July 31, 2021

கோயில்கள் தொடர்பாக கோரிக்கைகளை பகிர தனி இணைய தளம்!

முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்ய ஏதுவாக “கோரிக்கைகளைப் பதிவிடுக” எனும் புதிய இணையவழி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் கோரிக்கைகள் மீது 60 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ‘இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், மற்றும் கட்டிடங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை மற்றும் குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்குப் பல்வேறு கோரிக்கைகள் வரப் பெறுகின்றன. மேலும் கோவில்களின் திருப்பணிகள், திருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் ஆகியவை குறித்தும் பக்தர்களும் பொதுமக்களும் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

கோவில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட ஏதுவாக “கோரிக்கைகளைப் பதிவிடுக” எனும் ஓர் புதிய திட்டம் இந்து சமயஅறநிலையத் துறையின் hrce.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் “கோரிக்கைகளைப் பதிவிடுக” எனும் திட்டத்தினைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைப் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டுப் பதிவு செய்ய வேண்டும். கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவைப்படின் ஸ்கேன் (Scan) செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னால் விரிவாக ஆய்வு செய்யப்படும். அது தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளின் மீது 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த திட்டத்தினை நன்கு பயன்படுத்தி துறை மற்றும் கோவில்கள் செயல்பாட்டை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.