July 31, 2021

2டிஜி -இனி சந்தையில் கிடைக்கும் : ராஜ்நாத் சிங் தகவல்!

ம் நாட்டின் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) தயாரித்த கோவிட் மருந்தான 2டிஜி-இன் (2DG) முதல் 10,000 பாக்கெட்டுகள் வியாழக்கிழமை முதல் சந்தையில் கிடைக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்திய ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கும் “சர்வீசஸ் இ-ஹெல்த் அசிஸ்டென்ஸ் அண்ட் டெலி-கன்சல்டேஷன் (செஹாட்)” என்ற தளத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். அப்போது ஆயுத படையினரை பாராட்டி பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இது ராணுவத்தினரின் ஆரோக்கியத்திற்காக மிகவும் முக்கியமான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை என்று குறிப்பிட்டார். மேலும் இது மருத்துவமனைகளின் சுமையை குறைக்கும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது, “இந்த கோவிட் அலை முன்பை விட தீவிரமானது மற்றும் மிகவும் ஆபத்தானது. ஆனால் இரண்டாவது அலையின் போதும் பாதுகாப்பு அமைச்சகம் தனது சேவைகளை வழங்கியுள்ளது. டி.ஆர்.டி.ஓ டில்லி, லக்னோ, வாரணாசி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் கோவிட் மருத்துவ மனைகளையும்,ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளையும் அமைத்துள்ளது.

ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்தின் உதவியுடன் டிஆர்டிஓ ஒரு அத்தியாவசிய கோவிட் எதிர்ப்பு மருந்தான 2-டிஜி (2DG) தயாரித்துள்ளது. இந்த மருந்து கோவிட் தொற்றுக்கு எதிராக நல்ல பலனை தருகிறது. இந்த 2-டிஜி மருந்து தங்களுக்கு வேண்டும் என்று பல மாநிலங்களிலிருந்து தகவல்களைப் பெற்று வருகிறேன். முதல்கட்டமாக 2டிஜி – இன் 10,000 பாக்கெட்டுகள் இன்று சந்தைக்கு வருகின்றன என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கோவிட் எதிர்ப்பு மருந்தான 2டிஜி -இன் முதல் தொகுதி பாதுகாப்பு அமைச்சர் சிங் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோரால் மே 17 அன்று வெளியிடப்பட்டது.

இந்த மருந்து எய்ம்ஸ், ஆயுதப்படை மருத்துவமனைகள், டிஆர்டிஓ மருத்துவமனைகள் மற்றும் தேவைப்படும் பிற இடங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி தெரிவித்திருந்தார். இது ஜூன் மாதத்தில் மற்ற மருத்துவமனைகளுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.