March 22, 2023

வருமான வரி கணக்கு தாக்கல், ஜிஎஸ்டி தாக்கல், ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

இந்தியாவை முடக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல், ஜிஎஸ்டி தாக்கல், ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் பேசும் போது, “நடப்பு நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதங்களாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. நடப்பு நிலவரங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில் துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும்.

2018 – 19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படும்.மார்ச் 31ல் முடிவடைய இருந்த ஆதார் – பான் கார் இணைப்பிற்கான அவகாசம் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி, சுங்கவரி கணக்கு தாக்கல் செய்ய தொழில் துறையினருக்கு கடுதல் அவகாசம் அளிக்கப்படும். 5 கோடிக்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப் பட்டு உள்ளது.இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அவதிப்படுவதை மத்திய அரசு விரும்ப வில்லை. இதனால், ஜூன் 30 வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும்.

கார்பரேட் நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாத அவகாசம் அளிக்கப் படுகிறது.அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை கிடையாது. ஜீரோ பேலன்ஸ் மெயின்டெயின் பண்ணலாம். அனைத்து வங்கி ஏடிஎம்.,களிலும் சேவைக் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். மக்கள் வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனை களுக்கான கட்டணங்களும் குறைக்கப்படும்”என்று அவர் கூறினார்.