இனிமேல் இதைத் தாண்டி புதிதாக ஏதேனும் நடந்து விடுமா என்ன?

இனிமேல் இதைத் தாண்டி புதிதாக ஏதேனும் நடந்து விடுமா என்ன?

தேர்தல் முடிந்து விட்டது!…இனி என்ன? மே 2 வரை இலவு காத்த கிளிகள் போல போட்டியிட்ட கட்சிகள் அனைவரும் தாங்கள்தான் ஜெயிப்போம் என்ற மதர்ப்பில் திரிவார்கள்…..இலையோ, சூரியனோ யார் வென்றாலும் அடுத்து வரும் நாட்கள் அரசு மற்றும் அரசியலில் பல சிக்கல்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி வரும்….! தற்போது ₹5.7 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தநா அரசு அதை அடைக்க இந்த ஒரு வருடத்திற்குள் என்ன மாதிரி பண வரவு நடவடிக்கைகளை எடுக்கும்? ஒண்ணும் நடக்காது. அடுத்த பட்ஜெட்டில் கடன் 6.7 லட்சம் கோடியாகும் …. அவ்வளவுதான்!

– தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனித் துறை அமைத்து அதற்கான ப்ரையாரிட்டி மற்றும் பட்ஜெட் தயாரிக்க வேண்டி வரும். மெல்ல மெல்ல ஐந்து வருடத்திற்குள் வாங்க வேண்டிய கமிஷனை வாங்கி, தரம் குறைந்த பொருளை வழங்கி விடுவார்கள்.

– மது விலக்கு நிச்சயம் வரப் போவதில்லை. அது குறித்து யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லப் பட மாட்டாது. ஆனால் வாய்கிழியப் பேசுவார்கள்.

– பல அமைச்சர்கள் பழைய துறைகளையே கைப்பற்றுவார்கள்…. தொடர்புகள் அறுந்து போகாமல் பார்த்துக் கொள்வார்கள்…

– தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டங்கள் தநா முழுவதும் நடை பெறும்…. ஆளுங்கட்சியின் அடிமட்ட ஒன்றியம் முதல் அனைவரும் வசூல் வேட்டையில் இறங்குவார்கள்….

– நிதித்துறை முடுக்கப்பட்டு எத்தனை திட்டங்கள் பாதியில் உள்ளன, எத்தனை திட்டங்களை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என கணக்கிடப்பட்டு அதன் கமிஷன் தொகை கணக்கிடப்படும். ஏற்கனவே முந்தைய அரசால் கமிஷன் பெறப்பட்டு பாதி முடிந்த திட்டங்கள் ஏதோ சில காரணங்களால் அந்தரத்தில் தொங்க விடப்படும்.

– பழி வாங்கல் நடவடிக்கைகள் வாய் உதார் மூலமாக மக்களிடம் சேர்ப்பிக்கப் படும். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது குழந்தைக்கும் தெரியும்….

– சிலர் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் காம்பௌண்ட் தாண்டி தங்களின் பையை நிரப்பிக் கொள்வார்கள்.

– மற்றபடி அடுத்த தேர்தல் வரை சமூக வலைத்தளங்களில் முகநூல் போராளிகள், அந்தந்த நாட்களில் நிகழும் நிகழ்வுகளை, ட்ரோல், மீம் செய்து பொழுது போக்கு நிகழ்ச்சி நடத்துவார்கள்….

– மழை, புயல், வெள்ளம், வரட்சி என காலாவஸ்தைகளால் விவசாயிகள் மட்டுமே அவதிப் படுவார்கள். அவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடக்கும்…

– 7 பேர் விடுதலை பற்றி இன்னும் பேச்சாகவே இருக்கும். மீனவன் எல்லைப் பிரச்சனை, கச்சத்தீவு போன்றவை எந்த வித முன்னேற்றமும் இன்றி “பாசிச ராஜபக்சேவே!” என்பதோடு இருக்கும்.

– மேலும் வளர வாய்ப்பின்றி காங்கிரஸ் கட்சி இன்னும் சுருங்கி 2024 இல் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்….

– மாநிலத்தில் யார் ஆண்டிலும், மத்திய அரசுடன் பணிந்து போவார்கள்!… நல்ல பெயர் எடுக்க முனைவார்கள்..

– வழக்கம் போல புதிய சில நடிகர்கள் அரசியலுக்கு வர்ற மாதிரி வசனம் வைப்பார்கள் அல்லது மேடையில் பேசுவார்கள்… ஒற்றை ரெய்டில் அடிமடியைப் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள்.

எத்தனை தேர்தல் பார்த்திருக்கிறோம்!…இதைத் தாண்டி புதிதாக ஏதேனும் நடந்து விடுமா என்ன?

error: Content is protected !!