“ஜகமே தந்திரம்” இணையத்தில் கூடிய ரசிகர்கள் சந்திப்பு பிரமாண்ட விழா !

“ஜகமே தந்திரம்”  இணையத்தில் கூடிய ரசிகர்கள் சந்திப்பு பிரமாண்ட விழா !

வ்வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமான “ஜகமே தந்திரம்” ஜூன் 18 அன்று Netflix தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரமாண்டமாக வெளியாகி விட்டது. இபபடத்தின் வெளியீட்டை ஒட்டி நேற்று நடிகர்கள், படக்குழுவினர், இணையம் வழியே பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு, சந்தோஷத்துடன் பதில்களை பகிர்ந்துகொண்டனர். ஒரு கலகலப்பான நிகழ்வாக நடந்தேறிய, இந்நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சில கருத்துகள் இதோ:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துகொண்டது…

என்னுடைய திரைப்பயணத்தில் எனக்கு மிகவும் முக்கியமான படம் “ஜகமே தந்திரம்”. இது எனது கனவு படம். இப்படத்தின் மையத்தை 2014லேயே உருவாக்கிவிட்டேன் ஆனால் 2018ல் தான் படம் உருவானது. படத்தின் கதை உலகம் முழுக்க நடப்பதாக இருப்பதால், உலகின் பல முனைகளிலிருந்தும் திறமையாளர்கள் பலர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார்கள். அனைவரும் மிகவும் கடுமையான உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம் பல தடைகள் கடந்து படம் இப்போது திரைக்கு வருவது மகிழ்ச்சி. இப்படதின் இசை மிகவும் ஸ்பெஷலானது. எனது இயக்கத்தில் பேட்டை படம் தவிர எனது அனைத்து படங்களிலும் இசை சந்தோஷ் நாராயணன் தான். இந்தப்படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அவர் உடன் இருந்திருக்கிறார். இப்படத்திற்காக நிறைய புதுவிதமான ஒலிகளை உருவாக்கியிருக்கிறார். அவரின் பாடல்கள் தான் படத்திற்கு பெரிய விளம்பரத்தை பெற்று தந்துள்ளது. அவரது இசை படத்தின் தன்மையை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இப்படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த பலர் பணியாற்றியுள்ளார்கள். படத்தின் கதை நீயூயார்க்கில் நடப்பதால் அங்கு நடிப்பதற்கு, ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர், ஒருவரை தேடினோம். ஜேம்ஸ் காஸ்மோ அவர்கள் அங்கு மிகவும் பிரபலமானவர். அவருக்கு திரைக்கதை அனுப்பினோம். அவருக்கும் பிடித்திருந்தது. அவருடன் வேலை பார்த்தபோது மிக எளிமையாக பழகினார். ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தனுஷ் தான் இப்படத்தின் மிக முக்கியமான தூண். அவரிடம் கதை சொன்னதிலிருந்தே இந்த கதையை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்தப்படம் உருவானதற்கும், இப்போது படம் வெளிவருவது வரை அவரின் பங்கு மிகப்பெரியது. படத்தில் சுருளியாக கலக்கியிருக்கிறார். அவரின் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதிலிருந்து, இந்த படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது Netflix தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரமாண்டமாக வெளியாவது பெரும் மகிழ்ச்சி. படத்திற்கும் பெரிய ஆதரவு தாருங்கள். அனைவரும் படத்தை கண்டுகளியுங்கள் நன்றி என்றார்.

நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பகிர்ந்துகொண்டது…

முதலில் இந்த படத்திற்கு ஆடிசன் நடந்தது ஆனால் அப்போது நான் ரஜினி படம் செய்கிறேன் இப்போது படம் செய்யவில்லை என்று இயக்குநர் சொன்னார். என்னை நிராகரிப்பதற்கு தான் அப்படி சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு பிறகு பல மாதங்கள் கழித்து என்னை மீண்டும் கூப்பிட்டார்கள். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. தனுஷ் மிக எளிமையாக பழகும் அற்புதமான நடிகர். அவரின் உழைப்பை உடனிருந்து பார்க்க பிரமிப்பாக இருந்தது. இப்போது படம் உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவருவது இன்னும் பெரிய மகிழ்ச்சி.

நடிகர் கலையரசன் பகிர்ந்துகொண்டது…

இப்படத்தில் தனுஷுடன் பணிபுரிந்ததது நல்ல அனுபவமாக இருந்தது. அவருடன் எனக்கு காட்சிகள் எதுவும் இல்லை ஆனால் அவர் நடிக்கும் போது பார்த்தேன். ரொம்ப அற்புதமாக நடித்தார். இப்படத்தில் நான் பங்கு கொண்டதும், அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பும் மறக்க முடியாத அனுபவம் என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்துகொண்டது…

இந்த படத்தின் அனுபவமே மிக அற்புதமாக இருந்தது. நான்கைந்து வருடங்களாகவே இந்தப்படத்தில் உழைத்து கொண்டிருந்தோம். வெகு சில படங்களே இப்படி அமையும், நிறைய நேரம் எடுத்து மிக அழகாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த நேரத்தில் என்னுடன் பணிபுரிந்த இசைகலைஞர்கள் பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றிகள். படம் இப்போது ரசிகர்களின் பார்வைக்கு வருவது மகிழ்ச்சி. எல்லோரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.

பாடகி தீ ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டது…

நானும் பாடிய பாட்டு உலகம் முழுதும் ஹிட்டாகியது பெரும் மகிழ்ச்சி. அவ்வப்போது அப்பா பாடல் குறித்து கேட்பார். கருத்துகள் சொல்வேன் ரகிட ரகிட பாடலுக்கு முன்னால் வேறொரு பாடல் தான் இருந்தது அது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை எனக்கூறினேன் அப்புறம் ரகிட ரகிட நல்லாருக்கும் என்று சொன்னேன். ரகிட ரகிட அப்படிதான் உருவாகியது. அப்பாவுடன் பணிபுரிவது எப்பவும் மகிழ்ச்சி தான். நிறைய திட்டுவார் அதே மாதிரி நிறைய பாராட்டவும் செய்வார் என்றார்.

முத்தாய்ப்பாக ரசிகர்கள் விளையாட்டாக பலகேள்விக்கணைகள் தொடுக்க படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியுடன் பதிலளிக்க, படத்தின் மேக்கிங் பற்றிய வீடியோ ஒளிபரப்பு என இவ்விழா அற்புதமாக நடந்தேறியது. “ஜகமே தந்திரம்” ரசிகர்களுக்காக ப்ரத்யேகாமாக இன்று ஜூன் 18 அன்று Netflix தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரமாண்டமாக வெளியானது.

https://www.youtube.com/watch?v=DDHSGfbUy8w

error: Content is protected !!