December 8, 2022

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை முழு விபரம்!

சுயமரியாதை எனும் சுடர் ஏந்தி தமிழகத்தில் பெரும் புரட்சியை நிகழ்த்திய தந்தை பெரியார், அவர் ஏற்றிய தீபத்தை அறிவாயுதம் கொண்டு தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைத்த பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் இதயக்கனியாக, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அவரின் கொள்கைகளை நிறைவேற்றிடும் உண்மையான அக்கறையோடு இயக்கம் கண்டவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

புரட்சித்தலைவரின் வழியில் தமிழ்நாட்டின் நலன்கள், தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதில் எந்தவித சமரசமும் இல்லாமல் செயல்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் அவரது திருப்பெயரை பெயரிலும், திருஉருவத்தைக் கொடியிலும், கொள்கைகளை இதயத்திலும் ஏந்தி, நமது தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துகளோடு அரசியல் களத்தில் பயணிக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

நம் ஒப்பற்ற தலைவர்கள், தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் தலை சிறக்க வைக்க முன்னெடுத்த பெரும் முயற்சிகள் அத்தனையையும் காத்திட சூளுரை ஏற்று வரவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களம் காண்கிறது. “எல்லோ ரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியக் கனவை நனவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களின் நலன் பன்மடங்கு பெருகிடவும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியான வாழ்வைப் பெற்று, வளமும் வளர்ச்சியும் பெற வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு “தமிழகம் தலைநிமிர்ந்திட, தமிழர் வாழ்வு மலர்ந்திட” 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக வாக்காளர்கள் முன் வைக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!

கூட்டாட்சி முறை – மாநில உரிமைகள்

பல்வேறு மொழி கலாச்சார பின்னணி கொண்ட மாநிலங்களின் ஒன்றியமே நமது இந்திய தேசம். இதை மனதில் வைத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இருந்துகொண்டு அரசு நிர்வாகத்தை நடத்துவதே கூட்டாட்சியின் அடிப்படைத் தத்துவம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் எழுந்தது இதன் அடிப்படையில்தான். குறிப்பாக நிதி விஷயத்தில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்தி வருகின்றன மத்தியில் அமையும் அரசுகள். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்ய அமைக்கப்படும் எல்லா குழுக்களும் மாநிலங்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழக நலனுக்கு எதிரானதாகவே அமைகின்றன. பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் வரை இந்த அநீதி தொடர்கிறது. குடும்ப கட்டுப்பாடு முதல் தொழில் வளர்ச்சி வரை மத்திய அரசு நிர்ணயிக்கும் இலக்குகளை வெகு சீக்கிரமாகவே அடையும் தமிழகம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் இந்த நிலையை மாற்றி, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியபடி 1971ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் வரி வருவாயை மத்திய அரசு பகிர்ந்தளிக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நிலைநாட்டவும் மாண்புமிகு அம்மா வழியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம்

· இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

· மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு இந்தி மொழியில் மட்டுமே பெயர் வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி தமிழுக்கான முக்கியத்துவத்தை உணரச் செய்து தமிழுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

· பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே நீடிக்கும். · சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர் களின் பழங்கால கலாச்சாரத்தை விளக்கும் வகையிலும், நாகரிகத்தின் தொடக்கப்புள்ளியாக தமிழர்கள் இருந்ததற்கு ஆதாரமாகவும் பல தரவுகள் கிடைத்தும் அதை அறிவியல் பூர்வமாக அடுத்தகட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியம் செய்கிறது. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியேற்கிறது.

· தமிழர் பாரம்பரிய உணவு மற்றும் திண்பண்டங்களை பிரபலப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

· உலகெங்கும் தமிழை பரப்புவதற்கும், தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், நவீன காலத் தேவைக்கு ஏற்ப தமிழை வளப்படுத்துவதற்கும், படைப்பாளிகளை அங்கீகரிக்கவும், இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தவும், ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் தமிழுக்காக உலகளவில் மிக உயர்ந்த இலக்கிய விருதினை உருவாக்கி, தகுதியானோருக்கு வழங்கிடவும் புதிய நிறுவனம் உருவாக்கப்படும்.

· திருஅருட்பிரகாச வள்ளலார், தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ஆகியோருக்கு சென்னையிலும், சட்ட தமிழின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையிலும் நினைவு இல்லங்கள் அமைக்கப்படும்.

· தமிழர் பண்பாட்டுத் திருவிழாவாக ஜல்லிக்கட்டு அறிவிக்கப்பட்டு, பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் ஊர்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அரசே நிதி வழங்கும்.

இட ஒதுக்கீடு – உள் இட ஒதுக்கீடு கொள்கை

சமூக நீதி காப்பதில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. அதற்கு மணிமகுடம் சூடும் வகையில், 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி சட்டம் இயற்றி, அதை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து சட்டப் பாதுகாப்பும் பெற்றுத் தந்தவர் சமூகநீதி காத்த வீராங்கனை புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அதற்கு இடையூறு ஏற்படும் போதெல்லாம் காத்துநின்றவர் அவர். எந்தச் சூழலிலும் 69% இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆபத்து ஏற்படாமல் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழி நின்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராடும். ஏற்கனவே அமலில் உள்ள இந்த 69% இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது, உரிய கணக்கீடுகளைச் செய்து, எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் அனைத்து சமூகங்களும் சம உரிமை மற்றும் சம நீதியைப் பெறும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தெளிவான, சரியான நிலைப்பாட்டை முன்னெடுக்கும்.

திறமையான நிர்வாகம் – உண்மையான மக்களாட்சி

அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்ற சீர்த்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமே மக்களுக்குத் தேவையான நிர்வாகமாக மாற்ற முடியும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கருதுகிறது. நிர்வாகத்தில் இன்னும் எஞ்சியிருக்கும் ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளை மாற்றி அமைத்து, அரசு அலுவலகங்கள் மக்களை இரு கரம் நீட்டி வரவேற்று, சேவையாற்றும் இடமாக மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை கிடைக்கச் செய்ய முடியும். சேவை பெறும் உரிமைச் சட்டம் (Right to Services Act) போன்றவற்றை நடைமுறைப்படுத்தி ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கால வரையறையை நிர்ணயிப்பதுடன், எந்தக் கோப்புகளும் அதிகாரத்தின் எந்த மேசையிலும் தேங்காத அளவுக்கு நிர்வாகத்தைச் சீரமைப்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மிகுந்த அக்கறை காட்டும்.

· வெளிநாடுவாழ் தமிழர் நலம், நீர்ப்பாசனம் உட்பட புதிய அமைச்சகங்கள் உருவாக்கப் படுவதுடன் நவீன யுகத்தின் தேவைக்கு ஏற்ப தமிழக அரசு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.

· மாதம் ஒரு மாவட்டத்தில் முதலமைச்சர் நேரடியாக பங்கேற்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் மாதம் 4 முறை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. பங்கேற்கும் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

வரிவிதிப்பு சீரமைப்பு, கனிம வளம், சுற்றுலா உள்ளிட்ட மாற்று வருவாய் வழிகளை செயல்படுத்துவதன் மூலம் அரசின் வருவாயை அதிகப்படுத்தி தற்போது தமிழ்நாடு பெரும் கடனில் இருக்கும் சூழ்நிலை 5 ஆண்டுகளில் மாற்றப்படும்.

· அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். குறைந்தபட்சம் பேரூராட்சி/ ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படும்.

· தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக ஊராட்சிகள் தோறும் பூங்காக்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.

· ஊராட்சிகள் தோறும் பல்நோக்கு சமுதாயக்கூடங்கள் அமைக்கப்படும். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு பேருதவியாக அவை அமைந்திடும்.

· மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

· 50 நாட்களில் அனைத்து வகை கட்டடங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். அதற்கான அனுமதி கட்டணங்கள் சீரமைக்கப்படும். லஞ்சமற்ற வெளிப்படையான அணுகுமுறை இதில் கொண்டுவரப்படும்.

· புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தைப் போல சட்டம் ஒழுங்கிற்கு முழு முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றவாளிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

· வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட தேதியில் விநியோகம் செய்யப்படும். யாரும் ரேஷன் கடையைத் தேடிச் சென்று கால்கடுக்க காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், வெளிச்சந்தையில் கிடைக்கும் தரத்துடனும், சரியான அளவுடனும் ரேஷன் அரிசி வழங்கப்படும்.

· அமுதம் அங்காடிகள், பண்ணை பசுமைக்கடைகள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் புதிய கிளைகளை ஏற்படுத்தி தரமான மளிகை மற்றும் காய்கறிகள் குறைந்த விலையில் விற்கப்படும்.

மக்கள் நலன் சார்ந்த மின் ஆளுமை

குடும்ப அட்டை, வருமானச் சான்று, சாதிச் சான்று, ஆதார் அட்டை போன்ற அடிப்படைத் தேவைகளை எளிதாகப் பெறும் வகையில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இ-சேவை மையங்களை உருவாக்கினார். தற்போது உள்ள இ-சேவை மையங்கள் போதிய ஊழியர்கள் உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் இருக்கின்றன. அவற்றை உரிய வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடங்கி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையான அடிப்படைச் சான்றுகளை அம்மையங்கள் மூலம் பெறுவது வரை உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு எளிதில் அவை கிடைக்கும் சூழல் உறுதிப்படுத்தப்படும். அதற்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளின் ஓர் ஊழியர் அல்லது அதிகாரி இந்த இ-சேவை மையங்களுடன் இணைந்து செயல்பட வழி வகை செய்யப்படும்.

ஊழல் இல்லாத உன்னதத் தமிழகம்

அரசு நிர்வாகத்தை மட்டுமல்ல; தேசத்தையும் உள்ளிருந்து அழிக்கும் மிகப்பெரிய கேடுகள் லஞ்சமும் ஊழலும்தான். எல்லாத் தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. எளியவர்களை மேம்படுத்தும் நலத்திட்டங்களில் தொடங்கி, கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவது வரை புரையோடிப் போய் இருக்கும் இதன் பாதிப்பை அகற்றி, தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதற்கான உறுதியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கொண்டு உள்ளது. அதற்காக லோக்ஆயுக்தா அமைப்பை வலுவானதாக மாற்றி அமைத்திடவும், ஊழலின் ஊற்றுக்கண்களை அடைத்து, தமிழகத்தை லஞ்ச, ஊழல் இல்லாத முதன்மை மாநிலமாக உருவாக்கிடுவது என்று சபதம் ஏற்றுள்ளது.

மதுவிலக்கு கொள்கை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணப்படி ‘தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. அம்மா அவர்களின் உண்மையான வழித்தோன்றலாக, அவர்களது திருப்பெயரைத் தாங்கி இருக்கும் இந்த இயக்கம், அம்மாவின் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி பூண்டி ருக்கிறது. மதுவின் பாதிப்பில்லாத அடுத்த தலைமுறையை உருவாக்கவும், மதுவால் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு, ஐ.நா. சபை வழிகாட்டுதலின்படி உடல் மற்றும் உள்ளம் சார்ந்த சிகிச்சை கள் அளிக்கப்பட்டு, அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கும் வழிவகை செய்வதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியுடன் இருக்கிறது. தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகளை படிப்படியாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’

அரசின் நேரடிப் பார்வையில் கிராமப்புறங்களிலும், பேரூர்களிலும் பல்வேறு வகையான தொழிலகங்களை உருவாக்கி, அதன் வழியாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் விவசாயம், தொழில் இரண்டையும் உள்ளடக்கிய நவீன தற்சார்பு பொருளாதாரத்தின் அடிப்படையில் அந்தந்தப் பகுதியில் கிடைக்கிற மூலப்பொருட்களைக் கொண்டு ஒருங்கிணைந்த தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தேவைப்பட்டால், அருகிலுள்ள ஊர்களில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். இதில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம் அளிக்கப்படுவதுடன், அவர்கள் பணியாற்றும் தொழிலகத்தின் பங்குதாரராகவும் ஆக்கப்படுவார்கள்.

அந்தந்தப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்கள், அதற்கு பங்களிப்பவர்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும். இதன்மூலம் தரமான பொருளை, வெளிச்சந்தையைவிடக் குறைவான விலையில் அவர்களால் பெற முடியும். ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி தொழிலகங்களாக செயல்படும் அவற்றை எல்லாம் மாவட்டவாரியாக ஒருங்கிணைத்து, அங்கே தயாராகும் பொருட்களை மற்ற மாவட்டங்களில் விற்பனை செய்யும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான தேவை நிறைவடைந்த பிறகு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்புகளும் உருவாக்கப்படும். அம்மா பொருளாதார புரட்சித்திட்டத்தைச் செயல்படுத்த மாநில அளவில் தனித் துறை உருவாக்கப்படும். அரசின் பிற துறைகளில் இருக்கிற மனித வளம், உட்கட்டமைப்பு, நிதி ஆதாரம் உள்ளிட்டவை தேவைப்படும் இடங்களில் முழுமையாகவோ, பகுதியளவிலோ இதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மூன்றாண்டுகளில் லாபம் ஈட்டும் தொழில் அமைப்புகளாக இவை உருமாற்றப்படும்போது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவதுடன், இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டமாகவும் திகழும். கிராமங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, கிராமப்புற மக்கள் நகரத்தை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாதவாறு அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பையும், பொருளாதார தன்னிறைவையும் அளிக்கப்போகும் இந்த ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ கழக அரசின் லட்சியத்திட்டமாக செயல்படுத்தப் படும்.

விலையில்லாத் திட்டங்கள்

சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதற்கும், மற்றவர்களைப் போல அவர்களும் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது ஓர் அரசாங்கத்தின் கடமை. எனவே இங்கே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறவரையில், இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியமாகும். ‘இலவசம்’ என்ற சொல்லை சிலர் கொச்சைப்படுத்தியபோது அதனால் பயன்பெறுவோரிடம் நெருடல் ஏற்படக்கூடாது என்பதற்காக, ‘விலையில்லா’ என்ற பதத்தைப் பயன்படுத்தி திட்டங்களைச் செயல்படுத்திய மக்கள் மனங்களில் மகராசியாக குடியிருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அடிச்சுவட்டை இதிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பின்பற்றும்.

தொழில் கொள்கை

பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் தமிழகத்தில் பல லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இலட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறி போயின. இந்த தேக்க நிலையை மாற்றி மூடப்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளை திறப்பது, அதன் மூலம் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரதான கொள்கையாக இருக்கும். சிறு குறு தொழில்புரிவோர் ஜி.எஸ்.டி. தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதை மனதில் வைத்து ஜி.எஸ்.டி. நடைமுறையை கிராமப்புறத்தினரும் சிரமமின்றி பின்பற்ற எளிய நடைமுறையை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

· தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் தொழில்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை செயலர்கள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கிய நிரந்தர ‘தொழில் வளர்ச்சி வாரியம்’ ஒன்று அமைக்கப்படும். மாநிலத்தின் தொழில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த வாரியத்தின் கூட்டம் நடைபெறும்.

