October 17, 2021

நீட் பாதிப்பு & மாற்று வழி குறித்து விசாரிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் – வீடியோ!

ருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை – சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நீதியரசர் ராஜன் அவர்கள் பல கூட்டங்களில்,‘மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு என்பது தேவையில்லாது.. அறிவுக்கும், தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை. பள்ளியில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இன்று சமூகத்தில் பெரிய அளவில் உள்ளனர். தேர்வில் கொடுக்கும் மதிப்பெண்ணை அளவுகோலாக எடுத்துக்கொள்ள கூடாது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்கூடங்களுக்கு செல்ல வாய்ப்பற்ற நிலையில் இருந்தவர்கள்தான், இன்று அதிக அளவில் கல்விக்கூடங்களில் படிக்கின்றனர். பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோமோ, அந்த நிலைக்கு இன்னும் 20, 30 ஆண்டுகளில் நீட் தேர்வு கொண்டு சென்றுவிடும். தற்போது மருத்துவக் கல்விக்கு கொண்டு வந்துள்ள நீட், இன்னும் கொஞ்சம் நாளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் வந்துவிடும். அதன்பின் பிளஸ் 2, 10-ம் வகுப்பு மற்றும் எல்கேஜி வகுப்புக்குக்கூட நீட் தேர்வு வரக்கூடிய நிலை ஏற்படும்’ என்றெல்லாம் பேசி எச்சரிக்கை விடுத்தவர் என்பதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பை வழங்கியவரிவர் என்பதும் சட்டத்துறைச் செயலராக இருந்தபோது மெட்ராஸ் என்பதை சென்னை என மாற்றிய சட்டம் இயற்றியவர் என்பதுடன் ஈவ் டீசிங் சட்டமும் இவர் இயற்றியதே என்பதும் குறிப்பிடத்தக்கது .

மத்திய அரசின் பள்ளிக் கல்வித்துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு குறித்து அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், அதற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழகத்திற்கு நீட் (NEET ) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு இதோ:

”மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்கள், எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நம் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும், தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான பல கட்டப் போராட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்த நீட் தேர்வு முறை அந்த சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவர் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யும் வகையில் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.