December 2, 2022

கால மகள் கண் திறப்பாள் சின்னையா..நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா? -ரமேஷ் பாபு

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவில் தவிர்க்க இயலாத நடிகர்கள் பட்டியலில் டாப் 5ல் இடம் பிடித்தவர் கமல்.. இந்த சினிமாவில் 2K-ல் புதுமையென்று யாராவது எதையாவது சொன்னால் அல்லது காட்டினால் கமல்ஹாசன் அதற்கு 80,90-களிலேயே வெள்ளோட்டம் பார்த்திருப்பார் . இனிவரும் ஹீரோக்கள் என்ன கெட்-அப்பில் நடித்தாலும் அது கமல் போட்ட கெட்-அப்பில் ஒன்றாகத்தான் இருக்கும். இதை எல்லாம் தாண்டி மண்சோறு சாப்பிடாத, நாக்கில் அலகு குத்திக்கொள்ளாமல் குருதிக் கொடை, உடல் மற்றும் இரத்த தானம் வழங்கும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் அவர். அப்பேர்பட்டவர் மக்கள் நீதி மய்யம் துவங்கிய போதே ரஜினிக்குப் போட்டியாக களம் இறங்குகிறாரோ என்ற ஐயம் எழுந்தது. திரைத்துறையில் போட்டி இருந்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால், அரசியலிலும் அது தொடர்வது ஏனோ? என்று புருவம் உயர்த்தியோர் பலருண்டு. ஆனால் பலரும் எதிர்பார்த்தது போலவே கடைசி நிமிடத்தில் ரஜினி அரசியல் முயற்சிகளைக் கைவிட்டார். கமல் தொடர்ந்தார். அண்மையில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பேரவை உறுப்பினராகும் வாய்ப்பை கமல் இழந்தாலும் அவரது கட்சிக்கு ஓர் அடையாளமும், அங்கீகாரமும் மாநில அளவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் எதிர்பாராத விதமாக கட்சியின் முன்னணி முகங்கள் கட்சியிலிருந்து கசப்புடன் வெளியேறியது வியப்பையும், கமலின் மீதான களங்கத்தையும் உருவாக்கி விட்டன. இந்நிலையில் காலம் வெல்லும்; உயிருள்ளவரை வரை அரசியலில் நீடிப்பேன், லட்சியத்தை அடைவோம் என்று எழுச்சியூட்டும் விதத்தில் தொண்டர்களுக்காக கமல் காணொளி ஒன்றின் மூலம் பேசியுள்ளார்.

இத்தனைக்கும் இந்த கமல் கட்சித் துவங்கும் போதே இந்தியாவின் பிரச்சினைகளுக்கு ஜனநாயக அரசியல், தேர்தல் அரசியல் இரண்டிலும் புது முகங்களைக் காட்டிலும் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களே தேவை என்பதைப் பலரும் உரத்தக் குரலில் எடுத்துரைத்தனர். கட்சியை துவங்குவதைக் காட்டிலும் குடிமைச் சமூக அமைப்பாக இயக்கத்தை கட்டமைப்பதும், சமூக, பொருளியல் மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு மக்கள் சார்பாக குரல் கொடுக்கும் வலுவான இயக்கமாக கட்டுவிப்பதும் அதிகப் பலன் தரும் என்பதே அறிவுரையின் சாரமாக இருந்தது. ஆனால், தேர்தல் அரசியலில் நேரடியாக கமல் இறங்கினார். இதற்கு சொல்லப்பட்டக் காரணம் ஜெயலலிதா பின்னர் கருணாநிதி என இரு தலைவர்கள் காலமானதையொட்டி அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதே. ஆனால் இரண்டு பேரும் வலுவான அடித்தளம் கொண்ட அரசியல் கட்சிகளை விட்டுச் சென்றுள்ளனர் என்பதை கமல் அறிந்திருந்தாலும், தானும் ஒரு முயற்சியை மேற்கொள்ள முடிவெடுத்தார்.

ஆயினும், கட்சி கமலை முதல்வர் வேட்பாளர், ஆயுட்காலத் தலைவர் என்று பிரகடனப்படுத்தியது மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது. வலுவான தலைமை தேவைதான். ஆனால் எதேச்சாதிகாரத் தலைமைதான் வலுவான தலைமை என்பதை ஜனநாயக மரபுகள் ஏற்பதில்லை. இதுவே கட்சிக்குள் இன்று பிளவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஓர் ஆலோசனை அமைப்பிடம் கட்சியைக் கமல் ஒப்படைத்து விட்டார். அரசியல் தெரியாத அவர்கள் கமலுக்கு தவறான ஆலோசனைகளை வழங்குகிறார்கள் என்பதே பிரதானக் குற்றச்சாட்டு. திமுக ஆட்சியைப் பிடிக்க பிரசாந்த் கிஷோர் எனும் உத்தி வகுப்பாளரை பணிக்கு அமர்த்தியது. அது போலவே தானும் ஒரு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கமல் நினைத்ததில் தவறில்லை.

ஆனால், அது கட்சியினரின் செயல்பாட்டிற்கு ஊறு விளவிக்கும் என்பதை அவர் உணரவில்லை என்பதுதான் சோகம். இப்போது அதை அவர் உணர்ந்திருப்பார். ஆயினும், இப்போதும் கமல் பின்னால் சில பிரபலங்கள் நிற்கின்றனர். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு நெருக்கமான பொன்ராஜ், பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா, கமலுடன் பல முறை திரையில் இணையாக நடித்த ஸ்ரீப்ரியா எனப் பட்டியல் உள்ளது. விலகியவர்களில் பெரும்பாலோர் ஏதேனும் வணிக ரீதியிலான நலன் கருதியே தனிப்பட்ட முறையில் விலகியிருக்கலாம் என்பதையும் புறக்கணிக்க இயலாது. கமல் இது பற்றி இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. தங்களை வளர்த்துக்கொள்ள மையத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதுவே அவரது குற்றச்சாட்டு.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பல இடங்களில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்ததில் ம.நீ,மவுக்கு பங்குண்டு. கமல் திமுக வாக்குகளைப் பிரிப்பார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அவரோ இரு தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவே அவருக்கென ஒரு வாக்கு வங்கி உருவாகிவிட்டது எனக் கருத இடமுண்டு. கமல் உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுக்கவில்லை. ஒருவேளை, மாநகரட்சி, நகராட்சிப் பகுதிகளில் மட்டும் போட்டியிடலாம். இது உள்ளூர் வாக்கு வங்கியை நிலைப்படுத்த உதவும். மக்களவைத் தேர்தல், பேரவைத் தேர்தல் இரண்டிலும் மையத்தின் முன்னணித் தலைவர்கள் நல்ல வாக்குகளைப் பெற்றார்கள். எனவே, அஸ்திவாரம் இட்டாகி விட்டது. உயிருள்ள வரை அரசியலில் தொடர்வேன் என்பதன் மூலம் தன்னை ஒரு மாற்றாக தொடர்ந்து மக்கள் முன் வைத்திருக்கிறார், கமல். அரவிந்த் கெஜ்ரிவால் போல மாற்றுச் சக்தி என்று கமல் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதுதான். அது இப்போதைய திமுக ஆட்சியின் கையிலுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்றே கமல் கூறிவருகிறார்.