· பல்வேறு வகை இயந்திர உற்பத்தி பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. மூலம் கடுமையான வரி விதிக்கப்பட்டுவதால் அந்த தொழில்களே முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு சிறு குறு தொழில்களின் மையமாக விளங்கும் கோயம்புத்தூர் மண்டலத்தின் மோட்டார் பம்புசெட்டிற்கு 18 % வரி வசூலிக்கப்படுகிறது. இதை 5 % ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

· தொழில் துறையின் கீழ் வரும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகப் பிரச்னை களை அந்தந்த துறை அமைச்சகங்களே கவனிக்கும் வகையில் நிர்வாகத்தை பகிர்ந்தளித்து தொழில் துறையின் சுமையை குறைப்பதன் மூலம் முதலீடு மற்றும் ஏற்றுமதி விஷயங்களில் கூடுதல் மற்றும் சிறப்பு கவனத்தை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

· தமிழகத்தின் முதலீடு மற்றும் ஏற்றுமதி விவகாரங்களை கவனிப்பதற்கென்றே தொழில் துறையின் கீழ் ஒரு தனி இயக்குனரகம் (A dedicated Directorate Under Industries Department) ஏற்படுத்தப்படும். தற்போது நடைமுறையில் உள்ள தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனரகம் இந்த புதிய இயக்குனரகத்தோடு இணைக்கப்படும்.

· புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் தொழில் துறையில் உயர்ந்த இடத்தில் இருந்த தமிழகம் இன்று அந்த விஷயத்தில் ஒரு தேக்க நிலையை அடைந்து பின்தங்கி இருக்கிறது. உள்ளார்ந்த ஆர்வத்துடன் தொழில் முதலீடு செய்வதைவிட நிதிச் சலுகைகளுக்காக செய்யப்படும் முதலீடுகள் கணிசமாக உயர்ந்ததே இந்த தேக்க நிலைக்குக் காரணம்.இந்த நிலையை மாற்ற ஏற்கனவே இருக்கும் தொழில் கொள்கையில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும். இதன்படி குறிப்பிட்ட காலத்திற்குள் முதலீடுகளைச் செய்து, உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் நிறுவனங் களுக்கு மின்சாரம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு, தகவல் தொடர்பு, நவீன சாலைவசதி இணைப்பு உள்ளிட்ட வசதிகளோடு தரம் மேம்படுத்தப்பட்ட நிலம் சலுகை விலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

· தொழில் முதலீடுகளை வகைப்படுத்தி துறை வாரியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப் படுவார். சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அந்த அதிகாரி பாலமாக இருப்பார். கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதில் தொடங்கி, அரசுத் துறைகளின் அனுமதி பெறுவது மற்றும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதில் ஏற்படும் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பது வரை அரசையும் குறிப்பிட்ட அந் நிறுவனத்தையும் அந்த அதிகாரி வழிநடத்தும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

· ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தொழிற்பேட்டை மற்றும் அதையொட்டிய நகரியம் (Township) அமைவது உறுதிப்படுத்தப்படும். சிறப்பு முதலீட்டு மண்டலம் என்ற அந்தஸ்தோடு இந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

60 நாட்களில் தொழில் தொடங்க அனுமதி

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னெடுத்த ‘தொலைநோக்கு திட்டம் – 2023’ல் குறிப்பிட்டபடி தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக புதிய தொழிற்சாலைகளுடன் மதுரை- தூத்துக்குடி இடையிலான தொழில்வழிச்சாலை (Industrial Corridor) சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்படும். தமிழகத்தில் உரிய தகுதிகளுடன் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் 60 நாட்களில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும்.

அந்நிய செலாவணி – சிறப்பு கவனம்

இன்று திருப்பூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட தமிழகத்தில் சில முக்கியமான பகுதிகளில் அந்நிய செலாவணியை ஈட்டும் தொழில்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகளான தரமான சாலை வசதிகள், மின்சாரம், குடிநீர், சுகாதாரம், தரமான தங்குமிடங்கள் போன்றவற்றை மேம்படுத்தவும், புதிதாக உருவாக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.

ஏற்றுமதி மண்டலங்கள்

தமிழகம் முழுவதும் விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் அமைந்த பகுதிகளில் பிரத்யேக ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அப்பகுதியில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு சிக்கலின்றி ஏற்றுமதியாவது உறுதிப்படுத்தப்படும். இந்த விஷயத்தில் தனியார் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை அந்தந்த மண்டல மையங்களில் உள்ள அதிகாரிகள் வழங்குவார்கள்.

துறைமுகங்கள் மேம்பாடு

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் துறைமுகங்களின் பங்கு முக்கியமானது. நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியிலும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, கொளச்சல் உள்ளிட்ட எட்டு துறைமுகங்கள் இருக்கின்றன. இவற்றின் சரக்கு கையாளும் திறனை காலத்திற்கேற்ப உரிய கட்டமைப்புகளோடு சர்வதேச தரத்துடன் தரம் உயர்த்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகங்களின் விரிவாக்கத்திற்காக போதிய நிலங்கள் அளிக்கப்படும். இது குறிப்பிட்ட துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமல்லாமல், துறைமுகத்தோடு தொடர்புடைய தொழிற்சாலைகள் அமைந்த தொழிற்பேட்டையாக அமையும் வகையில் இருப்பது உறுதி செய்யப்படும். அந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை அந்த துறைமுக மேம்பாட்டுக் கழகமே அளிக்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும். துறைமுகங் களையும் அருகாமையில் அமைந்த தொழில் சார்ந்த நகரங்களையும் நவீன சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளோடு இணைக்கவும் அதைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படும். கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இணையம் பெட்டகத் துறைமுகத் திட்டத்தை வர விடமாட்டோம் என்ற உறுதியை குமரி மாவட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அளிக்கிறது.

நிலக்கரி கொள்முதல்

தமிழகத்தின் மின் உற்பத்தியில் பிரதான பங்கை வகிப்பது அனல்மின் நிலையங்கள்தான். அதற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நிலக்கரி தொடர்ச்சியாகவும் போதிய அளவுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. தற்போது பத்து முதல் பதினைந்து நாட்களுக் கான நிலக்கரியை மட்டுமே இருப்பு வைப்பதற்கான வசதியும் வாய்ப்பும் இருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், பிற மாநிலங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு வருவதில் ஏற்படும் தாமதங்கள் போன்றவையால் நிலக்கரி பற்றாக்குறை எற்பட்டு அனல்மின் நிலையங்கள் ஒன்றுமாற்றி ஒன்று உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து நிலக்கரி இறக்குமதியை தங்கு தடையின்றி மேற்கொள்ள வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிரந்தரக் கொள்கை ஒன்று மத்திய அரசின் அனுமதியுடன் வகுக்கப்படும். இந்தியாவின் பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரியைக் கொண்டுவருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்படும். அத்துடன் தமிழ்நாடு அனல்மின் நிலையங்களின் தேவைக்காக குறைந்தது முப்பது முதல் நாற்பத்தைந்து நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் எற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் அனல் மின் நிலையங்கள் தடையற்ற மின் உற்பத்தியைத் தொடர முடியும்.

கூடங்குளம் அணு உலை

கூடங்குளத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் மிக மோசமாக செயல் படுவதாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன. முதல் அணு உலை கடந்த நான்கு ஆண்டுகளில் 46 முறையும், இரண்டாவது அணு உலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 19 முறையும் பழுதடைந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி பாதுகாப்பும், பராமரிப்பும் இன்றி செயல்படும் விதம் பற்றி சுதந்திரமான அமைப்பைக் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கூடங்குளம் விரிவாக்க திட்டத்தை கைவிடவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும்.

மக்கள் நலப்போராட்ட வழக்குகள் வாபஸ்

· கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, வழக்குகளில் சிக்கிய பொதுமக்கள் இன்னமும் சிரமங்களை அனுபவித்து வருவதை மனதில் கொண்டு அவர்கள் மீதான வழக்குகளை நிபந்தனையின்றி முழுமையாக வாபஸ்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

· அதுபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட், கதிராமங்கலம் மீத்தேன் திட்டம், உயர்மின்கோபுரம் அமைத்தல், கெயில் குழாய் பதித்தல் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

கூடுதலாக சட்டப்பேரவைத் தொகுதிகள்

மத்திய அரசின் நிதியைப் பெறுவதில் தொடங்கி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது வரை நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருப்பதால், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப தமிழகத்தில் கூடுதலாக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் திட்டங்களும் அதன் வழியாக கிடைக்கிற பயன்களும் மக்களுக்குச் சென்று சேர்வதும், மக்கள் பிரதிநிதிகள் மக்களை அணுகி பணியாற்றுவதும் விரைவாக நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நம்புகிறது. இதனடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதிகளை அதிகபட்சம் 2 லட்சம் வாக்காளர்களைக் கொண்டதாக மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை இந்த இயக்கம் மேற்கொள்ளும்.

மீண்டும் சட்ட மேலவை

சமூகத்தில் மதிப்புமிக்கவர்களும், பல்வேறு துறை வல்லுநர்களும் ஆட்சியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கி ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த உதவும் வகையில் தமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும்.

புதிய ஊராட்சிகளை உருவாக்குதல்

தமிழகம் முழுவதும் பெரிய ஊராட்சிகளைப் பிரித்து மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய ஊராட்சிகள் உருவாக்கப்படும்.

எளியோருக்கும் உயர்ந்த மருத்துவ வசதி

ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை உரிமையாக கிடைக்க வேண்டியது மருத்துவ வசதி. உலகளவில் மருத்துவ துறையின் முக்கிய மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், மருத்துவ சுற்றுலாவின் (Medical Tourism) தலைநகரம் என சென்னை வர்ணிக்கப்பட்டாலும் இங்கே இன்னும் ஏழை, எளிய மக்களுக்குப் போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதற்கான முன்னெடுப்புகளைச் செய்வதை மிக முக்கியமான கொள்கையாக கொண்டுள்ளது. பணக்காரர்களுக்கு கிடைக்கிற மருத்துவ வசதிகள், எல்லோருக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே கிடைக்க வேண்டும் என்பதில் இந்த இயக்கம் உறுதியோடு பயணிக்கும். தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்குள் அடிப்படை மருத்துவ வசதி கிடைப்பதை இலக்காக நிர்ணயித்து திட்டங்கள் வகுக்கப்படும். வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கிற உயர் தரத்திலான மருத்துவ வசதிகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே கிடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது அமலிலுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா போன்ற பேரழிவு நோய்களுக்கும் சிகிச்சை பெறும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படும். இதய சிகிச்சை, குழந்தைகள் நலன், புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு தனித்தனியாக அனைத்து வசதிகளையும் கொண்ட அரசு உயர்சிறப்பு மருத்துவமனைகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களையொட்டி உருவாக்கப்படும்.

விவசாயிகள் நலன்

“விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை” என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டி ருக்கிற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு விவசாயியும், ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதை முதன்மையாக கருதுகிறது. இதற்காக உற்பத்திச் செலவில் இருந்து குறைந்த பட்சம் 50% அதிகமாக விளைப் பொருட்களுக்கு விலை கிடைக்க வேண்டும். அந்த விலையை யும் கூட மண்ணில் பாடுபட்டு உழைத்து விளைவிக்கிற விவசாயிகளே நிர்ணயிக்கக் கூடிய சந்தைச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. ‘எங்கும் எதிலும் விவசாயத் திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை’ என்பதை முன் வைத்து தமிழகம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த விவசாயத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முயற்சி எடுக்கும். லைநோக்கு பார்வையுடன் பட்டா நிலங்களில் சந்தனம் மற்றும் அகில் (Agar wood) போன்ற மரங்களை வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதன்மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிராமப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். மாணவ, மாணவியரை இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் பெரும் வெற்றி பெற வைக்கமுடியும். அவர்களின் எதிர்காலத்திற்கும் அது உதவியாக இருக்கும். மேலும்  விவசாயத்தை, விவசாய நிலங்களை அழிக்கிற ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஈத்தேன் போன்ற எந்த திட்டங்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழ் மண்ணில் அனுமதிக்காது. இதற்காக எப்போதும் விவசாயிகளின் பக்கம் நின்று செயல்படுவதை உணர்வுப்பூர்வமான கடமையாகக் கருதுகிறது. ‘வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும்’ என்று விவசாயத்தின் அருமையை உணர்ந்து கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சொன்ன வார்த்தைகளின்படி, தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக திகழ்கிற காவிரி டெல்டா பகுதியைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்திருப்பது வெறும் வார்த்தைகளோடு நிறுத்தாமல் அதை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியுடன் இருக்கிறது.

· விவசாயிகளுக்கு வீடு தேடி உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்.

· பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பதற்குள் விவசாயிகள் அனுபவிக்கும் பெரும் இன்னலை போக்கும் வகையில் விவசாயிகளின் இடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்படும்.

· நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.3,000 வரையிலும், கரும்புக் கான ஆதாரவிலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும் நிர்ணயிக்கப்படும். கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையைப் பெற்றுத்தருவதில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்து, காலக்கெடு நிர்ணயித்து அத்தொகையை அளித்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

· சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், தேயிலை, பருப்பு வகைகள், வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, மிளகாய் உள்ளிட்டவற்றுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.

· விண்ணப்பித்த 60 நாட்களில் விவசாய பம்புசெட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

· விவசாயத்திற்கான கட்டணமில்லா மின்சாரம் தொடரும்.

· தேவையான இடங்களில் ஆறுகளின் குறுக்கே முதற்கட்டமாக 100 தடுப்பணைகள் கட்டப்படும்.

· இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெயரில் காவிரி டெல்டாவில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்துவதுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

· மரபணு மாற்றப்பட்ட விதைகள், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும். இயற்கை வழி உரங்கள், மருந்துகள் பயன்பாட்டை அதிகபடுத்துவதுடன் அவற்றுக்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளும் உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையான இயற்கை வழி வேளாண்மையை மேற்கொள்கிற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான சிறப்பு பன்நோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.

· நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான உரிய சட்டம் நிறைவேற்றப்படும்.

· ஆறு, ஏரி, கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் ஓரங்களில் பனை மரங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொண்டுநிறுவனங்கள், பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஓர் இயக்கமாகவே மேற்கொள்ளப்படும்.

· 100 நாள் வேலை எனப்படும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் விவசாயம், தோட்டக்கலை சார்ந்த பணிகளும் சேர்க்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் ஊதியம் எந்தவித சேதாரமும் இன்றி பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேருவது உறுதி செய்யப்படும்.

· பனைவெல்லம், நாட்டுச்சக்கரை உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் அவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கும்.

· மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கவும், அவை தொடர்பான தொழில் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

· அரசின் முன்முயற்சியுடன் உழவர் பெருங்குடி மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் நடமாடும் விவசாய சந்தைகள் உருவாக்கப்படும். அரசு மாணவர் விடுதிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக காய்கறிகளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் உணவுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கும்.

· இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், இதை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. பயிர்க்காப்பீட்டு விஷயத்தை அமல்படுத்துவதில் தனியார் நிறுவனங்களை அனுமதித்ததால் தான் இந்த நிலை என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். எனவே, தனியார் நிறுவனங்களை அப்புறப்படுத்திவிட்டு, பொதுத்துறை நிறுவனமான, தேசிய வேளாண் பயிர்க்காப்பீட்டு நிறுவனம் மூலமே பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை எந்தவித தாமதமுமின்றி கிடைப்பதற்கு வசதியாக அந்தந்த மாவட்டங்களிலேயே உரிய அலுவலர்களுடன் சிறப்பு அலுவலகங்கள் அமைக்கப்படும்.

