மாஸ்கோவில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

மாஸ்கோவில் அடுத்த வாரம் கொரோனா  தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

ரஷ்யா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V – ஐ மக்களுக்கு போடத் தொடங்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக தலைநகரான மாஸ்கோவில் அடுத்த வாரம் மருத்துவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

உலகையே பயமுறுத்தி வந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞஞானிகள் இரவு பகலாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.முதல் நாடாக ரஷ்யா கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவித்தது. ஸ்புட்னிக் V என்று இந்த தடுப்பூசிக்கு பெயர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பைசர் நிறுவன தடுப்பூசியை பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். அவரை முந்தும் வகையில் சனிக்கிழமையன்று புடின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதைத் தொடர்ந்து பலகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, தற்போது மக்களுக்கு இந்த தடுப்பூசியை போட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.இந்த மருந்து 95 சதவீதம் நோய் தடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இது எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பு ஊசியைப் போட்டுக்கொள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பெயர் கொடுத்துள்ளனர். ஆனால், பள்ளிகள், சுகாதாரப் பணிகள், சமூக சேவை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாஸ்கோ மேயர் செர்கேய் சோப்யானின் கூறியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் 2 முறை தடுப்பூசி போடப்படும். முதல் ஊசி போடப்பட்டு 21 நாட்கள் கழித்து 2வது தவணை போடப்படும்.

மாஸ்கோ முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் என பலர் வரிசையில் நின்று அமைதியாக தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர்.

இந்த தடுப்பு மருந்து அதிக அளவில் தேவைப்படுவதால், இதனை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நட்பு நாடுகளை ரஷ்யா கேட்டுக் கொண்டது. இதையடுத்து ஒருங்கிணைந்த ரஷ்யாவில் அங்கம் வகித்த கஜகிஸ்தான் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய உள்ளது. டிசம்பர் 22ம் தேதி முதல் மருந்து உற்பத்தி தொடங்க இருக்கிறது. இந்த மருந்து சர்வதேசச் சந்தையில் 10 டாலருக்கும் குறைவாகக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பாக இந்தியா, பிரேசில், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!