November 27, 2022

தமிழகத்தில் ஓடிடி-களின் அடுத்தடுத்த அரங்கேற்றத்தால் அதிகரிக்கும் மனச்சிதைவுகள்!

ணையதள வீடியோ மற்றும் வெப்சீரீஸ் பார்ப்பதில், 12-21 வயது உள்ளவர்கள், அடிமையாவது அதிகரிச்சுகிட்டே போகுது. இந்தியாவில் உள்ள பல்வேறு மனநல மற்றும் நரம்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் வரும் பேஷண்டுகளில் பெரும்பாலும், ‘தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேல் இணையதளத்தில் வீடியோ பார்ப்பவர்கள் என்பதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.’ (உலக அளவில், தொடர்ச்சியாக, ஆறு மணி நேரத்திற்கு மேல், இணையதளத்தில் வீடியோ பார்ப்பதே, இதுவரையிலும் அதிகபட்ச நேரமாக இருந்தது)

இது குறித்து ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மின் ஒரு சிறப்புக் கட்டுரைக்காக நம்ம கட்டிங் கண்ணையா சில பல மருத்துவமனைகளுக்கு நேரில் விசிட் அடித்து கலெக்ட் செய்த ரிப்போர்ட்டிங்-கின் ஒரு பகுதி இதோ:

இண்டர்நெட் வசதி இப்போது ஈசியாக கிடைக்கும். ஆனால் முன்பெல்லாம் குறிப்பிட்ட சீரியலில், ஒரு, எபிசோட் பார்க்க ஒரு வாரம் குறைந்த பட்சம் 24 மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இதற்கு நம்முடைய மூளையும் பழகி இருந்தது. ஆனால், தற்போத, எதற்கும் காத்திருக்க தேவையில்லை.எல்லாவற்றையும், ஒரே நேரத்தில் பார்க்க வசதியாக வெளியிடுகின்றனர்; ஆகவே மொத்த சீரியலையும், இடைவெளி இல்லாமல், பார்த்து முடித்து விடுவோர் அதிகரித்த வண்ணம் இருக்கிறார்கள்.

தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு பிரைவேட் டீம் நடத்திய சர்வேயில் . 3.7 சதவீத இந்திய மக்கள் மன அழுத்தம் உள்ளிட்ட சாதாரண உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே சூழ்நிலையில், 5.2 சதவீத மக்கள் இதுபோன்ற இணைய தொடர்கள் மூலம் உளவியல் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்கின்றனராம். 10 ஆண்டுகளுக்கு முன்பு, 100 நோயாளிகள் மனநல பிரிவுக்கு வருவார்கள். ஆனால், இப்போது தினசரி 300-400 பேர் தொடர்பு கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள் உளவியல் துறை மருத்துவர்கள்

ஏற்கெனவே பதின் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தத்திற்கு சமூக ஊடகங்களே முக்கியமான காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தது நினைவிருக்கும். தாங்கள் சோஷியல் மீடியாக்களில் பதிவிடும் விசயங்களுக்கு அதிகளவில் லைக் கிடைக்கிறதா, இல்லையா என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு இணையம் சார்ந்த காரணிகள் அவர்களிடையே மனஅழுத்தத்திற்கு வித்திடுவதாக வல்லுநர்கள் தெரிவிச்சிருந்ததும் மறந்திருக்காது.

இந்நிலையில்தான் ஒரே நேரத்தில், மொத்த சீரியலையும் பார்த்து விடவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து பலருக்கும் மனசிதைவு ஏற்படுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து விடாமல் தொடர்கள் காண்பதற்கும், மூளைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஒரு எபிசோட் முடியும் போது அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக முடிப்பது வழக்கம். அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி வரும் போது, நம்மூளையில், சி.ஆர்.ஹெச்., என்ற வேதிபொருள் சுரக்கும். இது, மன அழுத்தத்தை தருவதோடு, இதே போன்று, பிற வேதிப் பொருட்களையும் சுரக்கத் தூண்டும்.இப்படி மன அழுத்தத்தை தூண்டும் வேதிப் பொருட்கள், அதிகமாக சுரக்கும் போது, அன்று இரவு தூக்கம் வராமல், இப்போதே மொத்த சீரியலையும் பார்த்து முடித்து விடலாம், என தோன்றும். ஒரு எபிசோட் மட்டும் பார்க்க நினைத்த நாம், கடைசியில், அந்த சீசனில் வெளியான சீரியலின், மொத்த எபிசோடுகளையும் பார்த்து முடித்து விடுவோம். இப்படி பார்க்க வைக்க சரியான ட்விஸ்ட் தேட சில படைப்பாளிகள் உபயோக்கிக்கும் வஸ்துகள் குறித்து கூற ஆரம்பித்தால் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் தடம் மாற வாய்ப்புண்டு.

இதனால் தான், ஒரு விஷயத்தை பெறுவதற்கு, பொறுமையாக காத்திருக்க வேண்டும் என, மூத்தோர்கள் கூறுவர். உணவுக்கும் இது பொருந்தும். அசைவ உணவோ, பிரியாணியோ சாப்பிட வேண்டும் என்றால், வார கடைசி வரை, காத்திருக்க வேண்டும் என்றநிலை இருந்தது. ஆனால் தற்போத, இந்த நிமிடம் பிரியாணி சாப்பிட வேணடும் என தோன்றினால், உடனே, ஆர்டர் செய்ய முடியும். விரும்பிய விஷயம், உடனே கிடைக்கும் போது, மூளையில் மகிழ்ச்சி வேதிப் பொருளான, டோபமின் உடனே சுரந்து, சந்தோஷமான உணர்வை தருகிறது.

சந்தோஷமான வேதிப் பொருள் சுரப்பது, நல்ல விஷயம் தானே என்ரு கேட்டால் மூளை நமக்கு இயற்கையாக கொடுக்கும் நேர்மறையான, சந்தோஷமான விருது, டோபமின். முழு ஈடுபாட்டுடன், கடினமாக உழைத்து தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெறுகிறோம். அந்த நேரத்தில் டோபமின் சுரப்பதால், மகிழ்ச்சியான உணர்வு வருகிறது. இதே உணர்வு, எப்போதோ ஒருமுறை, நமக்கு பிடித்த உணவு சாப்பிடும் போதும் வரும். ஆனால் தற்போது, போடமின் சுரந்த படியே உள்ளது. இயற்கையாக, டோபமின் சுரப்பது தான் ஆரோக்கியமானது. எந்த விஷயத்திற்கும் அடிமையானாலும், இயற்கையாக சுரக்கும் டோபமினை விடவும், செயற்கையா பல மடங்கு அதிகமாக சுரக்கும். இது நல்லதல்ல. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே, நெட் பிளிக்ஸ் பார்க்க வேண்டும் என்ற, சுய கட்டுப்பாடு அவசியம். என்கிறார்கள்

ஆனால் சமீபகாலமாக தமிழகத்தில் ஓடிடி-களின் அடுத்தடுத்த அரங்கேற்றத்தால் 27% சதவீத ஜனங்களுக்கு மனச்சிதைவு ஏற்பட்டு இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது என்பதுதான் சோகம்.

©️✍️நிலவளம் ரெங்கராஜன்