முன்னுதாரணமான நீர் மேலாண்மை

புவியியல் அடிப்படையில் இயற்கையாகவே நீருக்கு வஞ்சிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு அமைந்துவிட்டது. அதனால்தான் நம்முடைய நீர்த் தேவைகளுக்கு அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஆறுகளையும், வாய்க்கால்களையும், வடிகால்களையும் சீரழிவில் இருந்து மீட்டெடுப்பது அத்தியாவசியம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நினைக்கிறது. தேவையான இடங்களில் தடுப்பணை களைக் கட்டுவதையும், ஏற்கனவே இருக்கிற நீர்நிலைகளைப் பராமரிப்பதையும், புதிய நீர்நிலைகளை உருவாக்குவதையும் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். நீர்ப்பாசனத்திற்கு என தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி இவற்றை எல்லாம் சிறப்புற செயல் படுத்திட இந்த இயக்கம் உறுதி ஏற்கிறது. அம்மா அவர்களின் கனவுத் திட்டமான மழை நீர் சேகரிப்பை எல்லா முனைகளிலும் உறுதியோடு செயல்படுத்துவோடு, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதையும், தமிழ்நாட்டிற்கான தனி தண்ணீர் கொள்கை உருவாக்குவதையும் அவசியமான பணிகளாக கழகம் கருதுகிறது.

நதி நீர் இணைப்பு

காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பைப் பெற்ற பிறகும் நமக்குரிய நீரைத் தராமல் கர்நாடகா நம்மை வஞ்சிக்கிறது. முல்லைப் பெரியாரிலும் நமக்கான இடர்பாடுகள் தொடர்கின்றன. மத்தியில் அமையும் அரசுகளும் தங்களின் அரசியல் சுயநலத்திற்காக அதை வேடிக்கை பார்க்கும் அரசாகவும் அந்த துரோகச் செயல்களுக்கு துணைபோகும் அரசாகவும் அமைகின்றன. இந்தப்பிரச்சனைக்குத் நிரந்தர தீர்வாக தென்மாநில நதிகளை, குறிப்பாக கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதிகளை இனைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக மத்திய அரசின் நிதி கிடைப்பதில் தாமதம் மற்றும் சிக்கல் எழுந்தால், உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி முகமைகளின் நிதி உதவி பெற்று இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

மாநிலத்துக்குள்ளாக ஓடும் சிறு நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை தரப்படும். நீண்டகாலமாக கிடப்பில் இருந்து தற்போது பெயரளவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம், காவிரி, அக்கியாறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய 6 ஆறுகளை இணைக்கும் கட்டளை கதவனையுடன் கூடிய காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மிகத் தாமதமாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு அவினாசி திட்டம் உண்மையில் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் முதலில் பவானி சாகர் அணையின் நீர் வரத்து உயர வழிவகை செய்ய வேண்டும். இதற்காக மேற்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கனவுத் திட்டமான பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தினை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம்

தமிழகத்தின் விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது காவிரி பாயும் பகுதிகளில் நடக்கும் விவசாயம்தான். அந்த விவசாயம் செழித்தோங்க தங்கு தடையற்ற காவிரி நீர் டெல்டாவின் கடைமடைப் பகுதி வரை பாய வேண்டியது அவசியம். இதை உறுதிப்படுத்தும் வகையில் காவிரி நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இதன் காரணமாக தமிழக அரசுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் காவிரியின் குறுக்கே மேகாதாது வில் அணை கட்டுவதற்காக ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. அங்கே அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவும் பாலைவனமாகும் என்பதை உணர்ந்து தமிழக விவசாயிகள் கொதித்து போயிருக்கிறார் கள்.அவர்களின் கொதிப்பை போக்கும் விதமாக மேகதாதுவில் அணை கட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்வதையும், இனிவரும் காலங்களில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானப் பணிகள் நடந்தாலும் அது காவிரி பாயும் மாநிலங்களின் ஒட்டுமொத்த அனுமதி மற்றும் ஒப்புதலை பெறாமல் நடக்க முடியாது என்பதையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதி செய்யும்.

· காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரிலேயே அதிகாரமுள்ள அமைப்பாக அது அமைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை நடுவர் மன்றத் தீர்ப்பை முழுமையாகவும், முறையாகவும் அமல்படுத்தும் வகையில் கூடுதல் அதிகாரங்களை தற்போதுள்ள ஆணையத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.

· குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாத்ததில் காவிரி நீரைப் பெறும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை இந்த காவிரி ஆணையம் பெற்றிருக்கும் நிலையை ஏற்படுத்துவோம்.

· தமிழக விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதையும், முல்லை பெரியாரில் இராண்டாவது அணை கட்டும் முயற்சியையும் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கமாட்டோம்.

விவசாயத்துடன் இணைந்த தரிசு நில மேம்பாடு

நிரந்தர நில உரிமைப் பத்திரங்கள் மூலமாக தனியார் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, புறம்போக்கு நிலங்களை பயன்பாட்டின் அடிப்படையில் பிரித்து, தரிசு நிலங்களை மேம்படுத்தி மானாவாரி பயிர் மற்றும் பழவகை மரங்கள், வேம்பு, முருங்கை, பனை மற்றும் புளிய மரங்கள் பயிரிடும் வகையில் அந்நிலத்தை குறைந்தபட்சம் சீர்திருத்தி, விவசாயத்தின்பால் ஆர்வம் கொண்டு, நிலமில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர் குழுவுக்கு முன்னுரிமை அளித்து அந்நிலங்களை குறைந்தது ஐந்து ஏக்கர் அளவுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

· தரிசு நில வகைப்பாட்டிற்குப் பிறகு மீதமிருக்கும் நிலத்தை விவசாயப் பயன்பாட்டிற்குப் பயன்படுவது போலவே, பால் வளத்தைக் கருத்தில் கொண்டு மாட்டுப் பண்ணை மற்றும் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு மையங்கள் அமைக்கவும் படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த இடம் பகிர்ந்தளிக்கப்படும். இந்த தரிசு நிலங்களை விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்புத் தேவைகளுக்காக வழங்கப்படும்போது, அரசுக்கு ஏதேனும் வருவாய் கிடைத்தால் அந்தத் தொகை சம்மந்தப்பட்ட கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

· கோழிப்பண்ணை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அத்தொழிலில் நவீனமயமாக்கலை ஊக்குவிக்கவும், ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் தற்போது மாநில அரசு வழங்கும் 25% என்ற மானியத்தை மேலும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

· நாட்டு மாடு மற்றும் நாட்டு நாய் வகைகளை பாதுகாக்கவும், அவற்றை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நலன்

அரசு எந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் அரசு ஊழியர்களும், எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கான பணியில் தங்களை அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர்களும், மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களும் எதற்காகவும் போராடாத சூழ்நிலையை ஏற்படுத்துவது வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தரப்பட வேண்டும். அதேநேரத்தில் காலத்திற்கேற்ப நிர்வாகத்தை மேம் படுத்துவதிலும், கற்பித்தலைத் தரமாக்கிடுவதிலும், உள்ளன்போடு சிகிச்சை அளிப்பதிலும் அவர்களுக்குள்ள பொறுப்பை உணர்த்தி, அரசு ஊழியர் – ஆசிரியர்கள், மருத்துவர்களின் முழுமையான பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் அரசாட்சி நடக்க வேண்டும் என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை.

காலியாக உள்ள ஆசிரியர், அரசு ஊழியர் உள்ளிட்ட அரசுப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். பகுதி நேர ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், இசை, ஓவியம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலியிடங்களை நிரப்புவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையே செயல்படுத்தப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்பு வசதியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் அங்கே போக மறுப்பதற்கு குடியிருப்பு வசதிகள் போதிய அளவு இல்லாமல் இருப்பதே காரணம்.
இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றியம் தோறும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

100 பேருக்கு குறையாமல் வேலைசெய்யும் அரசு அலுவலக வளாகங்கள் அனைத்திலும் சலுகை விலை உணவகங்கள் அமைக்கப்படும். இந்த உணவகங்களை நடத்த மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றம்

அனைத்து துறைகளிலும் பெண்கள் கால்பதித்து சாதனை சிகரங்களை தொட்டு வரும் இந்த நேரத்தில் அரசியலில் பெண்களுக்கான உரிய பங்கு என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. மத்திய அரசை வலியுறுத்தி நாடளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நாடு நல்ல மதிப்பைப் பெற்ற நாடா, வளர்ந்த நாடா என்பதை அளவிடுவதற்கான ஒரே அளவுகோல் அந்த நாடு பெண்களை எந்த அளவுக்கு மதித்து நடத்துகிறது என்பதுதான். அதை மனதில் வைத்துதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பெண்கள் நலனில், முன்னேற்றத்தில் தங்கள் இறுதி மூச்சு வரை கவனம் செலுத்தினார்கள். அதே பாதையில் பயணிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பெண்களின் நலனில், பிரச்னையில் கவனம் செலுத்தி வருகிறது.

பெண்கள் பருவம் எய்தும் காலம் தொடங்கி அவர்களின் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை மனதில்வைத்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு தொடங்கி கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அவர்கள் கல்வி கற்கும் வளாகத்திலேயே மருத்துவ பரிசோதளை செய்யவும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் அவர்களின் மருத்துவ குறிப்புகளை பதிவு செய்து கணினி மயமாக்கி பாதுகாக்க வழிவகை செய்யப்படும்.

இதன்படி ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஓர் அடையாள எண்ணுடன் மருத்துவ குறிப்புகளை பதிவு செய்து கொள்ளும் ஒரு மாணவி, தனது கல்லூரி படிப்பு வரை எந்த ஊரில், எந்தக் கல்வி நிலையத்தில் கல்வி பயின்றாலும் அதே எண்ணைக் குறிப்பிட்டு தொடர் மருத்துவ அறிவுரைகளையும், சிகிச்சைகளையும் எளிதில் பெற முடியும். ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் ஒரு பெண் ஆசிரியையின் மேற்பாற்வையில் சங்கடம் இல்லாமல் இந்த இலவச விநியோகம் நடக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த இலவச சானிடரி நாப்கின் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்டம் தோறும் மையங்கள் அமைக்கப்படும். அந்தந்த பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இம்மையங்களில் உரிய பயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கென்று சிறப்பு உளவியல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். பணிக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி உளவியல் ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பெயரில் ரூபாய் 50000 வைப்புநிதியாக வங்கியில் போடப்படும். அதே குடும்பத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டதற்கான சான்றிதழை ஆதாரமாக வைத்து இரண்டாவது பெண் குழந்தையின் பெயரிலும் ரூபாய் 50,000 வைப்பு நிதியாகப் பெயரில் போடப்படும். அப்பெண் குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களின் மேல் கல்விகாகவோ, திருமணத்திற்காகவோ அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளலாம். பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக சிறப்பு விடுப்பு (Special Leave) அளிக்கப்படும். புரட்சித்தலைவி அம்மா காலத்தில் தொடங்கப்பட்டு, தற்போது நிதிப்பற்றாக்குறை எனக் கூறி கடந்த இரண்டாண்டுகளாக சரிவர செயல்படுத்தப் படாத, மகப்பேறு கால நிதி உதவித்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் தாலிக்காக 8 கிராம் தங்கமும், உதவித் தொகை ரூ.25,000லிருந்து ரூ50,000/- ஆகவும், பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண் களுக்கு தாலிக்காக 8 கிராம் தங்கத்துடன், ரூ.50,000 மாக உள்ள உதவித்தொகை ரூ.1,00,000/- ஆகவும் உயர்த்தப்படும்.கணவனை இழந்த பெண்களின் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் டாக்டர் தர்மாம்பாள் திட்டத்தின் கீழ் கல்வித்தகுதி தேவையில்லாத பெண்களுக்கு விதவை மறுமணத்திற்கான தற்போது வழங்கப்படும் 4 கிராம் தங்கத்துடன், ரூ.25,000 மாக உள்ள உதவித்தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்படும். பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த விதவைப் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கத்துடன் தற்போதுள்ள ரூ.50,000 உதவித்தொகை ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும்.

காஸ் சிலிண்டருக்கு மானியம்

தமிழகத்தில் உள்ள சுமார் இரண்டு கோடிக்கும் மேலான குடும்பங்கள் சமையல் காஸ் இணைப்பை பெற்று இருக்கின்றன. காஸ் சிலிண்டருக்கான விலை நாளுக்குநாள் ஏறி வரும் நிலையில் ஏழை மற்றும் நடுத்த குடும்பங்களுக்கு மாதத்திற்கு ஒரு சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியத்தொகையாக வழங்க கழக அரசு ஏற்பாடு செய்யும்.

திருநங்கையர் நலன்

திருநங்கைகளுக்கு அரசின் சார்பில் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படும். அவர்களும் மற்றவர் களைப் போல கௌரவத்தோடு வாழ்வதற்கான கடனுதவிகள், திட்டங்கள் செயல்படுத்தப்படும். தகுதியும் திறமையும் உள்ள திருநங்கையருக்கு அரசு வேலைகளில் உரிய வாய்ப்பளிக்கப்படும்.

புதுப்பொலிவுடன் புது வாழ்வு திட்டம்

2005ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கனவுத் திட்டம்தான் புதுவாழ்வு திட்டம். தமிழகம் முழுக்க இருக்கும் சுமார் பத்து லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணித்து, நிர்வகிக்கும் பணியை இந்த புதுவாழ்வு திட்ட ஒருங்கிணைப் பாளரும், ஆலோசகர்களும் மாநிலம்முழுக்க வெற்றிகரமாக செய்துவந்தார்கள். 2016ம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தத்திட்டம் அம்மா மறைவுக்குப் பிறகு செயலிழந்து போய்விட்டது. அந்த புதுவாழ்வு திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து, உரிய ஆலோசனை களும் நிதி உதவியும் இல்லாமல் தள்ளாடும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் இத்திட்டத்தின் மூலமாக புது ரத்தம் பாய்ச்சப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள்

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்தில் தனி அடையாளமாக திகழ்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற தனி கவனம் செலுத்தப்படும். ஊரகப் பகுதிகளில் அந்தப் பகுதிகளின் தன்மைக்கு ஏற்ப உள்ளூர் உற்பத்தி தொழில்களை கண்டறிந்து, அதற்கேற்ப சிறப்பு பயிற்சிகள் அளித்து உரிய நிதி உதவி செய்து, அத்தகைய உற்பத்தி தொழிலில் அந்தப் பகுதி மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்த்த பெண்கள் ஈடுபட வாய்ப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

கிராமப்புறங்களில் படித்த மற்றும் படிக்காத பெண்களை உள்ளடக்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும், குறிப்பாக எண்ணெய் வித்துக்கள், கொள்முதல் செய்து சமையல் எண்ணெய் தயாரித்து அந்தந்த பகுதிகளிலேயே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அந்தப் பெண்களுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைப்பதுடன் இயற்கையான சமையல் எண்ணெய் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

இயற்கை மூலிகை பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள் அமைப்பது, கால்நடைத் தீவனம் உற்பத்தி போன்றவற்றிலும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஈடுபட வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை குறைந்தது ஐம்பது சதவிகித அளவிற்காவது அரசுத் துறைகளே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கபடும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள ஒரு பெரிய கிராமத்தில் வாரச் சந்தை நடப்பது உறுதிப் படுத்தப்படும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை அரசே ஏற்படுத்தும். இதன் மூலம் மகளிர் மற்றும் இளைஞர் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய கூடுதல் வாய்ப்பு ஏற்படும்.

· மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

இளைஞர் நலன்

மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போன்றே வேலையில்லாமல் இருக்கும் கிராமப்புற இளைஞர்களைக் கொண்ட இளைஞர் சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்படும். உள்ளூர் சூழலுக்கேற்ப அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளித்து, நிதியுதவியுடன் புதிய தொழில்கள் தொடங்க இக்குழுக்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்த இளைஞர் சுய உதவிக் குழுக்கள் வேளாண் சார்ந்த தொழில்களைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த இளைஞர் சுய உதவிக் குழுக்களும் புதுவாழ்வு திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் வழிநடத்துதலின் கீழ் கொண்டுவரப்படும். இதன் மூலம், எந்தவித தடுமாற்றமும், நிதிச் சிரமும் இல்லாத வகையில் மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்கள் இயங்குவது. உறுதிப்படுத்தப்படும்.

· இளைஞர்கள், இளம்பெண்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் அளிக்கப்படும். விளையாட்டுத்துறையில் திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கான வசதிகள் உருவாக்கித்தரப்படும். இதற்காக உள்ள கடினமான நடைமுறைகள் மாற்றப்பட்டு, கிராமங்களில் இருந்து வருபவர்களும் எளிதில் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்படும்.

அனைத்து நிலை அரசு வேலைகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும். தனியார் வேலை வாய்ப்பையும் பெற்றுத்தரும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

ஆண்களுக்கும் இருசக்கர வாகன திட்டம்

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த அம்மா இரு சக்கர வாகனத் திட்டம், இளைஞர் களுக்கும், குடும்பத்தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆண்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். பெண்களுக்கு வழங்கப்படுவதைப் போல 45 வயது வரையிலான ஆண்களுக்கும் டூவீலர் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். பணிக்குச் செல்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.

அம்மா கிராமப்புற வங்கி

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி ஆதாரமாக ஊராட்சி ஒன்றிய தோறும் ஒதுக்கப்பட்ட நிதி ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் கொண்டுசெல்லப்பட்டு முறையான பராமரிப்பு இல்லாததாலும், தவறான நிர்வாகத்தாலும் அந்த நிதி கரைந்துபோனதாக பரவலான புகார்கள் தொடர்ந்து எழுகின்றன. இதை மனதில் வைத்து, தமிழகம் முழுக்க உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா கிராமப்புற வங்கி என்ற பெயரில் தலா ஒரு வங்கி ஏற்படுத்தப்படும். அந்தந்த ஒன்றியப் பகுதிக்குட்பட்ட மகளிர் மற்றும் இளைஞர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழில் தொடங்க ஆலோசனை, நிதியுதவி, கடன் வசூலிப்பு போன்ற விஷயங்களை இந்த வங்கி கவனிக்கும்.

முதற்கட்டமாக தலா ஐந்து கோடி ரூபாய் மூல நிதியுடன் தொடங்கப்படும் இந்த வங்கிகளின் நிர்வாகத்தை ஒரு ஜ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில், நிதி மற்றும் கூட்டுறவுத்துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழு நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு சிறு வணிக்க கடனாக குறைந்தது ஐம்பதாயிரம் முதல் அதிகபட்சம் இரண்டு லட்சம் வரை கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். கடன் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை பயனாளர் முன்பணமாக செலுத்தும் வகையில் வழங்கப்படும் இந்தக் கடனுதவித் திட்டமும் அம்மா கிராமப்புற வங்கியுடன் இணைக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களாக இருப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்கு வதுடன் இது தொடர்பான வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து, குற்றவாளி களுக்கு தண்டனை பெற்றுத்தருவது உறுதி செய்யப்படும்.

குழந்தைகள் நலன்

குற்றங்கள் அதிகரித்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதும் அதிகரித்திருக்கிறது. பிச்சை எடுத்தல், பாலியல் தொழில், உடல் உறுப்பு திருட்டு மற்றும் கொத்தடிமை தொழில்களுக்காக இந்த குழந்தை கடத்தல் நடக்கிறது. இப்படி கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்பட்டு சமூக நலத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள். பதினெட்டு வயது நிரம்பிய பின் வெளியே அனுப்பப்படும் அந்தக் குழந்தைகளின் பிந்தைய வாழ்க்கை கண்காணிப்புகள் ஏதுமின்றி கடந்துபோகிறது. இந்த நிலையை மாற்றி அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை நல்ல விதமாக அமைக்க ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

மூத்த குடிமக்கள் நலன்

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்கள் சராசரி ஆயுள் 30 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்த நிலை இன்று மாறி, சுகாதாரத் துறையில் ஏற்பட்டிருக்கும் கணிசமான முன்னேற்றத்தின் காரணமாக 67 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது. இதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருப்பதாலும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக் கிறது.மாறிவரும் சமூக சூழலுக்கு ஏற்ப இவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் முதியோர் இல்லங்களை நோக்கி அவர்கள் செல்ல வேண்டிய வேதனையான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் அவர்களின் தனிமை உணர்வை போக்குவதிலும் அவர்களின் சுகாதாரத்திலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை உள்ளிடக்கிய குழு ஒன்றை அமைத்து மூத்த குடிமக்கள் கொள்கை வகுக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் வழங்குவதைப் போன்று அரசு விரைவுப் பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் மொத்த மக்கள் தொகையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் 11.2% எனுமளவுக்கு நாட்டிலேயே அதிகளவில் மூத்தக் குடிமக்களைக் கொண்டிருக்கும் இரண்டாவது மாநிலமான தமிழ்நாட்டில் ஆதரவற்ற முதியவர்களே இருக்கக்கூடாது என்பதற்காக அரசாங்கமே முதியோர் இல்லங்களை உருவாக்கி, சிறப்பான முறையில் பராமரிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என கழகம் விரும்புகிறது.

60 வயதை அடைந்த முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித் தொகை முறையான காரணங்கள் இன்றி நிறுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இந்த நிலையை மாற்றி, 60 வயதை அடைந்த முதியவர்கள் எளிய நடைமுறைகளைப் பின்பற்றி உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது வழங்கப்படும் ஆதரவற்ற முதியோர் உதவித் தொகையான (OAP) ரூ.1,000/- என்பது இனி ரூ.2,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அந்தத் தொகையை மாதா மாதம் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு, முதியோர்கள் அவரவர் வசிக்கும் ஊரிலேயே சிரமமின்றி இந்த உதவித் தொகையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கொள்கை

மாற்றுத் திறனாளிகளுக்காக ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல் படுத்தி வந்தாலும், அவர்களின் அடிப்படையான அவசியமான பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 15 வலியுறுத்தும் அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமை என்ற அடிப்படையே இதன்மூலம் அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது. எனவே மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவுகள் 15 மற்றும் 16ல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

· மாற்றுத் திறனாளிகளின் நீண்டகால கோரிக்கையான உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு என்ற விஷயத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அர்த்தமுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்லும்.

· பொதுக்கல்வி துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி உள்ளிட்ட கல்வியை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் அளிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தபட்சம் நான்கு சிறப்பு பள்ளிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

· மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களாக அறிவித்து, அரசின் நலத்திட்டங்கள் வேறு நிபந்தனைகள் ஏதுமின்றி அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

· அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இலவச சிகிச்சை செய்வது உறுதி செய்யப்படும்.

· மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் வகையில் கொள்கை முடிவு எடுக்கப்படும்.

· மத்திய, மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க மாற்றுத் திறனாளிகளையும் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்பை நிரப்பும் விஷயத்தில் ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

· தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த அர்த்தமுள்ள வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

· மூத்த குடிமக்களுக்கு வங்கி வைப்பத் தொகைக்கான வட்டி அதிகமாக வழங்கப்படுவதைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க ஐந்து லட்சம் வரை ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

· மாற்றுத்திறனாளிகள் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

· மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். அதிக உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்ள அளிக்கப்படும் தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

சிறுபான்மையினர் நலன்

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மதவழிபாட்டு உரிமையும், மதச் சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.வக்ஃபு வாரிய சொத்துகளை சீரமைத்து அதிலிருந்து இஸ்லாமிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். வக்ஃபு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளையும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு வாய்ப்புகளையும் ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் சச்சார் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் அமல்படுத்தக் கூடிய மாற்றங்களை ஆராய சிறப்புக் குழு ஒன்று அமைத்து இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்படும். இந்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகளையும் மத்திய அரசுகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. குறிப்பாக நீதியரசர் ரங்கநாத்மிஸ்ரா குழுவின் பரிந்துரைக்கு உரிய சட்ட அங்கீகாரம் இல்லாததுதான் அதற்கு காரணம் என்பதால், அவற்றை அமல்படுத்தும் அளவுக்கு அந்தக் குழுக்களின் அறிக்கைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது ரோஸ்டர் முறையின் காரணமாக பல்வேறு குளறு படிகள் நிகழ்கின்றன. இதைத் தீர்ப்பதற்கு இஸ்லாம் சமூகத்தவரையும் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்படும். 1957க்கு பிறகு வக்ஃபுக்கு சொத்துக்கள் கணக்கெடுக் கப் படவே இல்லை. இதனால் வக்ஃபுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பட்டு உள்ளன. எனவே சிறப்பு வருவாய் அதிகாரிகளைக்கொண்டு வக்ஃபு ஆவணங்களின்படி புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் வக்ஃபு சொத்துக்கள் மீட்கப்படும். அப்படி மீட்கப்படும் வக்ஃபு வாரிய சொத்துக்களில் தகுதியுள்ள இடங் கள் கண்டறியப்பட்டு, அதில் ஏழை முஸ்லிம்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும். அத்துடன்  இந்திய அளவில் வக்ஃபு செய்யப்படும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், முஅத்தின் கள் அனைவருக்கும் குறைந்த பட்ச மாத ஊதியம் நிர்ணயிக்கப்படும். கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்தால் இஸ்லாமியர்கள் தங்கள் திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சீர்மரபினர் நலன்

சீர்மரபு வகுப்பினர் (DNC) என்ற பிரிவின் கீழ் உ்ள்ள சுமார் 68 சமூகத்தினர் தங்களது பொருளாதார, சமூக சிக்கல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சீர்மரபு பழங்குடியினர் (DNT) என்று தங்களை அழைத்து அதன்படி சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனை நிறைவேற்றித் தருவதற்கு கழக ஆட்சி அமைந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழு தமிழர் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை

30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற் கான உறுதியான நடவடிக்கைகளை 2014ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டார். மனிதநேய அடிப்படையில் ஏழு பேரை உடனடியாக விடுவிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுவித்தது. ஆனால் விதிமுறைப்படி விடுதலை யாவதற்கு எல்லாவிதத் தகுதிகள் இருந்தும் 41 இஸ்லாம் சமூக சிறைவாசிகளை தமிழக அரசு விடுவிக்கவில்லை. இவர்களையும் உடனடியாக விடுவிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

காவல்துறையினர் நலன்

கால நேரமற்ற பணிச்சூழல், அதனால் ஏற்படும் மன அழுத்தம், வேலைக்கு ஏற்ற ஊதியம் இன்மை, சமூகத்தின் அவச்சொல் என காவல் துறை வேலை என்றாலே கடினமான பணி என்ற நிலையை மாற்றிட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நினைக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்கள் மற்றும் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துதல், அவர்களுக்கு தினசரி பணி நேரத்தை வரையறுத்தல், வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு அளித்தல், காலிப்பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைப்பது, தொடர் பயிற்சி வழங்குதல், பெண் காவலர்களுக்கு உரிய கௌரவம் தருதல், பெயரளவுக்கு நீக்கப்பட்டுள்ள ஆர்டர்லி முறையை முற்றிலுமாக அகற்றுதல் போன்றவற்றை செய்து தரப்படும். ‘ஸ்காட்லாந்து யார்டு போலீசாரை விட தமிழக காவல்துறையினர் சிறந்தவர்கள்’ என்ற பழைய பெருமையை மீட்டெடுக்க விரும்புகிறது. காவல்துறையினரின் சீருடை வண்ணத்தை மாற்றுவதில் இருந்து இதற்குத் தேவையான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியோடு உள்ளது. பொது மக்களின் புகார்கள் மற்றும் வழக்கு ஆவணங்களை கணினிமயமாக்குவது உட்பட தமிழக காவல்துறையை மொத்தமாக சீரமைத்து, பழையபடி ‘ஸ்காட்லாந்து யார்டு’க்கு இணையான காவல்துறை என்ற பெயரை மீண்டும் கொண்டு வருவோம். பொதுமக்களின் உயிரையும், உடைமைகளையும் காக்கும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபடும் காவலர்களுக்கு ஆபத்துக்கால படி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் போலீசார் பணியில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்கான பெருமை புரட்சித் தலைவி அவர்களையே சாரும். பெருமைப்பட வேண்டிய இந்த விஷயம் நம்மை வேதனைப்படுத்தும் அளவுக்கு இன்று பெண் காவலர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. பணி இடத்தில் அவர்களுக்கு தரப்படும் வேலை நெருக்கடி மற்றும் பாலியல் தொல்லைகள்தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. பாலியல் ரீதியாக அவர்கள் துன்புறுத்தப்படுவதை அவர்களால் தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ முடியாமல் இருக்கிறது. தற்போதுள்ள நிர்வாக நடைமுறைகளே இதற்கு காரணம். இந்த சங்கடத்தை நீக்கும் வகையில், பாதிக்கப்படும் பெண் காவலர்கள் தங்கள் தரப்பு பிரச்னைகளை தயக்கமும், பயமும் இன்றி வெளிப்படுத்தி நியாய மான தீர்வைப் பெற காவல் துறையில் பெண் காவலர்களுக்கென தனிப் பிரிவு உருவாக்கப் பட்டு அவர்களுக்கு, குறைந்தபட்சம் காவல்த் துறை தலைவர் (IG) என்ற அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். வி.வி.ஐ.பி.கள் பயணிக்கும்போது சாலையோரங்களில் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் நிறுத்தப்படமாட்டார்கள். பணிச்சுமை யின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தால் பெண் காவலர்கள் மட்டுல்ல, ஆண் காவலர்களும் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக மாவட்டந்தோறும் உளவியல் நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் காவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த வசதியைப் பெறுவதற்கு உயர் அதிகாரிகளின் அனுமதி ஒரு தடையாக இல்லாத நிலை உறுதிப்படுத்தப்படும்.

போக்குவரத்து துறை சீர்திருத்தம்

கடன் சுமை மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. போக்குவரத்து கழகங்களின் இந்தக் கடன் சுமையை குறைக்கும் விதமாக தமிழகம் முழுக்க தினசரி ஓடும் ஆயிரக்கணக்கான ஆம்னி பஸ்களை உரிய முறையில் பதிவு செய்யவைத்து, அரசுக்கு வரவேண்டிய வரியை முழுமையாக வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் நிதி போக்குவரத்து கழகங்களை சீர்படுத்தவும் பலப்படுத்தவும் பயன்படுத்தப்படும். தற்போது நடைமுறையில் உள்ள மினி பஸ் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, உரிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க வழிவகை செய்யப்படும். அந்த உரிமத்தை வழங்கும்போதே கிராமப்புற இளைஞர்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் பணியிடங்களை குறைந்தபட்ச ஊதியத்துடன் பெறுவது உறுதி செய்யப்படும்.

