April 17, 2021

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்தி கொண்டார்!

ந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 1-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் சரியாக 28 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று செலுத்திக் கொண்டார்.

இது  குறித்து வெங்கையா நாயுடு  தனது டுவிட்டரில், இன்று(நேற்று) டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டேன். அதுபோலவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் தொடர்ந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.