October 17, 2021

லட்சத்தீவு நிர்வாக அதிகாரி சர்ச்சை : கேரள சட்டசபை கண்டனத் தீர்மானம்!

ட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் பிரபுல் படேல் நியமிக்கப்பட்டதை அடுத்து அவரது நடவடிக்கைகள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது, அங்கு வழக்கத்தில் இல்லாத மது விற்பனையை அறிமுகப்படுத்தியது என்று பிரபுல் படேலின் செயற்பாட்டிற்கு கேரள மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்தத் தீர்மானத்தை அறிமுகம் செய்து முதல்வர் பினராயி விஜயன் பேசிய போது, “”லட்சத்தீவில் வசிக்கும் மக்கள் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறார்கள். அவரின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை அங்குள்ள நிர்வாக அதிகாரியின் சர்வாதிகாரப் போக்கால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் எதிர்ப்பை மீறி நிர்வாகி அதிகாரி செயல்பட்டு வருகிறார். மக்களின் உணவுப் பழக்கம், வாழ்வாதாரம் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

கேரள மாநிலத்துடன் லட்சத்தீவு நீண்ட காலத்தோடு தொடர்புடையது. ஆனால், சங்பரிவார் அமைப்புகள் இந்தத் தீவைத் தங்களின் கொள்கைகளைப் பரிசோதிக்கும் சோதனைக்கூடமாகப் பயன்படுத்த முயல்கின்றன. இந்த தேசத்தின் மக்கள் இது நடக்க அனுமதிக்க மாட்டார்கள். லட்சத்தீவு மக்கள் அமைதியை விரும்புபவர்கள். ஆனால், நிர்வாக அதிகாரி எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களை ஒதுக்கிவைக்கும் வகையில் இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில், மக்களின் வாழ்வாதாரம் கூட அச்சுறுத்தப்படுகிறது.

தென்னை மரங்கள் காவி நிறப் பூச்சு பூசப்படுகின்றன. இதை எந்தக் காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது. நிர்வாக அதிகாரியை மத்திய அரசு திரும்பப் பெற்று, அவரின் சர்ச்சைக்குரிய முடிவுகள், உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ரு விளக்கம் சொல்லி பினராயி விஜயன் அறிமுகம் செய்த இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் நிறைவேறியது.