ரயில்வே திட்டங்கள்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசு எப்போதுமே பாரா முகத்துடனே நடந்து வந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் புதிய ரயில் பாதை திட்டங்கள் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே அமல்படுத்தப்படவில்லை. நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் திண்டுக்கல் – சபரிமலை ரயில்பாதை திட்டம், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே மண்டல அலுவலகம் அமைக்கும் திட்டம் போன்ற வற்றை துரிதமாக அமல்படுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும். அத்துடன் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த உரிய வழிமுறைகள் ஆராயப்பட்டு அதுவும் அவற்றை நிறைவேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும். தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் குறிப்பாக மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும், முக்கிய சந்திப்புகளும் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும். நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முக்கிய நகரங்களில் கூட நிற்பதில்லை என்ற குறைபாடு தமிழகம் முழுக்க இருக்கிறது. இதை சரிப்படுத்த மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி மக்களின் கருத்தையும், நடைமுறை சாத்தியத்தையும் மனதில் வைத்து அதிகாரிகள் ஒத்துழைப்போடு இந்த குறைபாடு சரிசெய்யப்படும்.

மெட்ரோ ரயில் சேவை கட்டணக் குறைப்பு மற்றும் விரிவாக்கம்

சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் இருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் இதில் தொடர்ச்சியாக பயணம் செய்வது எளிதல்ல என்றளவுக்கு அதன் கட்டணம் அதிகமாக இருக்கிறது. எனவே எல்லோரும் சிரமமின்றி மெட்ரோ ரயில்சேவையைப் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் தாம்பரம் வழியாக வண்டலூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையைப் போலவே கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாநகரங் களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலைக்கு புரட்சித்தலைவி அம்மா பெயர்

சென்னை திருவான்மியூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை நீண்டுள்ள கிழக்கு கடற்கரை சாலைக்கு (ECR) புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கச்சத்தீவை மீட்டெடுப்பதில் உறுதி

மீன்பிடித் தொழிலில் நிறைய நவீனங்கள் வந்து விட்டாலும், மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. அடிப்படை வசதிகள் கூட போதுமான அளவுக்கு இல்லாத இன்றைய நிலையில் அவர்களின் வாழ்வியல் சூழலை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். மேலும் அண்டை நாடுகளால் அவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுவதை மாற்ற வேண்டும். குறிப்பாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியுடன் இருக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தீய சக்திகளால் இலங்கை அரசுக்குத் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டெடுத்தே தீரவேண்டும் என்பதில் புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் போலவே இந்த இயக்கம் உண்மையான அக்கறையோடு செயல்படும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளாமல் நாடளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திய அரசு. இதை சுட்டிக்காட்டி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று 2008ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதுடன், மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்கள் கொடுத்து கச்சத்தீவை திரும்பப்பெற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

மீனவர்கள் நலன்

1076 கி.மீ. கடற்கரை நீளத்தையும் 11 கடலோர மாவட்டங்களையும் கொண்ட தமிழ்நாடு, கடல் மீன் வளம், உள்நாட்டு நீர்வளம், உவர் நீர் வளம், ஆகியவற்றை ஒருங்கே பெற்ற மாநிலமாகத் திகழ்வதுடன் கடல்சார் உணவுப் பொருள் ஏற்றுமதியில் இந்தியாவில் இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது. இதுவரை மீனவர்களுக்காக மீன்பிடி தடைக்கால நிதி உதவி, மீன் பிடிப்பு குறைவு கால நிதி உதவி, டீசல் மானியம் அளிப்பது உள்ளிட்ட சமூகப் பொருளாதார திட்டங்களை மட்டுமே தமிழக மீன்வளத் துறை செயல்படுத்தி வருகிறது. மீனவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் விதமாக தாங்கள் பிடித்து வரும் மீன்களை மீனவர்களே பதப்படுத்தி பாதுகாத்து, தாங்களே விலை நிர்ணயம் செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள ஆறு பெரிய மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் 36 மீன் இறங்கும் தளங் களிலும் குளிர்பதன வசதிகளுடன் கூடிய மின் சேமிப்பு கிடங்குகள் கட்டித் தரப்படும். சில நாட்களுக்காவது மீன்களை இப்படி பதப்படுத்தி வைப்பதன் மூலம் அவசர கதியில் இடைத் தரகர்கள் புகுந்து மீன்களை கொள்முதல் செய்வது தடுக்கப்படுவதால் கூடுதல் லாபத்தை மீனவர்கள் பெற முடியும். கடல் வளத்தை பெருக்கிட முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டு வருடம் முழுவதும் நீர் வரத்து வந்துபோவதை உறுதிசெய்து அதன் விளைவாக மீன் இனப்பெருக்கம் அதிக அளவில் ஏற்பட வழிவகை செய்யப்படும். செயற்கை உறைவிடங்கள், பாறைகள் அமைத்து மீன்கள் உறைவிடத்தை அதிகமாக்கி அதன் மூலம் மீன் உற்பத்தியையும் அதிகரிக்கும் முயற்சி சில இடங்களில் நல்ல பயனைத் தருவதால் மேலும் சில ஆராய்ச்சிகளை நடத்தி இன்னும் கூடுதலான இடங்களில் செயற்கை உறைவிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் மிதவை கூடுகள் அமைத்து அதில் கொடுவா, மடவை தவிர மற்ற இன மீன் வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ இளைஞர்களைக் கொண்ட குழுவினருக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே நன்கு வளர கூடிய கடற்பாசி தொழிலில் மகளிர் மீனவர்களை குழுக்களாக பிரித்து ஈடுபடுத்தி உலகத்தரம் வாய்ந்த கடற்பாசியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். மீனவ குழுக்களுக்கு மானியம் வழங்கி பாரம்பரிய படகுகளை இயந்திர படகுகளாக மாற்றவும், இயந்திரப் படகுகளை ஆழ்கடல் விசைப்படகுகளாக மாற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி, ஆழ்கடலில் முழ்கும் பயிற்சி, அலை விளையாட்டு பயிற்சி போன்றவை அவர்களின் பங்களிப்போடு அளித்து பழவேற்காடு, கோவளம், மெரினா, மாமல்லபுரம் போன்ற இடங்களில் சுற்றுலா விளையாட்டு களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ மகளிருக்கு சிறு குறு விற்பனை கடன்கள் குறைந்த வட்டியில் கிடைக்க வழிவகை செய்யப்படும். சில்லறை மீன் விற்பனையில் ஈடுபடும் மீனவர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களது விற்பனைக்குத் தேவையான அலுமினிய கூடை, ஐஸ் பெட்டி, எடை கருவி, குடை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5,000/- ஆக உயர்த்தப்படும்.  புரட்சித் தலைவி அம்மா பெயரிலான நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கழகம் மேம்படுத்தப் பட்டு புதிய பொலிவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மீனவ சமுதாயத்தினருக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும். மீனவர் சமூகத்தில் உள்ள 28 உட்பிரிவுகளை ஒன்றாகச் சேர்த்து ‘பரதவர்’ என்ற பெயருடன் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உரிய முக்கியத்துவத்துடன் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்நாட்டு மீன்வளம்

தமிழ்நாட்டில் 74 பெரிய, சிறிய நீர்த் தேக்கங்கள் உள்ளன. இதில் 53 நீர்த் தேக்கங்கள் மீன் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தரமான மீன் வகைகளை வளர்த்து மீன்பிடித் தொழிலை ஊக்கப்படுத்த வழிவகை செய்யப்படும். பண்ணைக் குட்டைகள் அமைப்பதன் மூலம் மழைநீரை சேமித்து விவசாயத்திற்கும், கால்நடை பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவது மட்டுமின்றி, அந்த நீரில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் இலவச மீன் குஞ்சுகளும் அதற்கான இலவச தீவனமும் வழங்கப்படும். ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்களில் மிதவை கூடுகள் அமைத்து மீன் வளர்ப்பு செய்திட மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் இளைஞர் சுய உதவி குழுக்களுக்கு போதிய பயிற்சியும் நிதி உதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

நெசவாளர்கள் நலன்

விவசாயத்தையும், விவசாயிகளையும் போலவே நெசவுத்தொழிலையும், நெசவாளர்களையும் காப்பாற்றியாக வேண்டிய நிலை இருக்கிறது. அதிலும் கைத்தறி நெசவை அழிவில் இருந்து மீட்டெடுப்பது மிகவும் அவசியம். காலத்திற்கேற்ப, வாய்ப்பிருக்கும் எல்லா தளங்களிலும் கைத்தறி துணிகளை உயர்த்திப் பிடிப்பதையும், முன்னுரிமை அளிப்பதையும் அரசு நெறி யாக்கிட வேண்டும் என இந்த இயக்கம் விரும்புகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் மானம் காக்கும் ஆடையை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் நிலை கண்ணீரை வரவழைப்பதாகவே உள்ளது. அவர்கள் தொழில் பக்தியை, ஈடுபாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக கைத்தறி நெச வாளர்கள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும். விசைத்தறி நெசவாளர் களுக்கு 1000 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். நெசவுத் தொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கும், இளைஞர் குழுவினருக்கும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.  நெசவாளர்களுக்கு தேவையான நூல் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதை கணக்கில் கொண்டு அரசே நூல் கொள்முதல் நிலையங்களை அமைத்து குறைந்த விலையில் தரமான நூல் கிடைப்பது உறுதி செய்யப்படும். நெசவாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத் தொகை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதை விரைந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.  நலிந்த நிலையில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தி, அவை தொடர்ந்து நல்ல நிலையில் இயங்க நிரந்தர கொள்கை ஒன்று உருவாக்கப்படும். மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் நெசவுப் பாடத்தையும் விருப்பப் பாடமாக தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

புதிய ஜவுளிக் கொள்கை

இந்தியாவிற்கு கணிசமான அந்நிய செலாவணியை பெற்றுத் தருவதில் ஜவுளித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. திருப்பூரில் நடைபெறும் பின்னலாடைத் தொழில் மூலமாக ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைக்கிறது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவையால் பின்னலாடைத் தொழிலில் ஒரு தேக்க நிலை உருவாகியுள்ளது. பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் நாடுகளில் திருப்பூரை விட குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பதால் பின்னலாடை இறக்குமதி செய்யும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் தங்கள் பார்வையை அந்த நாடுகளின் பக்கம் திருப்பி இருக்கின்றன. இதுவும் திருப்பூர் பின்னலாடை தொழில் பின்னடைவைச் சந்திக்க ஒரு முக்கிய காரணம். இதை மனதில் வைத்து பின்னலாடை தொழிலை உள்ளடக்கிய ஜவுளிக் கொள்கை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.Surgical and Medical Textiles என்று சொல்லப்படும் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான ஜவுளிப் பொருட்களுக்கு உலகின் பல நாடுகளில் தேவை இருப்பதாகத் தெரிகிறது. இதை மனதில் வைத்து குறிப்பிட்ட இந்த வகை ஜவுளிப் பொருட்களை தடையின்றி உற்பத்தி செய்து நடைமுறை சிக்கல்கள் இன்றி ஏற்றுமதி செய்ய சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்பக் கல்லூரி

பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பிரதான இடம்பிடித்துள்ள திருப்பூர் மாநகரில், அத்தொழில் வளர்ச்சியை, அது சார்ந்த வேலை வாய்ப்பை மனதில் கொண்டு திருப்பூர் குமரன் பெயரில் கைத்தறி மற்றும் பின்னலாடை தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று தொடங்கப்படும்.

தொழிலாளர்கள் நலன்

விவசாய கூலித்தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பனைத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தையல், சலவை, முடிதிருத்தும் தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் என சுமார் 17க்கும் மேற்பட்ட தொழில் புரிவோருக்கான நல வாரியங்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் இவை எதுவுமே அந்தந்த தொழிலாளர்களுக்கு உரிய தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்வதில்லை. பெயரளவில் இருக்கும் இந்த வாரியங்களுக்கு புத்துயிர் அளித்து, தேவையான நிதிகளை ஒதுக்கி, ஒவ்வொரு தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த ஆட்டோ வாங்குவதற்கான கடனில் ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.

மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் முறை முற்றிலுமாகத் தடை செய்யப்படும். அப்பணிகளில் எந்திரங்கள் (ரோபோ) பயன்படுத்தப்படும்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5,000/- வழங்கப்படும்.

சிறு, குறு தொழில்களை நலிவு நிலையில் இருந்து மீட்க சிறப்பு தொகுப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாவட்ட வாரியாக இதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு, கழக ஆட்சி அமைந்த ஆறே மாதங்களில் தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் புத்தெழுச்சி பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தற்போதுள்ள 17 நலவாரியங்கள் மேம்படுத்தப்பட்டு, தொழிலாளர்கள் உரிய பலன்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையாக மாற்றி யமைக்கப்படும். சாலையோர வணிகர்கள், தலைச்சுமை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு எளிய நடைமுறைகளின்படி ரூ.25,000/- வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். 60 வயது முதிர்ந்த ஆண், பெண் விவசாய தொழிலாளர்கள் நெசவாளர்கள் மீனவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 4000 உதவித் தொகை வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் மரணமடைந்தால் ஈமச்சடங்கு நிதியாக ஐந்தாயிரம் வழங்கப்படும். மரணச் செய்தி கிடைத்த ஐந்து மணி நேரத்திற்குள் அந்த நிதி சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் கைகளில் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். கட்டடத் தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாரா தொழிலாளர் கள் என்ற வகையில் வரும் அனைவருக்கும் நிரந்தர காப்பீட்டுத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, விபத்தால் மரணமடையும் தொழிலாளர் குடும்பத்திற்கு மூன்று லட்சமும், இயற்கை மரணமடையும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும் இழப்பீடு கிடைக்கும் வகையில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்டும்.

என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதில் 2002ம் ஆண்டு பி.ஜே.பி. அரசும், 2006ல் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும் முயற்சி களை மேற்கொண்டபோது, புரட்சி தலைவி அம்மா அவர்கள் தனது துணிச்சல் மற்றும் மதியூகத்தால் அதை முறியடித்து, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தமிழக அரசே வாங்க ஏற்பாடு செய்து தனியார்மயமாவதை தடுத்தார்கள். அதே கொள்கையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து கடைபிடிக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் என்.எல்.சி. நிர்வாகத்துக்கும் அதன் தொழிலாளர்களுக்கும் ஊதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப் பட்டு, கால தாமதம் இன்றி உரிய காலத்தில் அவை அமலாவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதி செய்யும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சொசைட்டி தொழிலாளர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் நிலையை மாற்றி அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும். என்.எல்.சி. நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முழுமையாக பயன்படுத்தாமலும், அதற்குறிய இழப்பீடுகளை இன்னும் கூட முழுமையாக வழங்காமலும் இருக்கிறது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிலையில் அடுத்தகட்ட விரிவாக்கத்துக்காக மேலும் நிலங்களை எடுக்க முயற்சிக்கிறது என்.எல்.சி. நிர்வாகம். முப்பதுக்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இதைக் கடுமையாக எதிர்த்துத் தடுக்கும். அத்துடன் ஏற்கனவே நிலுவையில் உள்ள இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புகளை விரைந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்டாக்சி ஓட்டுனர் நலன்

இந்த நவீன யுகத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல தனியார் நிறுவனங்கள் கால் டாக்சிகளை இயக்குகின்றன. அதில் ஓட்டுனராக பணிபுரிவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும், அந்நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் தங்கள் கார்களை இயக்கும் உரிமையாளர்களுக்கு உரிய லாபத் தொகை கிடைக்காத நிலை இருப்பதாகவும் அவர்களிடையே ஒரு மனக்குமுறல் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கார் ஓட்டுனர்கள், கார் உரிமையாளர்கள், கால்டாக்சி நிறுவனங்கள் என மூன்று தரப்பும் பாதிக்கப்படாத வகையிலும், அவரவர் தரப்பு நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வகையிலும் கால்டாக்சி நிறுவனங்களுக்கான ஒரு தனி கொள்கை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்து கழகம்

அரசு போக்குவரத்து கழகத்தை நட்டத்தில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் பேருந்துகளை நவீனப்படுத்தி, எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டண டாக்சி சேவை அரசு போக்குவரத்து கழகங்கள் வழியாக செயல்படுத்தப்படும். இதன் மூலம் தற்போதைய டாக்சி- வேன் ஓட்டுனர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.

