நோய் எதிர்ப்பு மருந்துகளின் விற்பனை கன்னாபின்னாவென்று எகிறிடுச்சு!

நோய் எதிர்ப்பு மருந்துகளின் விற்பனை கன்னாபின்னாவென்று எகிறிடுச்சு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் பேர்கள் என்றால், கொரோனா தொற்று வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். ஒருமுறை கொரோனா வந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை மாதங்கள் நம் உடலில் இருக்கும் என்பதும் இன்னும் சரி வர தெரியவில்லை. அதனால், நம் தினசரி உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதுதான் இப்போதைய தீர்வு. அதே நேரம் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். உணவுகளால் கொரோனாவை சரி செய்ய முடியாது. ஆனால், கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்றெல்லாம் ஒரு சாரார் உரத்தக்குரலில் சொல்வதை பொருட்படுத்தாமல் நம் நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களை அதிகம் உபயோகிப்போரின் எண்ணிக்கைதான் எகிறி இருக்கிறதாம். கடந்த ஓராண்டில் மட்டும் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகளின் விற்பனை 15,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது. தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனையை அதிகரித்துள்ளது. ரெம்டெசிவிர், ஃபவிபிரவிர், அஷித்ரோமைசின், உள்ளிட்ட மருந்து பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை மருந்து மற்றும் வேதிப் பொருட்களுக்கான அகில இந்திய அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 மே மாதம் வரையிலான காலத்தில் ஃபவிபிரவிர் மருந்து 1,200 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகியுள்ளது. இதே காலத்தில் ரெம்டெசிவிர் மருந்து 883 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கப்பட்டுள்ளது. அஷித்ரோமைசின் மருந்து கடந்த ஆண்டை விட 38 விழுக்காடு அதிகமாகி அதாவது 992 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. டாக்ஸிசைக்கிளின் மருந்து 85 கோடி ரூபாய் அளவுக்கு அதாவது முந்தைய ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக விற்பனையாகியுள்ளது. ஐவர்மெக்டின் மருந்தின் விற்பனை 10 மடங்கு அதிகரித்து 237 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் விட்டமின் உள்ளிட்ட மருந்து பொருட்கள் 14,587 கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 விழுக்காடு அதிகமாகும். குறிப்பாக விட்டமின் டி மருந்து பொருட்கள் மட்டும் 817 கோடி ரூபாய் அளவுக்கு அதாவது 40% அதிகமாக விற்பனையாகியுள்ளது. ஷிங்க் மருந்து பொருட்கள் சுமார் மும்மடங்கு அதிகமாக அதாவது ரூ.183 கோடிக்கு ஓராண்டில் விற்பனையாகியுள்ளது ஆய்வில் தெரியவந்தது.

error: Content is protected !!