சிப்பர் இருக்கு, ஸ்ட்ரா இல்ல. – சித்திரமாகிப் போன பாதர் ஸ்டேன் சாமி!

சிப்பர் இருக்கு, ஸ்ட்ரா இல்ல. – சித்திரமாகிப் போன பாதர் ஸ்டேன் சாமி!

கார்ட்டூனிஸ்ட் எல்லாருக்கும் காமெடி சென்ஸ் அதிகம். நண்பர் பீட்டர் அதிகம் சிரிக்க மாட்டார். ஆனா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு வயித்து வலி உண்டாக்கும். அதே கார்ட்டூனிஸ்டுங்க சில நேரம் போட்ற சித்திரம் நம்மள பேச்சு மூச்சு இல்லாம ஸ்டன் ஆக்கிடும். இன்னிக்கு டைம்ஸ்ல அப்டி ஒண்ணு போட்ருக்கார் சந்தீப். பாதர் ஸ்டேன் சாமி தமிழனா இருந்தாலும் நம்மூர்ல பலருக்கு தெரியல. ஜார்கண்ட்ல ஆதிவாசிகளோட வேல செஞ்சுகிட்டு இருந்த ஆக்டிவிஸ்ட். நாட்டுக்கு எதிரா ஜனங்கள தூண்டிவிட்ட மாவோயிஸ்ட்னு சொல்லி ஜெயில்ல போட்டாங்க. அவர் வயசு 84.

ஜெயில் என்ன லட்சணத்துல இருக்கும்னு போகாதவங்களுக்கும் தெரியும். இப்ப கூட பாளையங்கோட்டை ஜெயில்ல ஒரு வாலிபர மத்த கைதிகள் மூலமா போட்டு தள்ளினாங்க இல்ல. தனக்கும் அப்டி நடக்கும்னு சாமி நெனச்சார். அப்டி செய்யல. ஆனா தேவை இல்லாம பல கைதிகள் அவர சுத்தி சுத்தி வந்திருக்காங்க. கொரோனா தொற்று ஆயிருச்சு. அல்ரெடி பார்க்கின்சன் + பல நோய்கள் உண்டு. காட்டு வாழ்க்கைல வராமலா போகும். ஜாமீன் குடுங்க, ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு திரும்ப திரும்ப மனு போட்டார். அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிச்சுது. அதனால கோர்ட் தரல. கை நடுங்குது, ஒரு சிப்பரும் ஸ்ட்ராவும் தர சொல்லுங்க..னு மனு குடுத்தார். அதுக்கே பிராசிக்யூஷன் எதிர்ப்பு. விடியோ கான்பரன்ஸ்ல ஜட்ஜுங்ககிட்ட ஓப்பனா சொல்லி பாத்தார் சாமி.

“அய்யா, தடை செய்யப்பட்ட நக்சல் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல. நா ஆதிவாசி மக்களோட வேல செய்றேன். நக்சல், மாவொயிஸ்ட்னு சொல்லி அவங்கள புடிச்சு உள்ள தள்றது தப்புனு சொன்னேன். அதுக்காக என்னயும் தூக்கிட்டாங்க. ஒரு வருசம் ஆக போவுது. கேசும் நடக்கல. ஜெயிலுக்குள்ள எதுவும் ஒத்துக்கல. ஒவ்வொரு உறுப்பா ரிப்பேர் ஆயிட்டு வருது. ஜாமின் தந்தா நல்ல ஆஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுப்பேன்”னு சொன்னார்.

அரசாங்க ஆஸ்பத்திரில சேக்க சொல்றோம்னு ஜட்ஜ் சொன்னார். அய்யோ, வேண்டாம். இப்டியே கெடந்து போய் சேந்துட்றேன்..னு கும்பிட்டார் சாமி. சரி, ப்ரைவேட் ஆஸ்பிடல்ல சேக்க சொல்றோம்; ஆனா பில் நீங்கதான் குடுக்கணும்னு ஜட்ஜ் சொன்னார். அப்டிதான் போன வாரம் ஹோலி பேமிலி ஆஸ்பிடலுக்கு வந்தார் சாமி. அஞ்சாம் தேதி திங்கக் கிழமை அவரோட அடுத்த ஜாமீன்மனு வந்துது. அவசரமா விசாரிங்க..னு கேட்டார் சாமியோட வக்கீல் மிகிர் தேசாய். நாளைக்கு பாக்கலாம்னு கோர்ட் சொல்லுச்சு. கொஞ்ச நேரத்ல மறுபடி தேசாய் கைய தூக்கினார். அதான் சொன்னோம்ல?னு கேட்டார் ஜட்ஜ். இல்லீங்க, ஆஸ்பிடல் டீன் ஏதோ சொல்லணும்னு துடிக்கிறார்; ஒரு நிமிசம் கேளுங்க, ப்ளீஸ்..ன்னார் தேசாய். சரின்னதும் டீன் டிசூசா கூண்டுல ஏறி, பாதர் ஸ்டேன் சாமி அஞ்சு நிமிசம் முன்னால செத்துட்டார்..னு சொன்னார்.

திருச்சில பொறந்து வளந்த ஸ்டேன் சாமிக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. கடைசியா எடுத்த டெஸ்ட்ல அவருக்கு கோவிட் நெகடிவ் வந்திருக்கு. அதனால அவர் பாடிய மும்பை சர்ச்சுக்கு குடுக்க ஆடர் போடணும்னு தேசாய் கேட்டார்.

பிரேத பரிசோதனை முடிச்சுட்டு குடுக்கதுக்கு ஆட்சேபனை இல்லைனு அரசு வக்கீல் சொன்னார். சுபம். என்னா பெரிய ஆக்டிவிஸ்டா இருந்தாலும் சர்க்கார் நெனச்சா சட்டப்படியே டீ-ஆக்டிவேட் செய்ய முடியும்னு நம்ம சமூகத்துக்கு திரும்ப திரும்ப பாடம் எடுக்குறாங்க. அதையும் மீறி தன்னையே விலையா குடுக்க சாமிகளும் வந்துகிட்டே இருக்காங்க. அதத்தான் சித்திரமாக்கி இருக்கார் கார்ட்டூனிஸ்ட். சிப்பர் இருக்கு, ஸ்ட்ரா இல்ல.

வேற எது கிடைச்சாலும் ஜனநாயகம் இலவசமா கிடைக்காதுல்ல? ஜெய்ஹிந்த்.

கதிர்

Related Posts

error: Content is protected !!