பட்டாசு தொழில் பாதுகாப்பு

பட்டாசு தொழிற்சாலைக்கு பயன்படுத்த வேண்டிய மூலப்பொருட்கள் குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்த தவறான மற்றும் நடைமுறைச் சாத்தியமற்ற கருத்து களின் அடிப்படையில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக பட்டாசு தொழிலே மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பட்டாசு உற்பத்திக்கு எந்த மூலப்பொருள் எளிதில் கிடைக்கிறது, அதன் தாக்கம் என்ன, மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய முடியும் என்பதையெல்லாம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அதிகாரி கள், பட்டாசு தொழில் அதிபர்கள் மற்றும் ஊழியர்களிடம் கலந்து பேசி, அதன் அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை அளித்துப் புதிய உத்தரவுகளை பெற்று பட்டாசுத் தொழிலை அழிவில் இருந்து காக்கும் பணியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மேற்கொள்ளும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளும் தமிழக பட்டாசுத் தொழிலை பெருமளவில் பாதிக்கிறது என்பதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தியாகும் பட்டாசுகளை பண்டிகை காலங்களின் போது இரண்டு மணி நேரம்தான் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த மற்றொரு தீர்ப்பும் பட்டாசுத் தொழிலுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டோடு இணைந்த பட்டாசு வெடிக்கும் விஷயத்தை உரிய முறையில் எடுத்துச் சொல்லி இந்தத் தீர்ப்பை மாற்றியமைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

காலதாமதமற்ற நீதி

‘தாமதிக்கப்படுகிற நீதி, மறுக்கப்படுகிற நீதி’ என்பதை மனதில் கொண்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், நவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் பயன்படுத்தப்படும். முதற் கட்டமாக உரிமையியல் வழக்குகளை (Civil Cases) இதன் மூலம் விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனாவிலும், ஐரோப்பாவின் சில நாடுகளிலும் நீதித்துறையில் நடைமுறைக்கு வந்திருக்கும் இம்முறையை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் கொண்டுவரும் போது, சாதாரண வழக்குகள் கூட ஆண்டுக்கணக்கில் நீளும் நிலைமை மாற்றப்படும். தாமதமில்லாத நீதி எல்லாருக்கும் சாத்தியப்படுத்தப்படும். ‘வாதியும் தமிழன்; பிரதிவாதியும் தமிழன்; வாதாடுபவனும் தமிழன் – ஆனால் வாதிடும் மொழி மட்டும் தமிழ் இல்லையே! ஏன்?’ என்ற நூற்றாண்டு கால ஏக்கத்தைப் போக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழும் வழக்காடு மொழியாக இருப்பது உறுதி செய்யப்படும். தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள் மொத்தமும் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முனைப்போடு மேற்கொள்ளும்.

அரசு கஜானாவுக்கே கனிம வள வருமானம்

தமிழ்நாட்டில் நிறைந்திருக்கும் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கோ, மக்களுக்கோ செல்வதைவிட தனிநபர்களுக்குதான் அதிக பயன் கிடைக்கிறது என்ற நிலை மாற்றப்படும். இதனை முழுவதுமாக திருத்தி அமைத்து அந்த வருவாய் மொத்தமும் அரசின் கஜானாவுக்கு நேரடியாக சென்று சேரவும், அதன் வழியாக மக்களுக்கு நன்மைகள் நடை பெறுவதை உறுதி செய்யவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருக்கும் தமிழக அரசின் நிதிநிலையை சீராக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளை மூடுவதன்மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும் தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை அரசே முன்நின்று எடுத்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சமலை, சேர்வராயன் மலை, நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லி மலை, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கௌந்தி வேடியப்பன் மலை ஆகிய பகுதிகளில் பெருமளவில் இருக்கும் உலகத் தரம் வாய்ந்த இரும்புத் தாது உள்ளிட்ட கனிமங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதன் மூலம் மிகப்பெரிய அளவில் தமிழக அரசு வருவாய் ஈட்ட முடியும். இதுபோன்று தாதுக்கள் மற்றும் தாது மணல்கள் வெட்டி எடுப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் தனியார் பங்களிப்புக்கு அவசியம் ஏற்பட்டாலும், நிதி மற்றும் நிர்வாக விஷயத்தில் தமிழக அரசின் கட்டுப்பாடு குறைந்தது 51 சதவிகிதம் இருப்பது உறுதி செய்யப்படும்.

மத்திய அரசின் விதிமுறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்வுகளின் காரணமாக தாது மணல் எடுப்பதும் ஏற்றுமதி செய்யப்படுவதும் தடைப்பட்டிருக்கிறது. இதனால் வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோனதுடன், அரசுக்கு வரவேண்டிய நிதி வருவாயும் மிக கணிசமாக தடைப்பட்டிருக்கிறது. தனிநபர்கள் செய்த தவறுகளால் ஏற்பட்டிருக்கும் இந்தத் தடையை சட்டபூர்வமாக அகற்றி, இல்லுமினைட், கார்னெட் போன்ற விலை மதிப்புள்ள கனிம வளங் களை எடுத்து ஏற்றுமதி செய்வதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்கவும் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி கனிம வளங்களை எடுக்கும் போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர்களின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் அந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். அதன் மூலம் இயற்கை வளம் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

மாநிலங்களுக்கான நியாயமான வரிப்பகிர்வு

நாட்டின் நிர்வாகப் பொறுப்பு மத்திய அரசின் கைகளில் இருந்தாலும், மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பது மாநில அரசுகள்தான். கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி நிர்வாகம், சமூக நலத்திட்டங்கள் என அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் பெருமளவு நிதி மாநில அரசுகளால்தான் செலவிடப்படுகிறது. இந்த நிதிச் செலவினத்தில் பெருமளவு தங்களுக்கென உள்ள வரி வருவாயில் இருந்துதான் மாநில அரசுகள் செய்கின்றன. இந்த வருவாயில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சரக்கு சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி அமைந்திருக்கிறது. ஜி.எஸ்.டி. தொடர்பான மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக, இந்த சட்டம் அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இழப்பீடு மட்டுமல்ல பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி அளிக்கப்பட்ட வேண்டிய பகிர்வுத்தொகையைக் கூட மத்திய அரசு உரிய நேரத்தில் அளிக்கவில்லை என்று அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரி வருவாயில் நமக்கான நிதியை உரிய விகிதத்தில், உரிய நேரத்தில் பெற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அதிகாரத்திலும், நிர்வாக நடைமுறையிலும் உரிய மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம்

நம் நாட்டின் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் விலைவாசி ஏற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது பெட்ரோலிய பொருட்களின் அசுர வேக விலையேற்றம் தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவை சந்திக்கும் போது அதற்கு நேர்மாறாக இங்கே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஏற்றிக் கொண்டு போவது கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் வாடிக்கையாக இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசு கொடுத்த அனுமதியின் காரணமாகவே, இப்படி கேட்பார் யாருமின்றி தங்கள் இஷ்டத்திற்கு விலையை நிர்ணயிக் கின்றன எண்ணெய் நிறுவனங்கள். இந்த நிலையை மாற்றி, விலை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசிடமே மீண்டும் கொண்டுவருவதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் பெட் ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் விஷயத்தை வெளிப்படைத் தன்மை யுடன் கண்காணிக்க தனி ஆணையம் ஒன்றை அமைக்க வலியுறுத்தப்படும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு உரிய முன்னெடுப்புகள் செய்யப்படும். அதுவரை, மக்கள் படும் இன்னலை கருத்தில் கொண்டு மாநில அரசு விதிக்கும் வரியைக் குறைத்து குறைவான விலையில் தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் கிடைக்க வழி செய்யப்படும். மாற்று எரிபொருள் மற்றும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட வாகன இயக்கத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

சுங்கச் சாவடி கட்டண வரையறை

இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான சுங்கச்சாவடிகள் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் நகரங்களை இணைக்கும் நவீன மயமான சாலை வசதிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சாலையை அமைத்த தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சுங்கச் சாவடிகள் அமைத்து குறிபிட்ட காலம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உரிமத்தைப் பெறும்போது இந்த சாலையை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாவதை கண்காணித்து உரிய தொகை வசூலிக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட காலவரையறைக்கு முன்பாகவே அந்தச் சுங்கச் சாவடிகள் மூடப்படுவதையும், வாகனங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு ஏற்ப கட்டணக் குறைப்பு செய்வதையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதிப்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளின் வருமானம் மற்றும் உரிமக் காலக்கெடு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தேவையற்ற சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சூழலியல் பாதுகாப்பில் அக்கறை

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்குத் தனித்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவரும் நிலையில், நம் நாட்டில் அதற்குரிய செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்பது கவலையளிக்கிறது. எனவே, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்கால தலைமுறைகள் நம்மை மன்னிக்காது என்பதை இந்த இயக்கம் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. அதற்குத் தேவையான ஆக்கப் பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தவும், இருக்கிற வனங்களை, இயற்கை வளங்களை, உயிரிகளைப் பாதுகாக்கவும், சிறு, குறுங்காடுகளை வளர்க்கவும், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் பனை உள்ளிட்ட மரங்களை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கவும் வேண்டும் என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் கொள்கை. மேலும் இயற்கையை அழித்து கொண்டு வரப்படும் நியூட்ரினோ போன்ற திட்டங்களையும், சுற்றுச் சூழலுக்கும், தலைமுறைகளைத் தாண்டி மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர் லைட், அணு உலைகள் போன்றவற்றையும் இந்த இயக்கம் உறுதிபட எதிர்க்கும். தமிழகத்தில் நீண்ட தூரம் ஓடும் நதியான காவிரி பாயும் பகுதியின் இருபுறமும் பாது காக்கப்பட்ட பகுதி களாக அறிவிக்கப்பட்டு, அதன் நீரோட்டத்தையும், சுற்றுசூழலையும் பாதிக்கக்கூடிய எந்த தொழிற்சாலையும் அந்தப் பகுதியில் அமைவது தடுத்து நிறுத்தப்படும். தமிழகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளில் 10%க்கும் கீழ்தான் முறையாக மேலாண்மை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் பெரும் சிக்கலாக உருவெடுக்கும் இப்பிரச்னைக்கு நவீன தொழில்நுட்பங்களின் மூலம், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் அனைத்து வகையான சாலைகளின் இருமருங்கிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும். ‘5 ஆண்டுகளில் பசுமைத்தமிழகம்’ என்ற இத்திட்டம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் செயல்படுத்தப்படும். இதேபோன்று பயன்பாடின்றி கிடக்கும் தரிசு நிலங்களில் குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டமும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு

தமிழகத்தின் உயிர்நாடியாகவும், அனைத்து நதிகளின் பிறப்பிடமாகவும் உள்ள மேற்கு தொடச்சி மலையை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கொடைக் கானலில் உள்ள இந்துஸ்தான் யுனிலீவர்(Hindustan Unilever Ltd) தொழிற்சாலையில் இருக்கும் பாதரசக் கழிவுகளை சர்வதேச தொழில்நுட்பத்துடனும், பாதுகாப்புடனும் அங்கிருந்து அகற்றி, அந்தப் பகுதி முழுவதும் நச்சுத்தன்மையற்ற பகுதியாக மாற்றுவதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மலைவாழ் மக்கள் பாதுகாப்பு

காடு, மலைகளில் வாழும் மலை வாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு என்பது அந்த இயற்கை வளங்களையும் பாதுகாப்பது போன்றதாகும். அந்தளவுக்கு இயற்கை வளங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மலைவாழ் மக்களை அவர்கள் காலம் காலமாக வாழும் மலைப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம்.  பூர்வ குடி மலைவாழ் மக்கள் அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து பாதுகாப்புடன் வாழ உரிய நிரந்தர சட்டங்கள் இயற்றப்படும். மலைப்பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கவும், அது தொடர்புடைய தொழில்களை மேற்கொள்ளவும் நிதியுதவியுடன் கூடிய ஒத்துழைப்பு மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படும்.

நில நிர்வாகம்

நிலங்களை பதிவுசெய்வது கணினி மயமாக்கப்பட்ட பின்பும், நில உரிமை தாவாக்கள் அதிகரித்தபடிதான் இருக்கின்றன. இந்த சர்ச்சைகளை பெருமளவு குறைக்கும் விதமாகவும், நிலப்பயன்பாட்டை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கும் வகையிலும் கிராமம் தோறும் முகாம்கள் நடத்தி, நில உரிமைதாரர்களை அடையாளம் கண்டு, நிரந்தர நில உரிமைப் பத்திரங்கள் வழங்கும் புதிய முறை அமல்படுத்தப்படும். தற்போது நடைமுறையில் உள்ள பட்டா வழங்கும் முறையின் நவீன வடிவமாகவும் பாதுகாக்கப்பட்ட வடிவமாகவும் எளிய முறையில் விரைவாக பட்டா பெறும் வகையில் இது இருக்கும். இந்த செயல்பாட்டின் போதே தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அரசுத் துறைக்கான நிலங்கள், கோவில் நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் என ஒட்டுமொத்த நிலமும் வகைப்படுத்தப்படும். அங்கீகாரம் பெறாத மனைகள் தொடர்பான விஷயங்களில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு மனைகளை வரன்முறைப்படுத்தும் சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

எல்லாப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சி

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சமமாக மேம்படுத்தவும், எல்லாவற்றுக்கும் சென்னையை நோக்கி மட்டுமே மக்கள் வரவேண்டிய நிலையை மாற்றுவதற்கு, தொலை நோக்குப் பார்வையிலான திட்டங்களை மண்டல வாரியாக செயல்படுத்துவதை அவசியம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கருதுகிறது. அதற்கேற்றவாறு மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத தொழில் வாய்ப்புகளையும், அறிவு சார் துறை நிறுவனங்களையும் அவற்றுக்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தந்து உருவாக்க வேண்டும். அதிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்த இயக்கம் விரும்புகிறது.  இதற்காக தமிழகத்தை குறைந்தது ஆறு மண்டலங்களாகப் பிரித்து, மண்டல வாரியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையில் நிரந்தரமாக ஒரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தி, மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சம அளவில் அமல்படுத்தப்பட்டு, மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் திட்டங்களின் பயனை அடைவது உறுதி செய்யப்படும். தொலை நோக்குப் பார்வையிலான திட்டங்கள், மண்டலவாரியாக செயல்படுத்தப்படும். அதற்கேற்ற வாறு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாத தொழில் வாய்ப்புகளையும், அறிவு சார் துறை நிறுவனங்களையும் உருவாக்குவதற்குத் தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தி தரப்படும். பெருநகரங்களை மேலும் விரிவுப்படுத்தி மக்கள் அடர்த்தியை அதிகப்படுத்துவதை விட, மையப்படுத்தப்படாத வளர்ச்சியைப் பரவலாக எல்லா இடத்திலும் உருவாக்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கல்விக் கொள்கை

