October 27, 2021

ஐ.நா.ஊழியர்களுக்கு இலவசத் தடுப்பூசி! – ரஷ்யா அதிபர் அறிவிப்பு!

ஐ.நா. தன்னார்வலர்கள், ஊழியர்களுக்கு இலவசமாக எங்கள் தடுப்பூசியை வழங்க தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதில் காணொலி மூலம் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் எல்லோரையும் போலவே ஐ.நா. ஊழியர்களையும், உறுப்பினர்களையும் தாக்கியுள்ளது. கொரோனாவை தடுக்க அனைத்து உதவிகளையும் ஐ.நா.வுக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. ஐ.நா. தன்னார்வலர்கள் ஊழியர்களுக்கு இலவசமாக எங்கள் தடுப்பூசியை வழங்க தயாராக இருக்கிறோம்.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளின் வளர்ச்சியின் ஒத்துழைப்பில் ஆர்வமுள்ள நாடுகளுக்கு விரைவில் ஒரு ஆன்லைன் உயர் மட்ட மாநாட்டை நடத்த நாங்கள் முன்மொழிகிறோம்.

பிற நாடுகளுக்கு உறுதியான பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட ரஷ்ய தடுப்பூசியை வழங்குவது உட்பட, எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அனைத்து நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.