December 2, 2022

’அரட்டை இல்லம்’ எனும் கிளப் ஹவுஸ் ஏற்படுத்தும் பிரச்சினை?! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

புதிய தொழில்நுட்பங்களின் வருகையே எப்போதும் இணைய உலகை கலகலப்பாக வைத்திருக்கும். கலகலப்பு கைகலப்பு ஆவதை இணைய வழி பேச்சுக்கள் குறைப்பதாலேயே அரசுகள் அவற்றை ஊக்குவிக்கின்றன. ஆனாலும் சமூக ஊடகங்கள் எனும் இணைய வெளி எப்போதும் கொதி நிலையிலேயே இருப்பதையே சமூக ஊடக நிறுவனங்கள் விரும்புகின்றனவோ? தெரியவில்லை. ஒவ்வொரு அரசும் ஜனநாயகப்பூர்வமான, அமைதியான வழியில் நாட்டிலுள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் பேசுவதையே விரும்புகின்றன. எனவே, சமூக ஊடகங்களின் வளர்ச்சியை, அவற்றின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இந்நிலையில் கிளப் ஹவுஸ் எனும் செயலி அதீதமாக வளர்ந்து தற்போது சமூக ஊடகங்களின் சன்னி லியோனே வாக பரிணமித்துள்ளது. சென்ற மாதம் 2 மில்லியன் பேர் தங்களது ஆண்டிராய்ட் செல்ஃபோனில் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஏன் இந்த திடீர் வளர்ச்சி? புதிய தொழில்நுட்பம், புதிய அனுபவம். வானொலியில் நீங்கள் கேட்கத்தான் முடியும். தொலைக்காட்சியிலும், யூ டியூப்பிலும் கேட்கத்தான் முடியும். காணொலி கலந்துரையாடல்களில் கலந்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சிறிய குழுவிற்குள்ளேயே பேச முடியும். அதுவும் ஒருமுறை ஒரு தலைப்பிலேயே பேசுவார்கள். ஆனால் கிளப் ஹவுஸ்சில் பல அறைகள் உண்டு. வானொலியில் நிலையங்களை மாற்றி விடுவது போல இங்கு அறைகளை மாற்றலாம். அங்கு நடக்கும் விவாதங்களில் நீங்களும் பேசலாம். இதில் ஒலி மட்டுமே உண்டு. ஒளி கிடையாது; அதாவது வீடியோ கிடையாது. ஆயினும் நீங்கள் பேச, கேட்க சில நிமிடங்கள் கிடைக்கும், அதுவே பல பேருக்கு மகிழ்ச்சி. தன் குரலை மற்றவர்கள் இடத்தில் கொண்டு சேர்ப்பது எளிதாக்கி அதற்கு இந்தச் செயலி வழி செய்கிறது என்பது முக்கியமானது. மேலும் இந்த பொது முடக்க காலத்தில் செல்ஃபோனில் நண்பர்களிடம் மட்டும்தான் பேச முடியும். கிளப் ஹவுஸ் அப்படியல்ல. யாரிடமும் பேசலாம். எந்த அறையில் என்ன விஷயம் பேசப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அரட்டைக் கச்சேரிக்கு செம சான்ஸ்!

இருப்பினும் நிபுணர்கள் இச்செயலி குறித்து கவலை தெரிவித்து வருகிறார்கள். காரணம் இதிலுள்ள ஆபத்துகள். முதலாவது இச்செயலியிலுள்ள தகவல்கள், தனி நபர் விவரங்கள் ஆகியவற்றை யார் வேண்டுமானாலும் காண இயலும். இது வானொலி போன்றது. பேச்சுக்கள் நிறைந்தது. இதை கண்காணிப்பது கடினம். எழுத்துக்களால் எழுதுவதை, அதுவும் சட்டவிரோத எழுத்துக்களை நீக்கச் சொல்லலாம். பேச்சில் ஒரிரண்டு நிமிடங்களில் முடிந்து போவதை தடுக்க முடியாது. மேலும் இவற்றை பிரதி எடுக்கவும் முடியும். பரப்ப முடியும். எழுத்தை விட உணர்ச்சிகரமான பேச்சு ஏற்படுத்தும் ஆபத்து அதிகம். சமூக ஊடகங்களில் எழுத்தையும், காணொலிகளையும் கட்டுப்படுத்தவே திணறும் வேளையில் மேலும் ஒரு சவாலாக வந்துள்ளது அரட்டை அறை எனும் கிளப் ஹவுஸ். மேலும் இதிலுள்ள தரவுகளையார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றால், அதில் பதிவு செய்து வைக்கப்படுவது உறுப்பினருக்கே தெரியாது. அவரது அனுமதியின்றியே அது பதிவு செய்து வைக்கப்படுகிறது. பகிரப்படுகிறது.