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின்படி மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது, மண் சார்ந்த வரலாறு மற்றும் சமூகப் பின்னணிகளை மனதில் வைத்து பாடத்திட்டங்களை வகுக்க வேண்டுமானால் கல்வி, குறிப்பாக பள்ளிக்கல்வி மாநில அரசின் பிரத்தியேகப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. பொதுப் பட்டியலில் இருந்தால்தான் சீரான சமமான கல்வி எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட கருத்து நிறைவேறவில்லை என்ற நிஜம் மேற்கண்ட கோரிக்கையை வலுவாக்குகிறது. எனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும் அதே வேளையில், அப்படி மாற்றுவதால் மத்திய அரசால் கிடைக்கக்கூடிய நிதியுதவிகள் தடைப்படாமல் கிடைப்பதில் கவனம் செலுத்தப்படும்.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவச தொடக்கக் கல்வி போன்ற விஷயங்கள் இன்று நடைமுறையில் இருந்தாலும், அதை முழுமையாக செயல்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்களும் நடைமுறைப் பிரச்னைகளும் இருக்கின்றன. அவற்றைக் களைந்து மேல்நிலைக்கல்வி வரை எந்த வித விதிமுறைகளும் குறுக்கிடாதவாறு அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்பதை இலக்காக வைத்து, முதற்கட்டமாக வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற கொள்கை கட்டாயமாக்கப்படும். பாடத்துடன் தொடர்புடைய ஆங்கிலம் மட்டுமின்றி, ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு ஆங்கில வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஏற்பாடு கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அமல்படுத்தப்படும், ‘நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் நிர்ணயிக்கப்படுகிறது’ என்பதை மனதில் கொண்டு, கல்வி நிறுவனங் களும், சுமையில்லாத பாடத்திட்டங்களும் அமைந்திட வேண்டும். வளர்ந்த நாடுகளைப் போல அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படிப்பதை மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பெருமையாக நினைக்கும் அளவுக்கு அவற்றின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மனப்பாட முறையை மாற்றி செயல்முறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கல்வி முறை அமைவது அவசியம். சம காலத்திய அழுத்தங்களில் இருந்து மாணவச் செல்வங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், வாழ்வியல் மதிப்பீடுகளின் (Life Values) உயர்வையும், அவை தரும் அற்புதமான வாழ்க்கையையும் பற்றி, பாடத்திட்டங்களோடு சேர்த்து மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் குறிப்பாக கிராமப்புற பள்ளிகள் அனைத்திலும் நவீன வகுப்பறைகள், கணினி பயன்பாடு மற்றும் பயிற்சி, உடற்கல்வி தொடர்பான வசதிகள், முதலுதவிக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பு, சுகாதாரமான கழிப்பறைகள், பாதுகாப்பான சுற்றுச்சுவர் போன்றவை இருப்பது உறுதிப்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் மாணவர்கள், பொதுமக்களின் தேவை மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் மாலை நேர வகுப்புகள் நடக்கும் வகையில் பகுதி நேர கல்லூரிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் நலன்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், போதிய வழிகாட்டுதல்கள் இன்றி தவித்து வருவதை ஒவ்வொரு ஆண்டும் வேதனையோடு நாம் பார்த்துவருகிறோம். இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வாக சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மாணவர்கள் நல ஆணையம் ஒன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையில் அமைக்கப்படும். இதன் கிளை மையங்களாக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு மையம் அமைக்கப்படும். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் தவறியவர்கள் அடுத்து என்ன செய்யலாம்? எந்த பாடப்பிரிவை எந்தக் கல்லூரியில் படிக்கலாம்? வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் என்னென்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலையும் தீர்வையும் அளிக்கும் வகையில், கல்வியில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களைக் கொண்ட மையங்களாக அவை இருக்கும்.  ஆங்கில வழி பேச்சுப் பயிற்சி, தனிநபர் ஆளுமை மேம்பாடு, அடிப்படைக் கணினிப் பயிற்சி போன்றவற்றை உரிய வல்லுநர்களைக் கொண்டு அளிக்கும் வகையில் தேவையான இட வசதிகளோடு அந்த மையங்கள் அமையும். இந்த மையங்களுக்குத் தேவையான நிதியில் ஒரு பங்கை அரசு அளிப்பதுடன், மாணவ சமுதாயத்திற்கு குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு உதவ நினைக்கும் வசதி படைத்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதிப் பங்களிப்பையும் அனுமதித்து அதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த உரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கான போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வகையில் அதற்கான பயிற்சி வகுப்புகளும் உரிய வல்லுநர்களைக் கொண்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும். பள்ளி மாணவர் களுக்கு வழங்கப்படுவதைப்போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பேருந்து அட்டை (பஸ் பாஸ்) வழங்கப்படும். கிராமப் புற ஏழைப் பெண்கள் கல்லூரிக் கல்வியைத் தடங்கல் இன்றி தொடரும் வகையில், கல்லூரிக் கல்வி பயிலும் ஏழை மாணவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10,000/- இரண்டு தவணைகளில் வழங்கப்படும். மாணவர்களின் உயர் கல்விக்காக இனி வழங்கப்படும் கல்விக்கடன்கள் அனைத்தும் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றை அடிப்படை யாக வைத்து, எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கடன் பெறும் மாணவர்கள், படிப்பை முடித்து அரசுப் பணியிலோ, தனியார் நிறுவனத்திலோ வேலைக்கு சேர்ந்தால், சுலபத் தவணைகளில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இதன் மூலம், அடுத்தடுத்து மேல்படிப்பு படிக்க வரும் மாணவர்கள் இந்தக் கடனுதவியை தொய்வின்றி பெறுவது உறுதிப்படுத்தப்படும். வளர்ந்து வரும் சமூக வலைதளம் மற்றும் கணினி பயன்பாட்டை மனதில் வைத்து தமிழ்நாட்டில் அனைத்து கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் அனைத்திலும் இலவச Wi -Fi வசதி ஏற்படுத்தி தரப்படும்.

பொறியியல் பட்டதாரிகள் நலன்

தமிழகத்திலுள்ள 575க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூலமாக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் அரசு வேலையோ, பெரிய தனியார் நிறுவனங்களின் வேலையோ கிடைப்ப தில்லை. இன்னும் சொல்லப்போனால் வேலையே இல்லாமல் பல்லாயிரம் பொறியியல் பட்டதாரிகள் தங்கள் இளமையை, திறமையை வீணடிக்கும் நிலை இருக்கிறது. இந்த அவல நிலையை மாற்றி அவர்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதுடன் கிராமப்புற தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக குறைந்தது ஐந்து பொறியியல் பட்டதாரிகள் இணைந்த ஒரு குழுவுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் உதவி அளித்து, அவர்கள் விரும்பும் தொழிலை நடத்த ஊக்கமும், ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாகி வெளியே வருகிறார்கள். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அதிகாரம் மிக்க குழு ஒன்று அமைக்கப்படும். தனியார் நிறுவனங்களில் ஆங்காங்கே பணியில் சேரும் பொறியியல் பட்டதாரிகள் ஐந்தாயிரம், ஆறாயிரம் என மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள். இந்த அவல நிலையை மாற்றி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் வகையில் ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும். தனியார் பொறியியல் கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாக பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகளும் மிகக்குறைந்த ஊதியத்திற்கு பணி பாதுகாப்பு இன்றி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கும் கௌரவமான குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் எனப்படும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். அவர்களில் சில ஆயிரம் பேரைத் தவிர மற்றவர்கள் உரிய வேலைவாய்ப்பு இன்றி தவிக்கிறார்கள்.இந்த நிலையை மாற்ற பாலி டெக்னிக் மாணவர்கள், படிக்கும் காலத்திலேயே அவர்களின் துறைசார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிக்கும் வகையில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாட்டு தொழில் வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு உற்பத்தி துறைகளுடன் தொடர்புடைய கணினி மயமாக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை இயக்கும் பயிற்சிகளை Virtual Reality, Artificial Intelligence, Machine Learning போன்ற வழிமுறைகளில் அளிக்க, மாவட்டம் தோறும் இதற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் வளர்ச்சி முகமை மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலான சான்றிதழ் வழங்கப்படும். அதன் மூலம் வேலைவாய்ப்பு பற்றிய பயமின்றி அம்மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கவும் அதன் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை பெறவும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்.

அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு

அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை சதவீதம் வழங்குவது என்பது பற்றி கழக ஆட்சியமைந்ததும் தனி குழு அமைக்கப்பட்டு, அறிக்கை பெற்று 6 மாதங்களில் இட ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

நீட் தேர்விலிருந்து விலக்கு

மருத்துவராகும் கனவுடன் இருக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசே நடத்தும் கலந்தாய்வின் மூலமாக மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையை அமல்படுத்தினார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இதனால் பயன் பெற்று வந்த ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை கலைக்கும் விதமாக நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது அதைக் கடுமையாக எதிர்த்ததுடன், தனது இறுதி மூச்சு உள்ளவரை சிறப்பு சட்ட மசோதா மூலம் அதைத் தடுத்து நிறுத்தினார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவரது வழியில் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் மருத்துவராகும் கனவை நனவாக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்து, மீண்டும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படை யிலேயே மருத்துவக் கல்வி சேர்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் நீதிமன்ற தலையீடும் இருப்பதால், நீட் தேர்வை தவிர்க்க விரும்பும் மாநிலங் களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

ஆசிரியர் தகுதி தேர்வு சீரமைப்பு

அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்கிறது, ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் மற்றும் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு லட்சக்கணக்கானோர் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் உள்ள காலி இடங்களுக்கு ஏற்ப இவர்களிலிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வே அவசியம்தானா என்பதையும், அது அவசியம் என்றால் ஆசிரியர் தேர்வு முறையில் எளிய நடைமுறைகளை ஏற்படுத்தி சிரமமின்றி அத்தேர்வை எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராய வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கொள்கை ஒன்று வகுக்கப்படும்.

அம்மா அகாடமி

மாவட்டம் தோறும் இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்) தேர்வுகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகள், தமிழக அரசுப்பணி (TNPSC) தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கும் மையங்கள் புரட்சித்தலைவியின் நினைவாக ‘அம்மா அகாடமி’ என்ற பெயரில் உருவாக்கப் படும். மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வுகளில் (UPSC) தமிழகத்தில் இருந்து அதிகமானவர் களைத் தேர்ச்சி பெறச் செய்வதற்கான பயிற்சிகள் முழுமையாக வழங்கப்படும். இறுதிகட்ட நேர்காணலுக்கு டெல்லி செல்பவர்களுக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசே செய்து தரும். தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்களுக்காக டெல்லியில் தனியாக உண்டு, உறையுள் விடுதி உருவாக்கப்படும்.

நூலக வளர்ச்சி

மதுரை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய மாநகரங்களில் நவீன வசதிகளுடன் கூடிய தேசிய நூலகங்கள் மத்திய அரசின் உதவியோடு அமைக்கப்படும். கிராமப்புறங்களில் தற்போது உள்ள நூலகங்கள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு நவீனமயமாக்கப்படும்.
அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயம் என்பதால், அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு தேவையான புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை நூலகங்களிலும் போதிய அளவு இருப்பது உறுதி செய்யப்படும். தமிழகம் முழுவதும் நூலகங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்கும் முறை, முறைகேடுகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் இடமில்லாத வகையில் மாற்றியமைக்கப்படும். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படும் தரமான நூல்கள் மட்டுமே அரசு நூலகங்களுக்கு வெளிப்படைத்தன்மையோடு வாங்கப்படுவது உறுதி செய்யப்படும். வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த நூலகங்கள் தோறும் சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

புதிய விளையாட்டுக் கொள்கை

லட்சக்கணக்கான திறமையான இளைஞர்கள் இருந்தும் விளையாட்டுத் துறையில் இந்தியா உரிய இடத்தை அடையாமல் இருப்பதற்கு, விளையாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நடத்தும் உயர்மட்ட விளையாட்டு அமைப்புகளில் நடக்கும் ஊழல் மற்றும் சுயநலப்போக்கே காரணம் என்று மத்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை பலமுறை சுட்டிக் காட்டி யிருக்கிறது. இந்த அமைப்புகளில் ஊழலை ஒழிப்பது மட்டுமின்றி, சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மனதில் கொள்ளாமல், திறமையை மட்டுமே மனதில் வைத்து தகுதியான விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முயற்சி மேற்கொள்ளும். விளையாட்டு வீரர்களின் அடிப்படைத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலும் நகர்புறங்களிலேயே உள்ளன. அவையும் முழுமையான வசதிகளுடன் இல்லை. அவற்றை மேம்படுத்துவதுடன், கிராமப்புறங்களிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, குறைந்தபட்சம் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு விளையாட்டு மையமாவது, முழுமையான பயிற்சி வசதிகளுடன் கூடியதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான தேவைகள், வசதிகளும் கவனத்தில் கொள்ளப் பட்டு அதற்கேற்ப அப்பயிற்சி மையங்கள் அமைவது உறுதிசெய்யப்படும்.

ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நிதி உயர்வு

வெளிநாடுகளில் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு (Research And Development – R&D) அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் வந்தாலும் வளர்ந்த நாடுகள் அந்த நிதியை குறைப்பதில்லை. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நிலைமையை கொண்டு வரவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதியை ஆண்டுதோறும் அதிகரிக்கவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக பெரியளவில் உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த இந்திய தமிழர்களிடம் (Tamil Diaspora) நிதி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் நடைபெறும்.

ஆழ்குழாய் மீட்புக்கருவிகள் போன்ற மக்களுக்கு துன்பம் ஏற்படும் நேரங்களில் அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களைப் போன்று மருத்துவம் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் ஊக்கப்படுத்தப்படும். பேரிடர் நேர்ந்த பிறகு அவற்றுக்கான தொழில்நுட்ப தீர்வுகளைத் தேடாமல், முன்கூட்டியே திட்டமிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், இதற்காக உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை (Tamilnadu State Council for Science and Technology) போன்றவற்றை மேம்படுத்தி புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான தளமாக அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்குதல்

மாவட்டம் தோறும் பெயரளவுக்கு இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகங்களைத் தற்போதைய தேவைக்கு ஏற்ப முற்றிலுமாக மாற்றி அமைப்பது அவசியம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கருதுகிறது. அரசு வேலை மட்டுமின்றி தனியார் வேலைகளுக்கான ஒருங்கிணைத்தல், தேசிய அளவிலான பணி வாய்ப்புகளையும் வேலை தேடுவோருக்கு வழங்குதல், வேலை வாய்ப்புக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தல் உள்ளிட்டவை நடந்திடும் இடமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாற்றுவதற்கான முயற்சிகளை இந்த இயக்கம் மேற்கொள்ளும்.

