October 17, 2021

நாசா திட்டப்படி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நம்ம தமிழக பெண்!

நம் பாரதத்தைப் பூர்வீகமாக கொண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் உட்பட பலர் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டங்களில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இந்த திட்டத்தை தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்னாடகாவின் சுவாதி மோகன் வழிநடத்தி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த வரிசையில் தற்போது தமிழகத்தின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி அய்யர், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

கடந்த 1969–ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலா 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் என்று நாசா பெயரிட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் ஓரையன் விண்கலம் ஆளில்லாமல் நிலவின் விண்வெளி பகுதிக்கு செலுத்தப்பட்டு, பூமிக்கு திரும்ப உள்ளது. இதன் பிறகு ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் வரும் 2023 அல்லது 2024-ம் ஆண்டில் ஓரையன் விண்கலம்,விண்வெளி வீரர்களுடன் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான ராக்கெட் தயாரிப்பு திட்டப் பணிகளை தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த சுபாஷினி அய்யர் வழிநடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்த உள்ளது. நிலவை தாண்டி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் இந்த திட்டம் முன்னோடியாக இருக்கும். ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் ஓரையன் விண்கலம் 4.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் ஆளில்லாமல் செலுத்தப்பட உள்ளது. இது 3 வார பயண திட்டமாகும்.