December 4, 2021

இ-பாஸ் என்ற பெயரில் பொருளாதார தடை: மத்திய அரசு கவலை!

கொரோனா பாதிப்பு தொடர்ந்தாலும் மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தனி நபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு உள்துறை அமைச்சக செயலர் பல்லா எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம் இதோ::

”மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் மக்களும், சரக்குப் போக்குவரத்தும் சென்று வருவதற்கு பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாம் தற்போது அன்-லாக் 3 செயல்முறையில் இருந்து வருகிறோம் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
மாநிலங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்து செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதித்தால், சப்ளை தொடர் சங்கியில் பெரும் சிக்கலை உருவாக்கும். வேலைவாய்ப்பிலும், பொருளாதாரச் செயல்பாட்டிலும் பெரும் தொந்தரவுகளை உண்டாக்கும். ஆதலால், மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளும் மக்களும், சரக்குப் போக்குவரத்தும் செல்வதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது.

சரக்குகளை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்லவும், மாநிலத்துக்குள்ளே கொண்டு செல்லவும், எல்லை வழியாக அண்டை நாடுகளுக்குச் செல்லவும் எந்தவிதமான ஒப்புதலோ அல்லது இ-பெர்மிட்டோ தேவையில்லை. அதே போல, மக்களும் மாநிலங்களுக்கு இடையே செல்லவும் மாநிலத்துக்குள்ளே செல்லவும் முன் அனுமதியோ, இ-பாஸ் முறையோ தேவையில்லை என்பது வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மக்கள் செல்லவும், சரக்குப் போக்குவரத்து செல்லவும் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதித்தால், அது உள்துறை அமைச்சகம் பிறப்பித்த தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மீறுவதாகும். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அன்-லாக் செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்”. என்று குறிப்பிட்டுள்ளார் உள்துறை அமைச்சக செயலர்.

இந்தக் கடிதத்தின்படி செயல்பட வேண்டியிருந்தால், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட வேண்டியிருக்கும்.ஏற்கெனவே, மாவட்டங்களுக்கு இடையே சென்றுவர இ – பாஸ் பெற வேண்டியதன் காரணமாக மக்கள் படும் அவதியுடன், ஏராளமான முறைகேடு புகார்களும் வந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ – பாஸ் என்று தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் இந்த தளர்வு அறிவிப்பாலும் பெரியளவில் பயனேதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.