கிளப் ஹவுஸ்சின் அம்சங்கள் ஐரோப்பிய பொதுத் தரவு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எனும் ஜி டி பி ஆர் விதிகளுக்கு உட்பட்டு வரவில்லை. அத்தோடு இல்லாமல் இச் செயலியின் தளத்தை சீன நிறுவனமான அகோரா (நம்மூரில் அகோரம் என்றாலும், அகோரிகள் என்றாலும் என்னப் பொருள்?) எனும் ஸ்டார்ட்-அப் நிர்வகித்து வருகிறதாம். அதாவது எளிதாக ஒரு சமூகத்தை உளவு பார்க்க விரும்பினால் கிளப் ஹவுஸ் உறுப்பினராகி விட்டால் போதும். யாரை வைத்து எதைக் குழப்பலாம் என்பது தெரிந்து விடும். அது தவிர தனிநபர் தகவல்களை பயன்படுத்தும் விவகாரமே இந்தியாவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதில் ஒருவருடைய கருத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? உறுப்பினரின் தகவல்கள் மட்டுமின்றி அவருடைய தொடர்புகளின் விவரங்களையும் சேர்த்தே கபளீகரம் செய்வார்களாம். உறுப்பினர் இதில் சேரும் போது தங்களுடைய தொடர்பில் இருக்கும் நபர்களின் விவரங்களையும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரால் தங்களுக்கு விருப்பமானவர்களை இதில் சேர அழைப்பு விடுக்க முடியாது. ஆக, இதில் சேராமலே ஒருவர் தன்னுடைய தகவல் பறிபோவதைத் தடுக்க முடியாது. எப்போதும் ஃபேக் ஐடி, புரொஃபைல் வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினையில்லை. உண்மை விளம்பிகளுக்குத்தான் பிரச்சினை.

ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களும் இப்போது அரட்டை அரங்கங்களை துவங்கி வருகின்றன. இரண்டு வழிகளில் அவை இதைச் செய்யலாம். ஒன்று ஏற்கனவே கிளப் ஹவுச் போல இருக்கும் செயலிகளை வாங்குவது அல்லது தங்களது சொந்தத் தயாரிப்பாக ஒன்றை ஏற்படுத்துவது. இப்போது இரண்டாவது வகையை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கு முன்னும் இப்படி நடந்துள்ளது. ஜூம் செயலி நுழைந்த போது கூகுள் மீட் டை அறிமுகம் செய்தது. டிக் டாக் பிரபலமானபோது இன்ஸ்ட்டாகிராம் ரீல்ஸ்சை ஆரம்பித்தது. கிளப் ஹவுஸ்சிற்கு போட்டியாக டிவிட்டர் ஸ்பேசஸ்- சை துவங்க, ஃபேஸ்புக்கும் இது போன்ற அம்சத்தை கொண்டு வர திட்டமிடுகிறது. இன்னும் பல சமூக ஊடகங்கள் இப்போட்டியில் குதிக்கின்றனவாம். இவை வெல்கின்றனவா எனும் கேள்வி ஒருபுறம் இருக்க இந்த ஏப்ரலில் கிளப் ஹவுஸ்சின் மதிப்பு $ 4 பில்லியனாக உயர்ந்துள்ளது.

எத்தனையோ தொழில் நுட்பங்கள் வரலாம். ஆனால் அவை எல்லாமே பாதுகாப்பும், தரவுகளுக்கான காப்பும், தனிப்பட்டத் தகவல்களுக்கான மதிப்பையும் தர வேண்டும் என்பது கிடையாது. ஆனால் அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமானால் அதற்கான கோரிக்கையும் வலுக்கும். அப்போது இன்னொரு தொழில்நுட்பம் வந்து விடும். இதொரு பரமபத விளையாட்டு. ஆயினும் பயனாளர்கள் தங்களை அறிவார்ந்தவர்களாக வைத்திருந்தால் இந்த விளையாட்டுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அரட்டை இல்லத்தின் லொட லொடா சப்தம் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு