இந்தியர்களில் 4ல் ஒருவருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!
இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் மேலும் 64,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் எண்ணிக்கை 27,67,274 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 1,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52,889 ஆக உள்ள நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நான்கு இந்தியர்களில் ஒருவருக்கு ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என்று தேசிய அளவிலான தனியார் ஆய்வகங்கள் மேற்கொண்ட கோவிட் -19 சோதனைகள் தெரிவிக்கின்றன. நகர மட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாட்டின் சில சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் (TIFR, IISER) மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன.
ஒரு நபருக்கு ஆன்டிபாடிகள் இருக்கும்போது, அவர் கோவிட் -19 க்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளார். இருப்பினும் இது குறுகிய கால அல்லது நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால் சமூகத்தில் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்போது, இது கொரோனா வைரஸுக்கு எதிராக திரண்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும்.
ஆனால் கொரோனாவுக்கு எதிரான ஒரு திரண்ட நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என்றால் மக்கள் தொகையில் 60-70 சதவீதம் பேருக்கு அந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்க வேண்டும். இதனால் இந்தியா இன்னும் அத்தகைய நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
அதேசமயம் இந்திய வட்டாரங்கள், புறநகர்ப் பகுதிகள் அல்லது நகரங்களில் வாழும் மக்களிடம் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை விட உலகின் மற்ற நாடுகளில் உள்ள மக்களிடம் காணப்படும் நோய் எதிர்ப்பு திறன் குறைவு தான் என சில வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஏப்ரல்-மே மாதங்களில் கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிக்கப்பட்ட இடமாக விளங்கிய மும்பையில் உள்ள தாராவியில் கடந்த இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு அருகில் உள்ளது.
“இதுபோன்ற அதிக செரோ-பாசிட்டிவ் (Sero Positive) தன்மையைக் காட்டும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. தெளிவாக, இந்தியர்கள் நோயெதிர்ப்பு ரீதியாக வலுவானவர்கள் ” என்று மகாராஷ்டிரா கொரோனா பணிக்குழு உறுப்பினர் டாக்டர் சஷாங்க் ஜோஷி தெரிவித்துள்ளார்.
தைரோகேர் ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட நாடு தழுவிய சோதனைகளின் முடிவில் உள்ளூர் மட்டத்தில் அதிக மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தைரோகார் நிர்வாக இயக்குனர் அரோக்கியசாமி வேலுமணி கூறுகையில், ‘‘இதுவரை நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்ட இரண்டு லட்சம் மக்களில் கிட்டத்தட்ட 24 சதவீதம் பேர் கோவிட் -19 க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளனர். டில்லி மக்கள்தொகையில் சுமார் 29 சதவீதம் பேர் மற்றும் மகாராஷ்டிராவில் 20 சதவீதம் பேர் செரோ-பாசிட்டிவாக உள்ளனர் என்று ஆரோக்கியசாமி கூறியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கிரிதாரா பாபு கருத்துப்படி, ‘‘இந்தியா முழுவதும் 10 லட்சம் மக்களுக்கு 39 இறப்புகள் உள்ளன. டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இந்த எண்ணிக்கை 200 ஆக உயர்கிறது. ஆனால் மேற்கு நாடுகளில் 10 லட்சம் மக்கள்தொகைக்கு 600 இறப்புகள் பதிவாகியுள்ளன” என்று டாக்டர் பாபு தெரிவித்துள்ளார்.