October 17, 2021

PPE Kit அணிந்து சென்று நேரில் நலம் விசாரித்தேன் – மு.க.ஸ்டாலின் பேட்டி! -வீடியோ

மிழக அளவில் சமீபகாலமாக அதிகமான தொற்றாளிகள் இருக்கும் மாவட்டமாக அறியப்படும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து சென்று நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நலம் விசாரித்தார். இது குறித்து #Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.05.2021) நேரில் ஆய்வு செய்தார். பின்னர், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று (30.5.2021) கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி / இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். முழு பாதுகாப்பு கவச உடை (PPE Kit) அணிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகளின் நிலை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில்தான் அதிகளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை. எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் ஆட்சிக்கு இருக்கும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிராமங்களில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் 2 இடங்களில் சிறப்பு சித்தா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் இதுவரை 5.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை புறக்கணிக்கப்பட்டதாக சிலர் சொல்கின்றனர், அவர்களுக்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க விரும்ப வில்லை. அவர்கள் இந்த அரசு ஏற்படுத்தியுள்ள கட்டமைப்புகளை பார்வையிட வேண்டும்.

பிபிஇ கிட் அணிந்து மருத்துவர்கள் பணிகளை செய்வது பாராட்டுக்குரியது. மருத்துவர்கள், பணியாளர்களை ஊக்கப்படுத்தவே நானும் பிபிஇ அணிந்து ஆய்வு செய்தேன். கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்த அமைச்சர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர். சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எங்களுக்கு ஓட்டுப்போடாத மக்கள் வருத்தப்படும் வகையில் எங்கள் பணி இருக்கும்” எனக் கூறினார்.