இ-பாஸ் வழங்க லஞ்சம்!- ஐகோர்ட் காட்டம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவைக்காக ஒரு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகமெங்கும் நடைமுறையில் உள்ள ஈ பாஸ் குறித்து சீனியர் ஜர்னலிஸ்ட் ஏழுமலை வெங்கடேசன் ,’இப்போ நான் காஞ்சிபுரத்துல இருக்கேன் பக்கத்துல நாப்பது கிலோ மீட்டர்ல இருக்கிற வந்தவாசியில கடன்காரனை நேர்ல தேடிப்போயாவணும் இதுக்கு நான் திருவண்ணா மலை கலெக்டர் கிட்ட இ பாஸ் அப்ளை பண்ணி வாங்கணும்.. அய்யா வாங்கிட்டேன்னே வெச்சிக்குங்கோ, நான் வந்தாவாசி போனா, கடன்காரன் 22 கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற வெள்ளிமேடு பேட்டைக்கு போயிட்டான், அது விழுப்புரம் மாவட்டம்..இப்போ நான் விழுப்புரம் கலெக்டருக்கு இ பாஸ் போடணும்.. அவருக்கு எனக்கு பாஸ் குடுக்கறதுமட்டுந்தான் வேலையா..? அடபோங்கய்யா நீங்களும் இபாஸ் எழவெடுத்த கவர்மெண்ட்டும்..கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒரு புண்ணாக்கும் இதில் இருப்பதாக தெரியவில்லை.. நாட்ல இப்படித்தான் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டிசைன்ல நெருக்கடிங்க.. அப்படியே மொத்தமா சாவடிங்க.. ’ என்றெல்லாம் சொல்லி இருந்தார் இல்லையா?

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிகளை மீட்கக் கோரித் தொடுத்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், தரகர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ-பாஸ்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கொரோனா காலத்திலும், ரத்தத் தாகம் கொண்ட ஓநாய்கள் போலச் செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருப்பூர் நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா எனக் கண்காணிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.