April 17, 2021

சிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் உலா வரும் செய்து போலியானது என சிபிஎஸ்இ போர்ட் தெரிவித்துள்ளது. ஜூலை 11-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், ஜூலை 13-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளதாக பல இணைய தள செய்திகளிலும் தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. கரோனா லாக்டவுன் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறவில்லை. ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், மீதி தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்தது. அதேபோல ஜூலை 15-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.

வதந்தி குறித்து விளக்கியுள்ள சிபிஎஸ்இ நிர்வாகம்

இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் போலியான ஆதாரத்துடன் செய்து ஒன்று வெளியானது. இதனால் குழப்பம் நீடித்தது. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறாத நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திடீரென இன்னும் இரண்டு தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என வதந்திகள் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ நிர்வாகம், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தான் தேர்வு முடிவுகள் பற்றிய அறிவிப்பு வரும் எனவும், அதுவரை எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளது.