January 29, 2023

கொரோனா அறிகுறி வந்த பிறகு செய்யும் கால தாமதமே உயிருக்கு ஆபத்து!

ம்பது வயது மதிக்கதக்க ஒருவர் மூச்சு திணறலோடு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறார். பரிசோதித்ததில் அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 78% மட்டுமே இருக்கிறது. சிடி ஸ்கேன் (CT Scan) அவருடைய நுரையீரல் 50% மேல் பாதிப்படைந்துள்ளதை காட்டுகிறது. என்ன நடந்தது என்று கேட்டபோது தனக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தொண்டை வலியும், லேசான காய்ச்சலும் இருந்தது. கஷாயங்கள் சிலவற்றை குடித்தேன். அருகிலுள்ள மெடிக்கல் ஷாப்பில் சில மாத்திரைகள் வாங்கி உட்கொண்டேன். இரு தினங்களிலேயே குணமடைந்துவிட்டேன். நேற்று இரவிலிருந்த லேசாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இன்று காலை முதல் அதிகமாகிவிட்டது என்றார். கோவிட் டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, இரண்டு வாரங்கள் மருத்துவமையில் அடைத்துவிடுவார்கள் (முன்னதாக சிறைசாலைக்கு பயன்படுத்தும் வார்த்தை) என்று பயந்துகொண்டு எடுக்கவில்லை என்கிறார். ஓரிரு நாளில் இறந்து விடுகிறார்.பெரும்பாலான மருத்துவமனைகளில் அன்றாடம் இது போன்ற நெஞ்சை உலுக்கும் காட்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மரணம் தவிர்க்க முடியாததா? கோவிட்-19 என்ற புதிய நோயை உலகிற்கு சொன்ன நவீன விஞ்ஞான மருத்துவம் அதற்கான மருந்துகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லையா? என்ன தான் இதற்கெல்லாம் தீர்வு? மரண பயத்துடன் எத்தனை நாள் வாழ்வது? என்றெல்லாம் பல தத்துவார்த்த ரீதியான கேள்விகள் பலர் மனதில் எழுந்து கொண்டிருக்கிறது.

விஞ்ஞான ரீதியாக இந்நோய் குறித்த சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்.இந்நோய் தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில், இந்நோய்க்கான நோய்கூற்றியல் மருத்துவர்களுக்கு சரியாக விளங்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இறந்த நோயாளிகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பல உண்மைகளை மருத்துவ உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. தற்பொழுது கோவிட்-19க்கான நோயியல் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொண்டு, உயிரை காப்பாற்ற நவீன விஞ்ஞான மருத்துவம் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது.

நோய் தொற்று ஏற்பட்டவுடன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். இருமல், காய்ச்சல், தொண்டைவலி, கண்சிவத்தல், வயிற்று போக்கு போன்ற அறிகுறிகள் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கும். ஒருவருக்கு நோய் எதிர்பாற்றல் முறையாக செயல்பட்டால் (கவனிக்கவும் – முறையாக செயல்பட்டால்) இரண்டு, மூன்று நாட்களில் அவர்களுக்கு காய்ச்சல், சளிக்கு பயன்படுத்தும் சாதாரண மருந்துகளின் மூலமாக குணம் கிடைக்கும்.

சிலருக்கு இந்த கொரோனா வைரஸ், நோய் எதிப்பாற்றலை முறையற்று தூண்டிவிடும். இதனால் எதிர்பணுக்கள் பல்கி பெருகி வைரஸை அழிக்க சிலவகை திரவத்தை சுரக்கும். இதனை மருத்துவ உலகம் சைட்டோகைன்ஸ் (Cytokines) என்று பெயரிட்டுள்ளது. இந்த சைட்டோகைன்ஸ் வைரஸை அழிக்க சுரக்கப்பட்டாலும் அவை அதோடு நின்றுவிடுவதில்லை.

“எதிரியை நாம நூறு அடி அடிக்கும் போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும். அந்த அடி கால்ல விழுந்திரிச்சி” என்று ஒரு திரைபடத்தில் வடிவேலு நகைச்சுவையாக சொல்லுவார். இங்கே கொஞ்சம் உல்டாவாக எதிரியை ஒரு அடி அடித்துவிட்டு நம் நுரையீரலை நூறு அடி அடித்துவிடுகிறது நம்முடைய எதிர்பணுக்கள். அதாவது எதிரியை அழிப்பதாக சொல்லி, நம்முடைய எதிர்பணுக்களே நமக்கு துரோகியாக மாறிவிடுகிறது. துரோகிகளால் வீழ்ந்த கதைகள் தானே வரலாற்றில் ஏராளம்.

