போக்சோ வழக்குகளின் நிலையும், சட்டத்தின் போதாமையும் -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

போக்சோ வழக்குகளின் நிலையும், சட்டத்தின் போதாமையும் -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உட்பட பல விதமானக் குற்றங்கள் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் முக்கியக் குற்றங்களில் ஒன்றாக பெருகி வருகிறது. இங்கொன்றும், அங்கொன்றுமாக சில பத்தாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த விவகாரங்கள் இன்று பெருகி விட்டன. குழந்தைகளை தெய்வமாக மதிக்கும் சமூகத்தில் அவர்கள் மீதான வன்முறை என்பது சகித்துக்கொள்ளத்தக்கதல்ல. சிறுவயதில் எல்லோருமே ஏதேனும் ஒரு வன்முறைக்கு ஆளாக நேரிட்டிருக்கலாம். ஆனால் அவை கூட தனிப்பட்ட வன்முறை என்றில்லாமல் இயல்பாக நிகழக்கூடிய ஒன்றாகக் கூட இருக்கலாம். ஒரு திரையரங்கில் கூட்ட நெரிசலில் ஒருவர் சிறுவனையோ, சிறுமையையோ அடித்து விட்டால் அது சூழ்நிலைக்காரணமாக நிகழ்ந்தது என்று கூட வாதிடலாம். ஆனால் தனியே இருவரும் இருக்கையில் அடித்தால் அது குற்றமாகிவிடும். நியாயமாக இருந்தாலும், குழந்தைகள் சந்தர்ப்பச் சூழ்நிலையில் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு மன நல ஆலோசனையே அதிகம் தேவைப்படும். தொடர்ச்சியாக நிகழ்கிறது என்றால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கொண்டு சேர்ப்பார்கள். அதிகபட்சமாக இதுதான் தண்டனை. ஆனால் சீர்திருத்தப்பள்ளிகளின் நிலை இந்தியாவில் நிச்சயம் பாராட்டக்கூடியதாக இல்லை. இங்கு போன பிறகு அதிகமான குற்றங்களை எப்படி செய்வது என்பதைக் கற்கும் நிலையில்தான் இந்நிலையங்கள் இருக்குன்றன. இதைப் பலமுறை சமூக உணர்வு உள்ளோரும், சேவை நிறுவனங்களும், பத்திரிகைகளும் எடுத்துச் சொல்லி விட்டன. ஆயினும் தீர்வுகள் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையின் பிரபலமானப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கம் போல சமூக ஊடகங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இது ஒரு புறம் இருந்தாலும், இத்தகைய வழக்குகளில் பூர்வாங்க ஆதாரம் இருந்தால்தான் குற்றங்களை நிரூபிக்க முடிகிறது. குறிப்பாக போக்சோ வழக்குகளில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு குற்றத்தை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் திரட்ட வேண்டியுள்ளது. இது நிச்சயம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இருக்காது. மேலும் இது போன்ற வழக்குகளில் எவ்வாறு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டு முறைகள் போக்சோ சட்டத்தில் இல்லை என்பதையும் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். அத்துடன் எத்தகையக் குற்றங்கள் போக்சோவின் கீழ் விசாரிக்கப்படலாம் என்பதிலும் குழப்பம். குற்றங்கள் பலவிதமானவை. இவற்றில் எவற்றை ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் விசாரிப்பது என்பதை முடிவு செய்யாமல் வெறும் சட்டத்தால் என்னப்பயன்? மேலை நாடுகளில் நீண்ட காலம் முன்பு அல்லது தொடர்கின்ற வழக்குகளை விசாரிக்க வழிகாட்டு முறைகள் இருக்கின்றன என்பதை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போக்சோ சட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. பொதுவாக பாலியல் குற்றம் நிகழ்ந்து மூன்றாண்டுகளுக்குள் முறையீடு அளிக்கபடாவிட்டால் அவற்றை விசாரிக்க இயலாது என்பது போக்சோ சட்டத்திற்கும் பொருந்துமா என்பது ஒரு முக்கியக் கேள்வியாக உள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர் தனக்கு இழுக்கு என்று கருதினாலோ அல்லது அச்சத்தினாலோ குற்றத்தை வெளியே சொல்லாவிட்டால் குற்றவாளிக்கு வசதியாகிவிடும். எனவே பழைய குற்றமாக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே நியாயம். இத்தகைய மாற்றங்களை போக்சோ சட்டத்தில் செய்யப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் பழையக் குற்றங்களையும் விசாரிக்கும் விதத்தில் இச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற இணையதள கோரிக்கைக்கு ஏராளமான ஆதரவு கிடைத்தது. மத்திய அரசு போக்சோ வழக்குகளுக்கு கால வரையறை எதுவும் கிடையாது என்று விளக்கமளித்தது. ஆயினும் சட்டத்தில் திருத்த செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டிற்கு முன்னதாக நிகழ்ந்தக் குற்றங்களை விசாரிக்கும் விதத்தில் அது அமைய வேண்டும் என்ற கோரிக்கையுள்ளது.

பெண்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த குற்றம் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் ஆளாகியுள்ளார். அந்த வழக்கில் பெண்கள் பலரும் இணைந்து அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணே சாட்சியாக இருப்பதால் அக்பர் தண்டிக்கபடலாம். தமிழகத்தில் சிதம்பரம் பத்மினி வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுவாக பாலியல் வழக்குகளில் ஆதாரம் கொடுப்பது என்பது பாதிக்கப்பட்டவர்களால் இயலாது. பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக எழுப்பியக் குற்றச்சாட்டுக்களை பலரும் ஆதாரித்தாலும் இன்றுவரை வழக்கு எதுவும் தொடுக்கப்படவில்லை. இத்தகைய சிக்கலான வழக்குகளில் அதன் தன்மை கருதியே வழிமுறைகளும் வகுக்கப்பட வேண்டியுள்ளது. அனைத்திற்கும் மேலாக குற்றங்கள் நிகழக்கூடிய சமூகச் சூழல்களையும் ஆராய்ந்து மக்கள் மத்தியில் இது குறித்த விழுப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவதே குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் நிரந்தத் தீர்வாக அமையும். பக்குவப்பட்ட சமூகத்தில் குற்றங்கள் மிகக் குறைவாகவே நிகழும் என்பதுதானே சரி?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!