April 14, 2021

புதியக் கட்டடங்களும், பழைய ஜனநாயமும்!

நாடாளுமன்றத்திற்கு புதியக் கட்டடம் ஒன்றைக் கட்டும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி உள்ளார். நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த விஷயத்திற்கு ஒரு முடிவு வந்துள்ளது. இப்போது இருக்கும் கட்டடம் நூற்றாண்டு பெருமைக் கொண்டது. எனினும் எதிர்காலத்தில் இடப்பற்றாக் ந்குறையை எதிர்நோக்குகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இடம் இல்லை என்பதால் இந்த அதிகரிப்பை 2026 ஆம் ஆண்டு வரை தள்ளிவைத்தாகி விட்டது. தொகுதி மறுசீரமைப்பின் போது தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.

இப்புதிய கட்டடத்திற்கு ₹ 971 கோடி செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டு அப்பணியை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. வருகின்ற விடுதலைப் பெருநாளின் பவளவிழா அன்று இக்கட்டடம் திறக்கப்பட்டு விட வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. ஆயினும் எதற்கும் வழக்குப் போட்டு தடா விதிக்கும் நபர்கள் இப்போதும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் அடிக்கல் நாட்ட மட்டும் அனுமதித்துள்ளது. கட்டுமான வேலைகளை இறுதித் தீர்ப்பிற்குப் பிறகே துவங்க முடியும். அப்படித் துவங்கி 2022 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க வேண்டும். ஆகையால் விரைவில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

இது போன்று தமிழகப் பேரவைக்கும் ஒரு நவீனக் கட்டடம் வேண்டும் என்று திமுக அரசு முடிவெடுத்து ₹475 கோடி செலவில் கட்டடம் ஒன்றை நிறுவினர். பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். என்றாலும் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.இ.அதிமுக அரசு அக் கட்டடத்தைப் பேரவையாகப் பயன்படுத்தாமல் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றிவிட்டது.

இப்படி கட்டடங்களை மக்கள் வரிப்பணத்தில் கட்டுவதும் அதைத் தடுப்பதும், பயன்பாட்டை மாற்றுவதும் வேடிக்கையான நிகழ்ச்சியாகி விட்டது. இன்னும் தமிழகத் தலைமைச்செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில்தான் உள்ளது. மாநிலத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் புதியப் பேரவை வேண்டும் என்ற கோரிக்கை சற்று பின் தங்கிவிட்டது. தலை நகரை மாற்றினால் தானாகவே புதியக் கட்டடம் வந்து விடும். ஆனால் சென்னையிலேயே தலைநகர் நீடிக்கும் பட்சத்தில் புதியப் பேரவை வளாகம் அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் இங்கும் உறுப்பினர் எண்ணிக்கை உயரும். இடப்பற்றாக்குறை ஏற்படும்.

மேலும் இப்போது பாம்பு, எலி போன்ற உறுப்பினர் அல்லாதவரின் வருகை தொல்லைகளைத் தருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா  புதிய இடங்களைத் தேர்வு செய்து வைத்திருந்தார். திட்டம் தொடர வில்லை. தமிழக அரசிற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் இது குறித்து நினைக்க இயல வில்லையோ என்னவோ! ஆயினும் மீண்டும் ஒருமுறை இக்கோரிக்கை மீண்டு வரும். புதிய வளாகத்தை சென்னைக்குள் அமைத்தால் தீவிரப் பிரச்சினை வரும். வெளியில் அமைத்தால் நிலம் கையகப்படுத்தலில் சிக்கல் வரலாம்.

எப்படியிருந்தாலும் புதிய வளாகம் கட்டியாக வேண்டுமே? மீண்டும் ஒருமுறை செலவு, வழக்கு எல்லாம் வரலாம். அண்மைச் செய்திகளுக்குக் காத்திருக்கவும்!

ரமேஷ் பாபு