July 28, 2021

சுரதாவுக்குப் பெயர் சூட்டிய அஞ்சல்அட்டை!

வமைக் கவிஞர் சுரதாவுடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவரின் பல நிகழ்ச்சிகளை நான் செய்திக்காகத் தொகுத்து, தினமலர் நாளிதழில் எழுதியிருக்கிறேன். ஒருமுறை அவரிடம் நான் இப்படி கேட்டேன் “சுப்புரத்தினதாசன் என்று நீண்ட பெயரைக்கொண்ட தாங்கள், சுரதா என்று சுருக்கியதற்கு என்ன காரணம்?” என்றேன்.

அதற்கு அவர் இவ்வாறாகப் பதில் சொன்னார் : ” நண்பர்களுக்கு அஞ்சலட்டையில் கடிதங்கள் எழுதுவது என் வழக்கம். அது சிறிதாக இருந்த காரணத்தால் கடைசி வரியில் கையெழுத்துப் போடுவதற்கு, என் பெயர் எழுதுவதற்கு இடமில்லாமல் இருந்தது. எனவே இடப்பற்றாக்குறை காரணமாக சுப்புரத்தினதாசன் என்று எழுதுவதற்குப் பதிலாக, இருக்கின்ற குறைந்தபட்ச இடத்தில் அந்த சுப்புரத்தினதாசன் என்ற பெயரைச் ‘சுரதா’ என்று சுருக்கிப் போடத் தொடங்கினேன். அதுவே என் பெயராக நிலைத்து விட்டது.” இவ்வாறாகத் தான் என்னிடம் ஒருமுறை அவர் தெரிவித்தார்.

திராவிடத் தாத்தா எஸ்டி சோமசுந்தரம் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவதுண்டு. அங்கு நானும் இருந்தபோது பல முறை உரையாடிக்கொள்வோம். அத்தகு தருணத்தின்போதுதான் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். ஆக, சுப்புரத்தினதாசன் பெயரைச் சுருக்கிய பெருமை அஞ்சலட்டையையே சாரும்.

அவரின் மகன் கல்லாடன் என் நண்பர். அவரிடமும் ‘கல்லாடன்’ என்ற பெயர்க் காரணத்தைக் கேட்டேன். என் தந்தைக்கு ‘கல்லாடம்’ நூல் பிடித்தமானது. அதனால் தான் எனக்கு இந்த பெயரை வைத்துவிட்டார். இந்த பெயர் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே ‘சக்கரவர்த்தி’ என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டேன்” என்றார்.

நூருல்லா ஆர். செய்தியாளன்

20-06-2021.