August 4, 2021

நவம்பர் 16ம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு!-தமிழக அரசு அனுமதி!

தமிழகத்தில் இம்மாதம் நவம்பர் 16ஆம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு. இந்த குடமுழக்கு விழா நடத்தப்படும் கோவில்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.முகக் கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து விழாக்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பணிகள் முடிவுற்றும், பல மாதங்களாக குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டு உள்ளதாகவும், குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் பல கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 16.11.2020 முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டும்.

பொது மக்களின் நலன் கருதி, அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு, தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.