நம்முடைய நுரையீரலில் கோடிக்கணக்கான சின்னஞ்சிறிய காற்று பைகள் இருக்கும். இதனை ஆல்வியோலை (Alveoli) என்று கூறுவோம். இந்த காற்று பைகளை சுற்றி சிறிய ரத்த நாளங்கள் பின்னிப் பிணைந்திருக்கும். இவ்விடத்தில் தான் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்கள் பரிவர்த்தனை நடைபெறும். அதாவது நுரையீரலில் உள்ள ஆக்சிஜன் ரத்த நாளங்களுக்கு செல்லும், நச்சு காற்றான கார்பன் டை ஆக்ஸைடு, ரத்த நாளங்களிலிருந்து வெறியேறி நுரையீரல் வழியாக வளிமண்டலத்திற்கு செல்லும்.

மேலே சொன்ன சைடோகன்ஸ் (நம் எதிர்பணுக்கள் சுரப்பது) பரிவர்த்தனை நடக்கும் நுரையீரலின் இந்த பகுதியைத்தான் சேதபடுத்துகிறது. காற்று பைகள் சிதைந்து போகும். அதனை சுற்றிஉள்ள ரத்த நாளங்களில் ரத்தம் உரைந்துபோகும். இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் ஏற்றம் தடைபடும். தடைபடும் போது நோயாளிக்கு மூச்சு திணறல் ஏற்படும். ஆக்சிஜன் சாச்சுரேஷன் குறையும்.

இந்த நுரையீரல் சிதைவு கொரானா அறிகுறிகள் தென்பட்ட 4-5 நாட்களில் தொடங்கும். தொடக்கத்திலேயே சைடோகைன்ஸ் சுரத்தலை கட்டுப்படுத்தி, எதிர்பணுக்களை முறைமை படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகளை செலுத்த வேண்டும். மேலும் ரத்த நாளங்களில் உரைந்திருக்கும் ரத்தத்தை கரைக்க சில ரத்தம் உறையா தன்மையை ஏற்படுத்தும் மருந்துகளை செலுத்த வேண்டும்.

இம்மருந்துகளை உரிய நேரத்தில் செலுத்தினால் நோயாளி முழுமையாக மீண்டு வந்துவிடுவார். நுரையீரல் 60% மேல் சேதாரம் அடைந்த பின் மருத்துவமனைக்கு வந்தால் உயிர் பிழைப்பது கடினம். கோவிட்-19 நோய்க் கூற்றியல் தெரியாமல் நோய் எதிர்பாற்றலை அதிகப்படுத்தி இந்நோயை எதிர்கொள்வோம் என்கின்ற வகையில் பல்வேறு வாட்ஸ்ஆப் செய்திகள் உலா வருகின்றன. இவை ஆயுஷ் நிபுணர்களால் எழுதபட்டவையும் அல்ல.திடீர் மருத்துவவர்கள் பலர் உருவாகி தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் வாட்ஸ் ஆப்பில் உலாவ விடுகிறார்கள்.அதில் பல்வேறு மூலிகைகள் குறிப்பாக அதிமதுரம், திப்பிலி, கிராம்பு, மிளகு, கடுக்காய் போன்றவற்றை கஷாயமாக காய்ச்சி குடித்தால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து கொரோனாவிலிருந்து குணமாகலாம் என்றும் தேங்காய் பாலில் கிராம்பு மற்றும் இஞ்சி கலந்து சாப்பிட்டால் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இங்கே வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டியது எதிர்பாற்றல் குறைவால் மரணம் ஏற்படவில்லை,மாறாக தாறுமாறாக செயல்படும் எதிர்பாற்றலே நுரை ஈரல் சிதைவிற்கும்,மரணத்திற்கும் காரணமாக அமைகிறது. இந்த மூலிகைகள் எல்லாம் நாம் நீண்டநெடிய காலமாக பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் கண்டிருக்கிறோம். ஆனால் கோவிட்-19 நோய்க்கு அவை பயன் அளிக்கவில்லை என்பதே கடந்த ஓராண்டு அனுபவத்தின் படிப்பினை.என் சொந்த அனுபவமும் கூட.

நுரையீரல் மற்றும் ரத்த குழாய்கள் கட்டமைப்பு சேதம்(structural damage)ஏற்பட்ட பின்பு புனரமைப்பு மிக கடினம். எனவே நோய் அறிகுறிகள் தோன்றியவுடன் அதனை மறைக்க முற்படாமல் ,சுய வைத்தியம் பார்க்காமல், அருகிலுள்ள மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகள் உட்கொள்வதே உயிர் சேதத்திலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள ஒரே வழி.

Dr.வி.பி.துரை MBBS, DTCD
நுரையீரல் சிகிச்சை நிபுணர் மற்றும் துணை இயக்குனர்,
மருத்துவ பணிகள் (காசம்) குமரி மாவட்டம்.