February 8, 2023

மாமணியும் கனவு இல்லமும்!

மிழ்நாடு அரசு ஏற்கெனவே வழங்கும் “கலைமாணி” விருது எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி, நேற்று வெளியிட்ட அறிவிப்பில் மூன்று எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருதும் 5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய அரசு, கலைமாமணி விருதையே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அறிவிக்காமல் பிறகு மொத்தமாக வழங்கியது. பின்னரும்கூட, இரண்டு ஆண்டுகள் சேர்த்து வழங்கியிருக்கிறது. கலைமாமணி விருது வழங்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அது வழங்கப்படும் விதமும் சேர்த்து அதன் மீதான மதிப்பை நிகர் செய்யவில்லை என்றே பரவலாக உணரப்படுகிறது. முதலில் அரசு, இந்த விருது வழங்கும் முறையை ஒழுங்குபடுத்தி அதற்கான முழு மதிப்பை மீட்க வேண்டும்.

புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இலக்கிய மாமணி விருது மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு எதிரான மிதமானது முதல் தீவிரமானது வரையிலான விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இங்கே பெரிதும் குழுக்கள் சார்ந்தே எழுத்தாளர்கள் செயல்படுகிறார்கள். விமர்சனங்களைப் பற்றி யோசிக்காமல், தகுதியான எழுத்தாளருக்கு விருது அளிக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அல்லது ஓரிரு தரப்புகளைத் திருப்திப்படுத்துவது போல விருதளிக்க வேண்டும். இதுதான் அரசுக்கான சாத்தியம். ஏதேனும் ஒரு வகையில், அரசாங்க வட்டாரத்தில் செல்வாக்கு செலுத்தும் எழுத்தாளர் குழுக்கள் மறைமுகமாக விருதுகளைத் தீர்மானிக்கும் போக்கை அறவே நீக்க வேண்டும். மேலும், நோபல் அல்லது ஞானபீடம் குறைந்து எதையும் வாங்குது இல்லை என்பது போன்ற எண்ணத்துடன் இருப்பவர்கள், தமிழ்நாடு அரசு வழங்கும் விருதை ஏற்பார்களா என்பதெல்லாம் தனிப் பிரச்சினை.

ஞானபீடம், சாகித்ய அகாதெமி விருதுகள், “புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின்” விருதுகளைப் பெற்றவர்களுக்கு “கனவு இல்லம்” என்பது அரசுக்கான பெறுமதிப்பை உறுதி செய்யும் செலவாக முற்றிலும் இருக்க சாத்தியமில்லை. அப்படியான விருதுகளைப் பெற்று, சமூகத்தின் சிந்தனை வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆனால் பொருளதார ரீதியாக அதற்குரிய வளத்துடன் இல்லை என்ற படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து “கனவு இல்லம்” வழங்கலாம். பல “முன்னணி” எழுத்தாளர்கள் பெரும்பாலும் அரசு அல்லது வங்கி வேலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். வாழ்வின் குறைந்தபட்ச முதல் அதிகபட்ச வரையிலான வளங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு இன்னொரு வீடு என்பது அரசே “செல்வம்” சேர்த்து கொடுப்பது போலத்தான்.

இதுகாட்டிலும், மதுரையில் அமைக்கப்படுவதாக அறிவித்தது போல நவீன நூலகங்களை முக்கிய நகரங்களில் அமைப்பது, தமிழ்ப் படைப்புலகம் சார்ந்த டிஜிட்டல் முறையிலான காப்பகம் அமைப்பது போன்ற பல யோசனைகளைப் பரிசீலிக்கலாம். சாகித்ய அகாதெமி விருதுகள் அளிக்கப்படுவது குறித்து எழும் விமர்சனங்கள் அனைவரும் அறிந்ததே. தேர்வு சார்ந்த உள்வட்டத் தகவல்களும் படைப்புலகத்துக்கு மதிப்பு கூட்டுவதாக இல்லை. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை இரண்டே எழுத்தாளர்கள்தான் ஞானபீட விருதைப் பெற்றிருக்கிறார்கள். அகிலன் (1975) பெற்று பல்லாண்டுகள் கழித்துதான் ஜெயகாந்தன் (2002) பெற்றார்.

திரைப்படத் துறையிலும் இலக்கியத்திலும் கேரளம் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் விருதுகளைப் பெற்றதற்கு, “முன்னெடுத்துச் செல்லும் அழுத்தக் குழுக்கள்” (lobbying groups) இயங்கியதும் முக்கியக் காரணம். அதுபோல, தமிழிலும் சிறந்த படைப்பாளிகளுக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத்தருவதில் ஒருமித்த கருத்துடன் அழுத்தக் குழுக்கள் உருவாக வேண்டும். அரசின் பிரதிநிதிகள் மற்றும் படைப்பாளிகள் இடம்பெறும் ஆலோசனைக் குழுவை உருவாக்கி, சிறந்த படைப்பாளுமைகளை தேசிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கலாம். இந்நோக்கில், அரசு முன்முயற்சி எடுக்ககலாம்.

கேரளத்தில், எழுத்தாளர்கள் வந்தால் எழுந்து நிற்கிறார்கள். நடந்தால் நாற்காலியுடன் பின்னால் செல்கிறார்கள். உட்கார்ந்தால் இளநீர் கொடுத்து விசிறுகிறார்கள்… தமிழ்நாட்டில்தான் எழுத்தாளனுக்கு மதிப்பே இல்லை என்பது போலப் பேசுவதெல்லாம் கொடுமை. எழுத்தாளர்கள் மட்டுமா… தமிழ்நாட்டில் ஆகச் சிறந்த கலைஞர்களும் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்கள். எழுத்துலகம் குமுறி நியாயம் செய்துவிட்டதா, என்ன? ஒரு எழுத்தாளனுக்கு உரிய மதிப்பை உருவாக்குவதில் இங்கே இன்னொரு எழுத்தாளானே தயங்குகிறான். ஒன்று, போற்றிப் பாடுவது. இல்லையெனில், தூற்றி எறிவது. இந்த இருமுனையில்தானே நிற்கிறார்கள்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை சொல்பவர்களுக்கும் இவையெல்லாம் தெரியாததல்ல. எல்லாத் தரப்புகளையும் தங்கள் அரசு திருப்தி செய்ததாக இருக்க வேண்டும் என்று முதல்வர் நினைக்கலாம். அது எந்த அரசுக்கும், எப்போதும் சாத்தியமில்லை.

இளையபெருமாள் சுகதேவ்

பட விளக்கம்: எழுத்தாளர்களின் போராட்டம் சார்ந்த பிரதிநிதித்துவப் படம். தமிழ்ப் படைப்புலகிற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இல்லை.