November 29, 2021

பெகாசஸ் : பாதிக்கப்பட்டவங்க யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரலை – சுப்ரீம் கோர்ட்

பெகாசஸ் மென்பொருள் மூலம் போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை? என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, ‘எடிட்டர்ஸ் கில்டு’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தவிர மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள 9 மனுக்களை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். வழக்கு தொடர்பாக நீதிபதி ரமணா பல கேள்விகளை கேட்டார். ‘ஊடகங்களில் வந்த இந்த செய்திகள் அத்தனையும் உண்மையானால் இந்த விவகாரம் தீவிரமானது. ஆனால் இவ்வழக்கில் அத்தனையும் ஊடகங்கள் சொல்வதாகத்தான் உள்ளதே தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களும் தங்களது போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வாதாடிய கபில் சிபல், ‘ஒருபோனை ஒட்டுக்கேட்க 55 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது எனச் சொல்கிறார்கள். இறையாண்மை தகுதியுடைய நிறுவனங்கள் பயங்கரவாதிகளை ஒட்டுக்கேட்பதற்குதான் இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்றால் இந்தியாவில் தற்போது ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதியா?’ என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நடந்த வாதத்திற்கு பிறகு, பெகாசஸ் விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.