April 14, 2021

பேஸ்புக்-கைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பிற்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள ரகசிய உறவு?

பேஸ்புக்-கைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பிற்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள ரகசிய உறவை அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் வெளிப்படுத்தியுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக பாஜகவை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்களின் வெறுப்பு பேச்சு, ஆட்சேபனைக் குரிய கருத்துகளை பேஸ்புக் நிறுவனம் கண்டு கொள்வதில்லை என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம்சாட்டியிருந்தது. இந்த கட்டுரையை மேற்கோள்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் முகநூலை பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என ராகுல் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பேஸ்புக்கை போல வாட்ஸ் ஆப்பையும் பாஜக கட்டுப்படுத்தி வருகிறது டைம்ஸ் இதழ் வெளிப்படுத்தியுள்ளது. இதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில் வாட்ஸ் ஆப் பாஜக இடையிலான ரகசிய உறவை அமெரிக்காவின் டைம் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. 40 கோடி இந்தியர்களால் பயன் படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப், மோடி அரசின் பல்வேறு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்ட நிலையில் இருக்க நேரிட்டுள்ளது என்பதால், வாட்ஸ் ஆப்பை பாஜக கட்டுப்படுத்தி வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கெனவே சமூக வலைதளங்களில் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகள் எவ்வளவு தொகை செலவு செய்துள்ளது என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி, பாஜக மட்டும் 2019 – 2020 ஆம் ஆண்டில் ரூ.4 கோடியே 61 லட்சம் ரூபாய் பேஸ்புக் விளம்பரங் களுக்காக செலவழித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள விளம்பரத்திற்கு செலவு செய்த பேஸ்புக் அக்கவுண்ட்டுகளில் 4 அக்கவுண்ட்டுகள் பாஜகவுடன் தொடர்புடையவை என்று தெரியவந்துள்ளது.

அதில் 3 கணக்குகளின் பெயர்கள் பாஜக ஆபீஸ் அட்ரசுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. “My First vote for modi” என்ற பக்கம் கடந்த 18 மாசத்தில் ரூ.1.39 கோடிக்கு செலவிட்டுள்ளது. “Bharat ke Mann ki Baat” என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.2.24 கோடி செலவிட்டுள்ளது.இந்த 2 ஃபேஸ்புக் பக்கங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 மாசத்துக்கு முன்பாகவே தொடங்கப்பட்டதாகும். “Nation with Namo” என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.1.28 கோடியும் பாஜக முன்னாள் எம்பி ஆர்கே சிங்கா தொடர்புடைய ஒரு பக்கம் 65 லட்சம் ரூபாயையும் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நிறுவன பணத்தையும் கணக்கில் சேர்த்தால் பாஜகவின் மொத்த செலவு ரூ.10 கோடி 17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.