சந்திரயான் – 2 கண்டுபிடித்த பள்ளத்துக்கு, சாராபாய் பள்ளம் என்று பெயர்!
இஸ்ரோ அனுப்பிய ‘சந்திரயான் – 2’ விண்கலம் நிலவில் கண்டுபிடித்த பள்ளத்துக்கு, இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக கருதப்படும், விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதன் விவரம் :
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக, கடந்தாண்டு, ஜூலை, 22ல் அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலம், நிலவை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்ட, ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்ட, ‘லேண்டர்’ என்ற ஆய்வு சாதனம், நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி சேதமடைந்தது. அதனால், நிலவின் தென் துருவத்தில், அதனால் ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை.
அதே நேரத்தில், நிலவின் சுற்றுப்பாதையில் இயங்கி வரும் சந்திரயான் – 2 விண்கலம், தொடர்து பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில், மிகப் பெரிய பள்ளத்தை, சந்திரயான் – 2 கண்டுபிடித்தது. மேற்பரப்பில் இருந்து, 1.7 கி.மீ., ஆழத்துக்கு அந்த பள்ளம் இருப்பதாக தெரிய வருகிறது. இது நிலவு குறித்த புதிய ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
நாட்டின் விண்வெளி ஆய்வுக்கு வித்திட்ட, விண்வெளி ஆய்வின் தந்தையாக கருதப்படும் விக்ரம் சாராபாயின், நுாற்றாண்டு பிறந்த தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அவரை கவுரப்படுத்தும் வகையில், சந்திரயான் – 2 கண்டுபிடித்த பள்ளத்துக்கு, சாராபாய் பள்ளம் என்று பெயரிடப்பட்டுள்ளது என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.