October 17, 2021

பேச நேரம் கூட போதாது _ ஜி எஸ் டி கூட்டம் குறித்து பழனிவேல் தியாகராஜன்!

ரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது  பழனிவேல் தியாகராஜன் சொன்னது:

நேற்று நடந்த கூட்டத்தில் ஏகப்பட்ட நிதியமைச்சர்கள் இந்தியில் பேசினார்கள். எனக்கு ஓரளவுக்கு இந்தி புரியுமே தவிர அதிக அளவு தெரியாது. அருகே நிதித்துறை செயலாளர் இருந்ததால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். நான் ஆங்கிலத்தில் பேசியதால் இந்தி மட்டுமே தெரிந்த நிதியமைச்சர்களுக்கு நான் பேசுவது புரிந்து இருக்காது. இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் இருப்பது ஆலோசனை கூட்டத்தில் பயன்பாட்டை குறைத்து விடும். நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு கருவிகள் கொடுக்கப்பட்டிருப்பது போல, இங்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன்.

இத்தனைக்கும்மாநில அரசுகளிடம் வரிப்பணத்தைப் பெற்று அதையே ஒன்றிய அரசு திரும்பத் தருகிறது. தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிக அளவில் வரிப்பணத்தை விட்டு த்தருகின்றன. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் குறித்து பிற மாநில அமைச்சர்கள் எனக்கு அறிவுறுத்தல்கள் அளித்துள்ளனர். ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு வாக்குகள் அளிக்கப்படவேண்டும்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எங்களுடைய மறுப்பை பதிவு செய்துள்ளோம். தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை. இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் நான் மாநிலத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், முன்பு யூனியன் பிரதேசமாக இருந்து இப்போது மாநிலமாக இருக்கிறது. மேற்கு கரையில் உள்ள சிறு மாநிலம் அது. அந்த மாநிலத்தின் மக்கள்தொகை மதுரை மாவட்ட மக்கள் தொகைக்கு பாதி. மதுரை மாவட்டத்தில் சுமார் 32 லட்சம் மக்கள் இருக்கிறார்கள் . அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 15 அல்லது 16 லட்சம் தான் இருக்கும். ஆனால் அந்த மாநில பிரதிநிதி, பேசியது பிற மாநிலங்களை விட 10 மடங்கு அதிகம். என் அரசியல் வாழ்க்கையின் துயரம் அவர் பேசுவதை கேட்டது. ஏனென்றால் எந்த ஒரு பலனும் இல்லாத பேச்சு. எப்படி இது ஜனநாயக முறைப்படி நியாயம்?

ஆனாலும் மாநிலங்களின் உரிமையைப் பாதுகாப்பது குறித்துப் பேசினேன். அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை. ஜி.எஸ்.டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்கட்டான சூழலில் தமிழகத்திற்கு 12,000 கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி கட்டமைப்பே சரியில்லை எனக் கூறுகிறோம். இதில் பெட்ரோலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை. கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ உபகரணங்களுக்கு சில மாதங்களாவது வரிவிலக்கு தருமாறு கோரினேன். “ இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.