வேலைவாய்ப்புகளில் தமிழகத்தின் உரிமை

தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப்பிரிவின் கீழும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான பிரிவுகளின் கீழும் தேர்வு செய்யப்படுவது தமிழ் சமூகத்துக்கு பலனளிக்கக் கூடிய இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் பங்கேற்கலாம் என்று அனுமதித்த தமிழக அரசின் நிலைப்பாடே இந்த நிலைக்குக் காரணம். எந்த நோக்கத்திற்காக அதைச் செய்திருந்தாலும், அதன் விளைவு தமிழர் நலனுக்கு எதிராக இருக்கிறது என்பதே உண்மை.  இந்தியக் குடிமக்கள் இந்தியா முழுவதும் சென்று வாழ அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்தாலும், ஒவ்வொரு மாநிலமும் அம்மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் பெரும் பங்கு அளிக்க வலியுறுத்துவதில் தவறில்லை என்று 1968ம் ஆண்டு டெல்லியில் நடந்த மாநில முதல்வர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேசிய தொழிலாளர் ஆணையம் 1969ல் இந்தக் கருத்தையே வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் அவரவர் மாநில அரசுப் பணிகளில் குறைந்தது 85 அந்த மாநிலத்தவரே நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கின்றன. அதேபோல தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட தமிழகத்திலும் சட்டம் இயற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியேற்கும். தமிழகத்தில் நடக்கும் ரயில்வே பணிகளில்கூட, வட இந்தியர்கள் 90 அதிகமாக பணிகளில் அமர்த்தப்படும் அவலமும் நடக்கிறது. எனவே தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில், தொழிற்சாலைகளில் குறைந்தது. 80 சதவிகித இடங்களை தமிழகத்தை சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும். இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மத்திய அரசு பணிகளில் ஊழியர்களை தேர்வு செய்யும் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மையையும் மாநிலங்களை சமமாக பாவிக்கும் சூழலையும் ஏற்படுத்த மத்திய அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொள்கை

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங் களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை பற்றிய கணக்கீடுளோ, பதிவுகளோ மாநில அரசிடம் இல்லை. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பாதிக்காத வகையில் இந்த வெளிமாநில தொழிலாளர் களின் பணி அமையவும், அவர்களுக்கு குறைந்தபட்ச வாழ்கைத் தரத்தை அளிக்கவும் மத்திய அரசின் பங்களிப்போடு தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அவர்களது இருப்பை, செயல் பாடுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் கணிசமான அளவில் வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்த ஏற்பாடு பரஸ்பர பலனை அளிக்கும்.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டுக் கடன்

தமிழகம் முழுக்க இருந்து சென்னை மாநகருக்கு வரும் படித்த, படிக்காத இளைஞர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் வாங்கும் ஊதியத்தில் பெரும்பகுதியை அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நிதிச் சுமையிலிருந்து அவர்களை காக்கும் வகையில் சென்னை மாநகரில் உள்ள தனியார் நிறுவனங்களில் மாதம் இருபதாயிரம் ரூபாய்க்கு மிகாமல் ஊதியம் பெற்று பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்களுக்கு வீட்டுவசதி அளிக்கும் வகையில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும். குறைந்தது 400 சதுரஅடியில் கட்டப்படும் இந்த வீடுகளுக்கு லாப நோக்கு இல்லாமல் விலை நிர்ணயிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். குலுக்கலில் வீடு கிடைக்கும் நபர்களுக்கு அந்த வீட்டுக்கான தொகை 20 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்தும் வகையில் வட்டியில்லாத கடனாக அரசால் வழங்கப்படும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இந்தக் குடியிருப்புத் தேவைகள் இருப்பதை மனதில் கொண்டு மாநகரைச் சுற்றியும் உள்ள புறநகர்ப் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கெல்லாம் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் தொடங்கப்படும் இத்திட்டம், தொழில் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர் ஆகிய நகரங்களிலும் அதே காலகட்டத்தில் தொடங்கப்பட்டு, அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தனியார் ஊழியர்களுக்கு திருமண நிதி உதவி

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு தங்களுக்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்து மாதாந்திர தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நேரத்தில், திருமணத்துக்கான செலவுகள் அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் இந்த மனக்கவலையைப் போக்கும் விதமாக, சமமான மாதத் தவணை (EMI) முறையில் ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் திருமண நிதி உதவியாக இரண்டு லட்சம் ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்கப்படும். ஆதார் அட்டை, வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், பான் கார்டு போன்ற அடிப்படை ஆதாரங்களை இணைத்து இந்தக் கடனுதவி வழங்கப்படுவதால், உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு, முறையாக தவணைத் தொகைகள் வசூலிக்கப்படுவதுடன், அடுத்தடுத்து திருமண வயதை எட்டும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தொடர்ச்சியாக இத்திட்டத்தால் பயன்பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் நலன்

தமிழகத்தில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் நிரந்தர ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு அந்நிறுவன ஊழியர்களும் இந்திய தொழிலாளர் நலச்சட்டத்தின் கீழ் நடத்தப்படுவது உறுதி செய்யப்படும். இதன் மூலம் எந்த நாட்டைச் சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் இந்திய சட்டங்களின்படியே தொழிலாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படுவது சாத்தியமாகும்.

கூட்டுறவு அமைப்புகளுக்கு புத்துயிர்

விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மிகப்பெரிய தோழனாக விளங்கிய கூட்டுறவு அமைப்புகளைத் தீய சக்திகள் சூறையாடி நலிவடையச் செய்துவிட்டன. அவற்றுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து செயல்பட வைக்க வேண்டும் என்பதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முக்கியமான கொள்கையாக கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான பணிகளை உறுதியோடு முன்னெடுக்கும்

வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன்

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து அதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டும் தமிழர்களுக்கு அந்நாடுகளில் ஏற்படும் பிரச்னைகள், எதிர்பாராத மரணங்களின் போது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் சந்திக்கும் சிக்கல்கள் போன்றவற்றுக்கு உரிய நேரத்தில் தேவையான தீர்வுகளை அளிக்கும் வகையில் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைக்கப்பட்டு அதற்கென தனி அமைச்சர் நியமிக்கப்படுவார். வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது கல்வி மற்றும் திருமணப் பதிவு சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் களை வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் கூடுதல் அத்தாட்சி முத்திரையை இந்திய வெளியுறவுத் துறையிடம் பெற வேண்டியிருக்கிறது. இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தீர்த்து எளிய முறையில் இந்த முத்திரையைப் பெற இந்தத் துறை உறுதுணையாக இருக்கும். வளைகுடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்வழிக் கல்வி பயில உரிய பள்ளிகள் இப்போது இல்லை. இந்த நிலையை மாற்றி தனியார் பங்களிப்புடன் தமிழக அரசும் இணைந்து தமிழ்வழிக் கல்வியை தேவைப்படும் நாடுகளில் அளிக்க இந்தத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைப்புசாரா தொழில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியச் செல்லும் தமிழர்கள் ஊதியம் மற்றும் பணி தொடர்பாக பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களது பிரச்னை களைத் தீர்க்க இந்தத் துறை தேவையான உதவிகளைச் செய்யும். தமிழகத்தில் தொழில் தொடங்கவும் விவசாயம் சார்ந்த முதலீடுகளைச் செய்யவும் விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இந்த துறையின் மூலமாக உரிய ஆலோசனைகள் வழங்கப் படுவதுடன் தேவையான அரசு அனுமதிகளையும் பெறுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வசதிகளை செய்து தரும்.

இலங்கைத் தமிழர் நலன்

நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் என்கிற உரிமையோடு, மற்றவர்களைப் போலவே சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. அவர்களுக்குரிய நிலத்தில், அவர்களுக்குரிய கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், மரியாதையோடும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இலங்கை மண்ணில் ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கையைப் பொருத்தமட்டில், இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தனித்துவமானதாகவும் கூடுதல் அக்கறை கொண்ட தாகவும் அமைந்திட வேண்டும். நம்முடைய உறவுகளான தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும், இலங்கையில் வேரூன்றி வரும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஆதிக்கத்தால் தமிழகத்திற்குள்ள எதிர்கால ஆபத்துகளையும் கருத்தில் கொண்டு இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு நடந்து இலங்கையின் இனவெறி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இருக்கிற இலங்கைத் தமிழர்கள் அங்கே நல்ல சூழல் உருவாகும் வரை நிம்மதியோடு வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூடுதல் அக்கறையோடு இருக்கிறது. இலங்கைத் தமிழர் முகாம்கள், திறந்தவெளி சிறைச்சாலைகளைப் போல இருக்கிற நிலையை மாற்றி, அடிப்படை உரிமை களைப் பெற்று அமைதியாக அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதைத் தாய்த் தமிழகத்தின் கடமையாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கருதுகிறது. இலங்கைத் தமிழர் நலவாழ்வு முகாம்கள் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் அவர்கள் விரும்பும் வரை நிம்மதியாகவும், மரியாதையுடனும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நலன்

உழைத்து களைத்துப் போகிற மக்களுக்கு உற்சாகமூட்டும் பொழுதுபோக்கு அம்சங்களாக வெள்ளித்திரையும், சின்னத்திரையும் திகழ்கின்றன. தமிழ்த் திரையுலகை பொறுத்தமட்டில் முன்பிருந்த ஆரோக்கிய சூழல் நிலவிடவில்லை என்பதை அத்துறையில் இருப்பவர்களே ஒப்புக்கொள்வார்கள். எனவே அத்தகைய ஒற்றுமைச் சூழலை உருவாக்கிடவும், திரைப் படங்களைச் சட்ட விரோத இணைய வழியில் ஒளிபரப்புதலைத் தடுத்தல், திரையிடுவதில் சிக்கல், வரிவிதிப்பு உள்ளிட்ட அவர்களுக்குள்ள பிரச்னைகளைச் சரிசெய்து தருவதில் அம்மாவின் திருப்பெயரால் உள்ள இந்த இயக்கம் பங்காற்றும். இதே போன்று வீடுகளுக்கே வந்து மகிழ்விக்கிற சின்னத்திரை உலகம் சந்திக்கிற இன்னல்களைத் தீர்த்து, அவர்களைக் கூடுதல் பொறுப்புணர்வோடு மாற்றுவதும், ஆபாச குப்பைகள் எந்தவித தங்கு, தடையும் இன்றி வரவேற்பறைகளுக்கே வருவதைத் தடுப்பதும் மிகவும் அவசியம் என இந்த இயக்கம் நினைக்கிறது. திரைத்துறையில் அடிமட்டத்திலிருக்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதற்காக திரைப்பட தொழிலாளர்களுக்கென்று தனி நலவாரியம் ஏற்படுத்தப்படும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்டவை மூலம் மின் உற்பத்திக் கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று ஒருபுறம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மறுபுறத்தில் அந்த பெருமைக்குக் காரணமான காற்றாலை மின் உற்பத்தி யாளர்கள் வேதனையில் துடிப்பதை காணமுடிகிறது. அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றாலை மின்சாரத்தை உரிய நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்காததும், அவர்கள் வாங்காத நேரத்தில் பிற தனியாருக்கும், பிற மாநிலங்களுக்கும் அதை விற்பனை செய்வதில் இருக்கும் நடைமுறை சிக்கலும்தான் இதற்குக் காரணம். இப்படி நமது தேவையை விட கூடுதலாக உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை மின் இழப்பின்றி வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் மின்சார உள் கட்டமைப்பு வசதிகள் மிக பலவீனமாக இருப்பது வேதனையான உண்மை. இந்த உள் கட்டமைப்பை நவீன முறையில் பலப்படுத்தி காற்றாலை மின் உற்பத்தியை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் சூரியசக்தி மின் வசதியை ஏற்படுத்துபவர்களுக்கு மானியம் அதிகரிக்கப்படும். அரசு அலுவல கங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்திலும் சூரிய சக்தி மின் வசதியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.

கோயில்களுக்கு குடமுழுக்கு

தமிழகத்தில் உள்ள அனைத்து பழமையான கோயில்களும் புராதன தன்மை மாறாமல் புனர மைக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும். கோயில் நிலங்கள் ஆக்ரமிப்புகளில் இருந்து மீட்டெடுக்கப்படும். வாய்ப்பிருக்கும் ஊர்களில் கோயில் இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களை உருவாக்கி அதிலிருந்து வரும் வாடகையைக் கோயில் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தி கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, ஆன்மீகப் பணிகள் சிறப்புற நடைபெறுவது உறுதி செய்யப்படும். கிராமக்கோயில் பூசாரிகளுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படும்.

சுற்றுலா மேம்பாடு

பொது மற்றும் ஆன்மீக சுற்றுலாத்தலங்கள் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வகையிலும் மேம்படுத்தப்படும். வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கறிஞர்கள் நலன்

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் மாத ஊக்கத்தொகையை உயர்த்தி தருவதுடன் அந்த ஊக்கத்தொகை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கும் வழங்கப்படும். அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் அகாடமியை நிறுவி, அதன் மூலம் நீதித்துறை தேர்வு களில் பங்கேற்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் நூலகம், மின் நூலகம் மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கு உரிய நிதியை வழங்குவதுடன் அனைத்து துணை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களுக்கும் அறைகள் (சேம்பர்) கட்டித்தரப்படும்.

பத்திரிகையாளர்கள் நலன்
மாவட்டம் தோறும் பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்புகள் – பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளருக்கான இழப்பீட்டுத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். பத்திரிகையாளர் களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதுடன் அதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் களையப் படும். ஊதியம், மருத்துவக்காப்பீடு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட ஊடகத்துறையினரின் நலன்களைப் பாதுகாக்க ஊடக நலவாரியம் அமைக்கப்படும்.

மகிழ்ச்சியான தமிழ்நாடு

உலகளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கிய இடத்தில் இருந்தாலும், ‘தனித்துவமான பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை கொண்ட தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில் முதலிடத்தில் இருக்கிறார்கள்’ என்ற நிலையை ஏற்படுத்திட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முனைப்போடு உழைக்கும். அத்தகைய மகிழ்ச்சியின் குறியீடு உலகளவில் முதலிடத்தில் உள்ள நாட்டிற்கு இணையாக இருக்கும். மக்களின் பேராதரவை வென்றெடுத்து, எல்லோருக்குமான பொற்கால ஆட்சியைத் தமிழ் நாட்டில் வழங்குவதற்கும், வாய்ப்பு அமையும்போது இந்திய அளவில் அதனைச் செயல் படுத்துவதற்கான பங்களிப்பை வழங்குவதிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியோடு இருக்கிறது! புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில், தலைதாழாத தன்மானத்தோடும், தமிழ்நாட்டைப் பொலிவு பெறச்செய்யும் தனித்துவத்தோடும் மக்களின் இயக்கமாக கழகம் தொடர்ந்து பயணிக்கும்!

மாநில நலனை காத்திடுவது, அனைத்து சமூகத்தினரையும் மேன்மை அடையச் செய்வது, ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது ஆகியவற்றை ஈடேற்ற பாடுபடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்காளப் பெருமக்கள் வலிமை சேர்த்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் அதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணிச்சலுடன் எதிர்த்து நின்று அதை முறியடித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு நலனைக் காப்பதில் முதலிடத்தில் நிற்கும் என்ற வாக்குறுதியை அழுத்தம் திருத்தமாக சொல்லி, வரவிருக்கும் 2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று மிக்க பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.