மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!- மோடி அமைச்சரவை முடிவு!

மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்தப் பணத்தை மாதம் ரூ.1,000 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இந் நிலையில் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விஜயதசமி பண்டிகைக்கு முன்பே தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வர இருக்கும் சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

மத்திய அரசுக்கு இந்த போனஸ் காரணமாக கூடுதலாக 3737 கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.