திறமை” அல்லது பிழைக்கத் தெரிந்தவன் என்று வேறு பெயரிட்டுத் தங்கள் குழந்தைகளுக்கு அதில் பயிற்சி அளிக்கிறது.
அங்கிருந்து நிர்வாகத்திற்கு வருகிற அதிகார வர்க்கம் மற்றும் அரசியல் தலைமைகள் தான் ஆபத்தானவர்களாக மாறி இந்த தேசத்தை வேகமான வளர்ச்சியில் இருந்து தடுத்தவர்கள்.

மிதவாத வலதுசாரி இயக்கமான காங்கிரஸ் கட்சியும் சரி, தீவிரவாத வலதுசாரி இயக்கமான பாரதீய ஜனதாவும் சரி இந்த தேசத்தின் எளிய மக்களை ஏமாற்றியதில் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அதற்குப் பின்னால் இந்த மக்களின் அறியாமையும், வெகுளித்தனமும் தானிருந்திருக்கிறது. சில குறிப்பிட்ட தலைவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் தேசத்தை தாங்கள் சார்ந்திருந்த மதம் அல்லது சமூகம் என்ற அளவில் குறுக்கியும், அதற்கு மேல் சிந்திக்கிற துணிவற்றவர்களாகவும் தான் இருந்தார்கள் என்று சொல்வதற்கு எந்த மனத்தடையும் எனக்கில்லை. அவர்கள் வளங்களை சூறையாடினார்கள், தங்கள் வாக்காளர்களின் மேண்டேட்டை எங்காவது அடகு வைத்து பதவிகள், பணம் என்று ஏதேனும் பொறுக்கித் தின்றார்கள்.

இடைப்பட்ட காலத்தில் உலகமயமாக்கலுக்குப் பின்பான இந்தியாவை உருவாக்கிய சில தலைவர்கள் குறைந்த பட்சம் நில அடிமை முறையில் உழன்று கொண்டிருந்த சாதிய இந்தியாவை கொஞ்சம் முன்னகர்த்தி தொழில்சார்ந்த பாதையைத் திறந்து விட்டார்கள். இளைஞர்களின் வரலாற்றுப் புரிதலற்ற சமூக அறிவைப் புறந்தள்ளிய பொருளாதார வளர்ச்சி என்கிற சிக்கலைத் தவிர அதனால் விளைந்த பயன்கள் மிக அதிகம்.

ஆனால் அந்தப் பாதையை மட்டுமில்லாமல், எந்த ஒரு நிலையான பாதையையும் காட்டுவதற்கான தகுதியற்ற, அடிப்படை அரசியல் அறிவற்ற தலைவரின் கைகளில் சிக்குண்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருக்கிறது தேசம். ஆனால், வெகுளித்தனமாகவும், அதே நம்பிக்கைகளோடும் இந்த தேசம் தனது தலைவனை நம்புகிறது.

இந்த தேசம் அறம் சார்ந்து இயங்கும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நம்பிக்கையில் கட்டப்பட்டது. அவர்கள் வறுமையிலும் துயரத்திலும் கூட நேர்மையாக இந்த தேசத்துக்காக உழைக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாதீர்கள், குறைந்த பட்சம் அவர்களை சுரண்டாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள். 100 லட்சம் கோடியில் ஏதோ புதிய திட்டமென்று செங்கோட்டையில் நின்று முழங்குகிறீர்கள். எப்போதுமில்லாத பெரிய அளவில் இந்த தேசத்தின் சாமானிய மனிதனின் இத்தனை கால உழைப்பை மொத்தமாக சுருட்டத் திட்டம் தீட்டுகிறீர்களோ என்று அச்சமாக இருக்கிறது. ஏனெனில் சிக்கலான எந்த வருமானமும் இல்லாத முழு அடைப்புக் காலத்தில் அவன் உயிர் பிழைத்திருக்க எதையும் கொடுக்க மனமில்லாமல் இருந்தீர்கள்.

கல்வி கற்ற அதிகார வர்க்கமும், அவர்களின் வழியில் பயணித்த அரசியல் இயக்கங்களும் இந்த தேசத்தின் வளர்ச்சியில் குறைந்த பட்ச அக்கறை காட்டியிருந்தால் பிரதமர் 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் பொய்யான “இந்தியா உலகிற்கே வழிகாட்டும் ஆற்றல்” உண்மையாக மாறி இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கும். ஆனாலும், இந்த தேசத்தின் அயராத உழைப்பின் மீதும், அதன் அடிநாதமான அறத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் தொடர்ந்து முன்னேறுவோம்.

கை.அறிவழகன்