ஆயினும் தனது கொள்கைகள் முழுவதும் திராவிட அரசியலின் பிரதி என்று அவர் சொல்லவில்லை. எங்கு மாறுபட வேண்டுமோ அங்கு மாறுபடுவோம் என்பதும் அவரது நிலைப்பாடு. அரவிந்த் கெஜ்ரிவாலும் சமூக நீதி, அதிகாரப் பரவல் எனப் பல திராவிட அரசியலின் கொள்கைகளை பின்பற்றியே வருகிறார். எனவே கமலுக்கு முன்னுதாரணமுள்ளது. அப்படியே இருந்தாலும், கமல் தனது கட்சியை திராவிட அரசியலின் தொடர்ச்சியாக நிலைநிறுத்துவதும் ஒரு போதாமையேயாகும். இருக்கின்ற இரண்டு கட்சிகளையும் கடந்து கமலின் திராவிட அரசியலை மக்கள் ஆதரிக்க வேண்டியத் தேவை என்ன? அவை இரண்டும் நிலைநிறுத்தப்பட்டக் கட்சிகள்; வலுவானவை. அதை விடுத்து இன்னொரு திராவிடக் கட்சியை மக்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? அப்படியே தேவை என்றாலும் நாம் தமிழர் போன்ற உள்ளூர் அடையாள அரசியல் பேசுகின்றக் கட்சியையே மக்கள் விரும்பலாம். ஏனெனில் கமலிடம் மேட்டுக்குடி மனோபாவம் இருப்பதாகவே பரப்புரைச் செய்யப்படும். அது அவரது தோற்றம், பேச்சு, அணுகுமுறை.. பிறகு ஜாதிப் பின்னணி ஆகிவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அப்பரப்புரை ஏற்கப்படும் சூழலும் உருவாகும். ஏற்கனவே இக்கருத்தை அவரது அண்ணன் சாருஹாசன் சொல்லி விட்டார். இப் பிரச்சினை ரஜினிக்கு எழாதது வியப்பில்லை. ரஜினியின் திரை பிம்பம் அப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கமல் தன்னை எம் ஜி ஆரின் வாரிசு என்று அழைத்துக்கொண்டதை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. அரசியல் வந்தப்பிறகு இதைச் சொல்லி என்னப் பயன்? திரையில் எப்போதும் சொன்னதில்லையே? ஏன் பொது விவகாரங்களில் கூட ஜெயலலிதா எனும் தலைவியின் கட்டுப்பாட்டில் அதிமுக இருந்தபோது கமல் அதிகம் தனது கருத்தைச் சொன்னதில்லையே? தேர்தல் விளம்பரத்திற்காக அதைச் சொல்வதால் என்னப் பயன்? கமலின் தந்தையார் பல அரசியல் தலைவர்களுடன் பழகியவர் என்பது கமலுக்கு அரசியல் தெரிந்திருக்கும் என்று நம்புவதற்கு ஒருக்காரணம். ஒருக்காரணம் மட்டுமே. பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசியலுக்கு வந்தால் பூச்செண்டு கொண்டு வர மாட்டேன்; துப்பாக்கி ஏந்தி வருவேன் என்று சொன்னக் கமல் துப்பாக்கி ஏந்தும் ரௌத்திரத்தை களத்தில் காட்டவில்லையே? ஆவேசமான பேச்சுக்களே இங்கு ஏற்கப்படும் என்பது அவருக்குத் தெரியவில்லையா? இல்லை அதை வெளிப்படுத்தத் தயங்குகிறாரா? இதைச் சீமான் கச்சிதமாக செய்கிறார். அவர் முஷ்டி உயர்த்தி, குரல் ஏற்றத்தாழ்வுகளுடன் பேசுவதை மக்கள் ஏற்கிறார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால் நம் தமிழகத்தில் பேசும் ஆற்றலுக்கு அசைக்க இயலாத செல்வாக்கு இருக்கிறது. அது உணர்ச்சிகரமாகவும், ஓரளவுக்கேனும் உண்மையாக இருக்குமோ எனும் ஐயத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடனும் இருக்க வேண்டும். அதைக் கமல் தான் செய்ய விட்டாலும் அடுத்து வரும் இளம் தலைமுறையிடம் கொடுக்க வேண்டும். மென்மையான அணுகுமுறை பாமர மக்களிடம் எடுபடவில்லை. எனவே மையத்தின் பரப்புரைகளில், உத்திகளில் மாற்றம் தேவை. கட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதை விட என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியம். கமல் இந்த உண்மையை உணரவில்லை என்றால் வெற்றிகள் கிட்டினாலும் ஆட்சி எனும் இலக்கை அடைவது கடினம்.

மேலும், மக்களிடையே ஆழமாகப் பரவ குடிமைச் சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளில் விவாதித்து ஆலோசனை சொல்லும் வகையில் ஓர் அமைப்பை உருவாக்குவது கட்சிக்குப் பெரும்பலம் சேர்க்கும். முன்களப் பணியாளர்களாக தொண்டர்கள் இருந்தால் அதுவே மக்களிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். பாரபட்சமின்றி எல்லாத் தரப்பு மக்களின் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு இப்பணியை கமல் வழங்கினால் கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்சியது போலிருக்கும்.

கமல் சொல்வது போல காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்; எனினும் முயற்சிகள் இன்றி பலனிருக்காது. கமல் சிறுவயதில் ஆனந்த ஜோதி எனும் படத்தில் நடித்தார். அது எம் ஜி ஆர் கதாநாயகனாக நடித்தது. அதில் தேவிகா கமலுக்கு ஆறுதல் சொல்வது போல ஒரு பாடல் வரும். கால மகள் கண் திறப்பாள் சின்னையா!… எனும் அப்பாடல் இப்போதும் சின்னையாவாக (எம் ஜி ஆரை சின்னவர் என்றுதான் வீட்டில் குறிப்பிடுவார்கள்) விரும்பும் கமலுக்கு பொருந்துகிறது.

ரமேஷ் கிருஷ்ண பாபு